இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் “ஹைட்ரோ கார்பன்” ஆய்வுக் கிணறுகள் தோண்ட, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்“ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இராமநாதபுரம், சிவகங்கை இரு மாவட்டங்களில் “ஹைட்ரோகார்பன்” ஆய்வு கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறவும் வைகை பாசன படுகை இரு மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டுமென என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டு கொள்கிறேன்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, இராமநாதபுரம் மாவட்டத்தில் “ஹைட்ரோகார்பன்” திட்டத்திற்காக மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் மூலம் 1403.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. கடந்த 31.10.2023-ல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியதில் கடலாடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராஜசிங்கமங்கலம், திருவாடானை வருவாய் வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வருவாய் வட்டமும் இதில் அடங்கும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4068.31 சதுர கிலோ மீட்டரில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அதாவது 1403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு “ஹைட்ரோகார்பன்” திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் நெல், மிளகாய், உளுந்து, பாசிப் பருப்பு,கம்பு, கேழ்வரகு போன்ற உணவுப் பொருட்களும் பருத்தியும் விளைகின்ற வேளாண் நிலங்கள் 1259.44 சதுர கிலோ மீட்டரும்,143.97 சதுர கிலோ மீட்டர் ஆழமற்ற மீன்பிடி கடல் பகுதிகளுமாகும்.
தமிழ்நாட்டில் “ஹைட்ரோகார்பன்” திட்டங்கள் ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனிச்சியம், பேய்க்குளம், கீழச்செல்வனூர், வேப்பங்குளம், பூக்குளம், சடையநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடியேந்தல், கடம்போடை, நல்லிருக்கை, அரியகுடி, இரா.காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், அலமனேந்தல், சீனங்குடி,அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, மணக்குடி ஆகிய இடங்களில் “ஹைட்ரோ கார்பன்” திட்டப்படி 20 ஆய்வுக் கிணறுகளைத் தோண்டுவதற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (O.N.G.C) மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (S.E.I.A.A) 11.3.2025 அன்று அனுமதியளித்துள்ளது.
சுற்றுச் சூழல் ஆணைய அனுமதியின்படி 1,403 சதுர கி.மீ பரப்பளவில் 20 ஆய்வுக் கிணறுகளைத் தோண்ட O.N.G.C-க்கு ஒப்புதல் கிடைத்ததை, ஆணையம் ஒரு தொழில்நுட்ப ஒப்புதலாக கருதலாம், ஆனால் மக்களை பொருத்தமட்டில் இந்த வேளாண்மை நிலப்பரப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட இராமநாதபுரம் மாவட்ட மக்களின் மண், நீர் மற்றும் உயிர் வாழ்வுக்கு எதிரானவோர் நடவடிக்கையாகும், தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஹைட்ரோகார்பன்” ஆய்வுக்கு எதிரான ” உறுதியான கொள்கை நிலைப்பாட்டை ” கொண்டிருப்பதாகவும் சுற்றுச் சூழல் ஆணைய அனுமதி திரும்பப் பெறப்படும் எனவும் அறிவித்தார்.
இருப்பினும், அனுமதி திரும்பப் பெறப்பட்டது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது இரு மாவட்ட மக்களுக்கும் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு சில இடங்களில் தொடக்கக் கட்ட பணிகளைச் செய்ய முற்பட்டு மக்களின் பெரும் எதிர்ப்பு காரணமாக தற்போது பணிகளை ஒத்தி வைத்துள்ளது.
“ஹைட்ரோகார்பன்” ஆய்வுகளால் நிலத்தடி நீர் மாசுபாடு, மண் வள இழப்பு மற்றும் நிலம் தாழ்தல் போன்ற கடுமையான அபாயங்களுடன் பேரழிவு ஏற்படும் என 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் “ஹைட்ரோகார்பன்” திட்டங்களுக்கான நிபுணர் குழு அறிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆய்வு கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ள பகுதியில் பறவைகள் சரணாலயம், வைகை ஆறு, கண்மாய்கள், பல்லுயிர் பெருக்கக் காப்பகம் இருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவில் வாழும் 4,000 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு பவளப்பாறைகள் மற்றும் கடல் புல் படுகைகள் முதுகெலும்பாக உள்ளது. ஏற்கனவே வெளிர் நிறமாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக பவளப்பாறைகள் குறைந்து வரும் நிலையில் கடலியல் ஆய்வு ஆவணங்களின்படி, 3,000 மீட்டர் ஆழம் வரைக் கடலில் கனரக இயந்திரங்களால் துளையிடும் போது வெளியேற்றப்படும் சேறுகள் மற்றும் ஒலி மாசுபாடுகளால் பல்லுயிர் பெருக்கமும் பவளப் பாறைகளின் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாவதோடு கடலின் உணவுச் சங்கிலியும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரும் இழப்புக்குள்ளாக நேரிடும் என இருமாவட்டங்களின் மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது ஓ.என்.ஜி.சியின் இத்திட்டம்.
காவிரிப் படுகை மாவட்டங்களில் “ஹைட்ரோ கார்பன்” ஆய்வுக்கான அனுமதியை நீக்கம் செய்துவிட்டு, அதே ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதே இயந்திரங்களையும் அதே இரசாயனங்களையும் பயன்படுத்தி வைகைப் படுகையான இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதால் வைகைப் பாசன பகுதி மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.
2021-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் “ஹைட்ரோகார்பன்” ஆய்வு மற்றும் உற்பத்திகளை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அறிவித்ததை உறுதிபடுத்தும் வகையில் மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓ.என்.ஜி.சிக்கு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற்றிடவும் காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது போல், வேளாண்மையையும் கடல்சார் தொழிலையும் பெரிதும் நம்பியிருக்கும் இராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.


