திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றிருக்கும் இந்த சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்” என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

