எனக்கு யாரும் போட்டியில்லை; எனக்கு நானே போட்டி: சீமான்
நாம் தமிழர் கட்சி யாரையும் நம்பி இல்லை. எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சி யாரையும் நம்பி இல்லை. எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி. நான் யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன். எனது இலக்கு நாடாளுமன்றம் இல்லை. தமிழ் தேசம், தமிழ்நாடு தான் எனது கனவு. ராமஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு, அவரை எதிர்த்து திமுக, உதயசூரியன் சின்னத்தில் நின்றால் திமுகவை நாம் தமிழர் கட்சி அந்த தொகுதியில் மட்டும் ஆதரிக்கும்.
இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக அண்ணா பிறந்த நாளான்று விடுவித்தால் 40 தொகுதிகளில், திமுக போட்டியிடும் தொகுதியில் மட்டும் நாதக தனது வேட்பாளர்களை திரும்ப பெற்றுக்கொள்ளும். ஆனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன், ஏனென்றால் அந்தக் கட்சி என் இனத்தை கொன்று குவித்த கட்சி. அதிமுக, திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை. திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இருப்பது சகோதர யுத்தம். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்துவந்தவன் நான். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் கனவு.
உலகத்தில் எந்த நாடுடன் வேண்டுமானாலும் இந்தியா பகை நாடாக இருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷூடன் பகையாக இருந்திருக்க கூடாது. இருநாடுகளும் இந்தியாவின் மகன், பேரன். பங்களாதேஷ் பிறக்கும்போது பாகிஸ்தான் தாய்க்கு பிரசவம் பார்த்த தாய் இந்தியா” என்றார்.