நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு மகளை தந்தை கொலை செய்த வழக்கில்
கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

காதலுக்கு தடையாக இருந்த மகளை தந்தை கொன்ற வழக்கில் கொலை செய்யத் தூண்டிய கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
முன்னீர்பள்ளம் அருகே பூக்குழி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை என்ற ஜோய். இவரது மனைவி பேச்சியம்மாள் (42). பேச்சியம்மாளின் வீட்டிற்கு எதிர் வீட்டில் அவரது சகோதரர் மணிகண்டனும், தந்தை பெருமாளும் வசித்து வந்தனர். பேச்சியம்மாளுக்கு 31 வயது இருக்கும்போது அவரது தாயார் காலமானார்.
இந்த நிலையில் பெருமாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (50) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பேச்சியம்மாள் தனது தந்தை பெருமாளை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் மாரியம்மாளுடனான தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சியம்மாள் மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாரியம்மாள் அவருடைய தந்தையை வைத்து அவரை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 தேதி இரவு மாரியம்மாளின் வீட்டிற்கு புறப்பட்ட தந்தையை பேச்சியம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மகளை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் போலீசார் கொலை செய்த பெருமாளையும், கொலை செய்ய தூண்டிய மாரியம்மாளையும் கைது செய்து நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பெருமாள் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து மாரியம்மாளின் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடந்த இந்த விசாரணையில் மாரியம்மாள் குற்றவாளி என நிரூபணமானது.
அதையடுத்து நீதிபதி மாரியம்மாளுக்கு கொலை செய்ய தூண்டியதற்காக ஆயுள் தண்டனையும், ரூ1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.