திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


திருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்களையும் காவிரி டெல்டா பாசனப்பகுதியாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக இக்கோரிக்கையை முன்வைத்து, அறவழியில் பல போராட்டங்களை நடத்திய விவசாயிகள், தங்களின் நிலங்கள் டெல்டா பாசனப்பகுதியில் சேர்க்கப்பட்டால் மட்டுமே விவசாயத்திற்கு தேவையான நீர்வழங்கல் மற்றும் நலத்திட்டங்களில் முழு பயன் கிடைக்கும் என்று வலியுறுத்தி வந்தனர்.
அவர்களின் மனவேதனையைக் கவனித்த மாநில அரசு, கடந்த ஜூலை மாதம் கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் திருமுட்டம் வட்டத்தின் 38 கிராமங்களும் டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால், திருமுட்டம் வட்டத்தின் அனைத்து 38 கிராமங்களும் அதிகாரப்பூர்வமாக காவிரி டெல்டா பாசனப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்திருப்பது அந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


