வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும், புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார்