தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்தி அறிக்கை வருமாறு,

உயர்கல்வித் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர், “துணைவேந்தர்கள் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-லிருந்து 5 ஆக அதிகரிக்க ஆளுநருக்குக் கோரிக்கை வைத்துள்ளோம்; ஆளுநர் ஏற்றுக் கொண்டால் சிக்கல் தீர்ந்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, போகக் கூடாத ஊருக்கு வழி காட்டும் செயல் என்பதுடன், துணைவேந்தர் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல் என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு
அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், “இன்றைய நிலையில் துணைவேந்தர் நியமனத்திற்குத் தடையாக இருப்பது தேடல்குழுவின் எண்ணிக்கை அல்ல. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா? என்பதுதான் தற்போதைய முக்கியப் பிரச்சினை. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது. வழக்கில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர அதிக வாய்ப்புகள் உள்ள சூழலில், இந்த விவகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குத் பின்னோக்கி இழுத்துச் சென்று, எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கை என எச்சரிக்கை
தேடல்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்துவது தேவையற்றது மட்டுமின்றி, சட்டவிரோதமும் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தனித்தனிச் சட்டங்களின்படி அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க முடியும் என விளக்கியுள்ளார். அதை விடுத்து யுஜிசி பிரதிநிதியையோ, வேறு உறுப்பினர்களையோ சேர்ப்பது பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்பதால், இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, துணைவேந்தர் நியமனம் மேலும் பல ஆண்டுகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
“யுஜிசி பிரதிநிதி தேவையில்லை”
தமிழகப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத புதிய சிக்கல்களையே ஏற்படுத்தும் என்பதால் அது தவிர்க்கப்பட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
அரசுக்கு பாமக விடுத்துள்ள கோரிக்கை
தமிழகத்தில் மொத்தம் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்கள் தற்போது துணைவேந்தர்கள் இன்றித் தவித்து வருகின்றன. அவை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ‘வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல’ விரைவில் சட்டத் தீர்வு கிடைக்கவுள்ள நிலையில், அரசு புதிய சிக்கலை ஏற்படுத்தக் கூடாது. எனவே, தேடல்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும். மாறாக, வரும் 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கை திறம்பட நடத்தி, துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
