இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, இன்றைய தேதியுடன் சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது.
சாதாரணமாக இந்த காலகட்டத்தில் சென்னைக்கு 273.4 மில்லி மீட்டர் மழை பொழிய வேண்டும். ஆனால், இன்றுவரை மொத்தம் 319.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மழை அளவு 17% அதிகரித்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வரை சென்னையில் 4% குறைவாகவே மழை பதிவாகியிருந்தது. ஆனால், ஒரே நாளில் பெய்த கனமழையால், குறைவாக இருந்த அளவு தற்போது கூடுதலாக மாறியுள்ளது. இதேபோல், மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றுவரை பருவமழை 9% கூடுதலாக பெய்துள்ளது.
சாதாரணமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 185.6 மில்லி மீட்டர் மழை பொழிய வேண்டும். ஆனால், தற்போது 201.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.