ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு
ஆவடி சார் பதிவாளர் அலுவலகங்களில் தரகர்கள் தலையீடு, அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகு முறையை மக்களோடு மக்களாய் சென்று ஆய்வு செய்த பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு.
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் சந்திக்கும் இடையூறுகள் அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார்பதிவாளர் அலுவலகங்களில் சமீபகாலமாக திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார், திருவள்ளூர் / ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே நின்று இடைத்தரகர்கள் யாரேனும் பதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசுகின்றனரா என்பது குறித்து 15 நிமிடங்கள் பொதுமக்களோடு பொதுமக்களாய் வெளியே நின்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே சென்று பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்து சார்பதிவுத்துறை அலுவலர்கள் தவிர வேறு எந்த தனிநபரும் இருக்கின்றனரா என்பது குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும் சார்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் பொது மக்களின் டோக்கன்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சென்று ஆய்வு மேற்கொண்ட பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். . கடந்த மாதம் பூந்தமல்லியில் ஆய்வு மேற்கொண்ட போது சார்பதிவாளர் அலுவலகங்களில் அலுவலகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் அலுவலக மேசையில் இருக்கும் கோப்புகள் உள்ளிட்டவற்றை கையாண்டதை கண்ட துறை தலைவர் சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது