முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் பொது சுகாதாரத்துறை வழங்க உள்ளது எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வருமுன் காப்போம் திட்டத்தின் மாதிரி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வரும் முன் காப்போம் என்ற மருத்துவ முகாம் திட்டம், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், “கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்’ என்ற பெயரில் ஆண்டுக்கு 1250 மருத்துவ முகாம்களுடன் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
5654 மருத்துவ முகாம்கள் இதுவரை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இதுவரை 52 லட்சத்து 82 ஆயிரத்து 7 பேர் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்றார். தமிழக மக்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனையை எளிமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்துள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளாா். அந்த திட்டத்திற்கு புதிய பெயர் விரைவில் சூட்டப்பட உள்ளது எனவும் கூறினார்.சென்னையில் இருந்து விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ள திட்டத்தின்படி முழு உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த 30 வகை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கலைஞர் முதல்வராக இருந்த போது கொடுத்த காப்பீடு திட்ட அட்டையை மருத்துவ முகாம்களின் மூலம் புதுப்பித்துக் கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். 1256 மருத்துவ முகாம்கள் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள மருத்துவ முகாம்களின் மாடல் மருத்துவ முகாமை சைதாப்பேட்டையில் தற்போது துவக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அரசின் சார்பில் ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் பொது சுகாதாரத்துறை வழங்க உள்ளது என அமைச்சர் கூறினார். மொத்தமாக 25 கோடி ரூபாய் செலவில் 1256 மருத்துவ முகாம்கள், முழு உடல் பரிசோதனைக்காக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.முதலமைச்சர் காப்பீடு அட்டையை வைத்து, பிரதம மந்திரி காப்பீடு அட்டையை தமிழகத்தில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் கருத்துக்கு, பதில் அளித்த மா. சுப்பிரமணியன்,
பிரதம மந்திரி காப்பீடு மூலம் வழங்கப்படும் தொகை என்பது ஒரு லட்ச ரூபாய் மட்டும் தான் என்றும் ஆனால் முதலமைச்சர் காப்பீடு அட்டை மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் வரை பொதுமக்கள் பயன் பெற்று வருகிறார்கள் என தெரிவித்த மா. சுப்பிரமணியன் பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் மூலம் பெரிய அளவிற்கு பயனில்லை என்றார். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் காப்பீடு மூலம் அதிகம் பணம் செலவழிக்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.