இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களில் போர் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து, ஊடகவியலாளர் நிரஞ்சன்குமார் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக காஷ்மீர், ராஜஸ்தான் போன்ற இடங்களில் பதற்றமான நிலை உள்ளது. பகல்காம் தாக்குதலுக்கு இந்தியா இப்படி ஒரு பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் தரப்பு உணர்ந்திருக்கிறது. அதேபோல், ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்பதை இந்தியாவும் உணர்ந்துள்ளது. இதற்கு பின்னர் நடக்கப்போகிற விஷயத்திலும் அவர்கள் அதிக விழிப்புடன் உள்ளனர். பதிலடி கொடுக்க இந்தியா 10 நாட்கள் எடுத்துக்கொண்ட போது அவர்கள் எல்லைப் பகுதிகளில் தயார் நிலைக்கு ஆக தொடங்கினார்கள். அதனால்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அவர்களும் தயார் நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் போர் விவகாரத்தை தமிழ்நாட்டு ஊடகங்கள் கையாண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கராச்சி துறைமுகத்தை இந்திய படைகள் தாக்கிவிட்டதாக ஊடகங்களில் சொல்கிறார்கள். ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்னதாக பாதுகாப்புத்துறை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆனால் அது குறித்து யாரும் பேசவில்லை. இந்தியா தரப்பில் அவ்வாறு தாக்குதல் நடத்தி இருந்தால் சொல்லி இருப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. அதேபோல் பாகிஸ்தான் வீதிகளில் ரத்த ஆறு ஓடுகிறது என்று இங்குள்ள ஊடகங்கள் சொல்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் பதுங்கு குழியில் பதுங்கினார். இப்படி தவறான செய்திகளை போடுவதன் மூலமாக அவர்கள் இந்திய அரசை தான் அசிங்கப்படுத்துகிறார்கள். இந்திய அரசு நாங்கள் பொதுமக்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தவில்லை. தீவிரவாத முகாம்கள் மீது மட்டும்தான் தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தானில் ரத்த ஆறு ஓடுகிறது என்று செய்தி போடுகிறார்கள் என்றால்? இந்திய படைகள் பொது மக்களை தாக்குகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் போடுகிறார்கள். நாளைக்கு ஐ.நா. சபை போன்ற இடங்களுக்கு புகார் செல்கிறபோது கராச்சி துறைமுகத்தை தாக்குவதை இந்திய ஊடகங்களே சொல்கின்றன பாருங்கள் என்பார்கள்.
வடஇந்தியாவில் இருக்கிற முன்னனணி செய்தி நிறுவனம். அவர்கள் போலியான செய்தியை வெளியிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டு மறுப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களை செய்யாதீர்கள் என்று சொல்கிறார்கள். வடஇந்தியாவில் உள்ள ஊடகங்கள்தான் விதிமீறலில் ஈடுபடுகிறார்கள் என்றால்? தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு என்ன ஆனது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களை வெல்லும் என்று அனைத்து வடஇந்திய ஊடகங்களும் சொன்னார்கள். ஆனால் என்ன நடைபெற்றது.. அவர்களது நம்பத்தனமை என்பது எந்த அளவுக்கு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்ப்பில் வரும் வீடியோக்கள், பப்ஜி விளையாடும் வீடியோ காட்சிகளை எல்லாம் பயன்படுத்துகிறார்கள். லாகூர் வான்பாதுகாப்பு கட்டமைப்பை செயல் இழக்க செய்துள்ளோம் என்று அரசு தெரிவித்துள்ளது. லாகூர் விமான நிலையத்தில் பொது போக்குவரத்தை ரத்து செய்யாமல் அங்கிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பொதுமக்களை பணயக் கைதிளாக வைத்து போர் நடத்துகிறார்கள்.
போரை கொண்டாடுகிற மனநிலைக்கு மக்கள் செல்வதற்கு காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளாகும். அந்த மனநிலைக்கு ஏற்ப ஒரு திரைப்படம் போலவே இந்த காட்சிகளை கொண்டு செல்கிறார்கள். வைப் மோடு என்று சொல்கிறார். வைப் என்பது கொண்டாட்ட மனநிலையை குறிப்பதாகும். போர் என்பது எவ்வளவு கொடூரமானதாகும். தமிழ்நாட்டில் போர் பாதிப்பு என்பது நேரடியாக கிடையாது. ஆனால் வடஇந்தியாவில் அவர்களுக்கு தொடர்ந்து அந்த பிரச்சினை இருந்துகொண்டுள்ளது. கார்கில் போர், சீன யுத்தம், தேசப் பிரிவினை என்று அவர்களுக்கு இன்னும் ஆராத வடுக்களாக உள்ளன. 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு நான் சென்றுள்ளேன். அதெல்லாம் அவ்வளவு கொடூரமான நிகழ்வுகளாகும். சக மனிதர்களின் துயரங்களை பார்ப்பவர்களுக்கு, போரை ஒரு வைபாக சொல்ல மாட்டார்கள். போர் என்றாலே இழப்புதான்.
இந்த வீடியோக்களை பார்த்த பின்னர் ராணுவத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு பதறுவார்கள். அவர்கள் வீட்டு பிள்ளைகள் தூங்கி இருப்பார்களா? ஏதோ சின்ன யூடியூபர்கள் வாழ்வாதாரத்திற்காக தவறான செய்திகளை தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவு பெரிய செய்தி நிறுவனங்களுக்கு என்ன வந்தது? போலி செய்திகளை தவிர்க்க ட்விட்டரில் சுபேர் போன்று ஒரு சிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை பொருத்தவரை போர் செய்திகள் தொடர்பாக தொலைக்காட்சிகளை தயவு செய்து பார்க்காதீர்கள். மறுநாள் நாளிதழ்களில் வரும் செய்திகளை பார்த்து போர் நிலவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சென்று பாருங்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.