பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.
அதில் வழக்கறிஞா் கோபால் சங்கர் நாராயணன் தெரிவித்த கருத்து

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை இருக்கும் நிலையில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முன்பாக 10 தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றது. ஆனால் இவ்வளவு நாள் செய்யாமல் தற்போது இந்த தேர்தலின் போது இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஏன் மேற்கொள்கிறது? என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியே இந்த வாக்காளர் திருத்தத்தை செய்வது கட்டாயம் தேவை என்றாலும் கூட அதில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக் கூடாது.ஆனால் திரைத்துறை, சினிமாத்துறை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இது நிச்சயமாக தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்முறையாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாா்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக வைத்துள்ள வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. புதிதாக 11 குடியுரிமை ஆவணங்களை வெளியிட்டு, அதனை தாக்கல் செய்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்யும் போது கேட்கப்படும் ஆவணங்கள் நடைமுறைக்கு மாறாக உள்ளது என்று வழக்கறிஞா் கோபால் சங்கர் நாராயணன் தெரிவித்தாா்.
வழக்கறிஞா் கபில் சிபல்:- வழக்கறிஞா் கபில் சிபல் வாதிடும் போது, ஒருவர் இந்திய குடிமகனா? இல்லையா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் தற்போது பீகார் மாநில விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்து திருத்தம் செய்து வருகிறது. இந்திய குடிமகன் என்பதற்கான முக்கிய அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நிராகரித்திருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தின் வரம்புகளுக்கு மீறியது என்று கூறினாா்.
நீதிபதி கேள்வி
குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய முடியும். ஆதார் அட்டையை ஏற்க முடியாது என்றால் ஏன் குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டது. முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கி இருக்க வேண்டியதானே என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. மேலும், வாக்களிப்பதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்று தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நீதிபதிகள் கருத்து
இந்த நடைமுறையை நீங்கள் செய்ய விரும்பினால், தேர்தல் நடைமுறைகளில் இருந்து தனியாக இதை செய்யலாமே. அதை தவிா்த்து தேர்தல் நடைபெற உள்ள காலத்தில் ஏன் குழப்ப வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி
தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது. வாக்காளர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது. 18 வயதுக்குக் குறையாத குடிமகனாகவும், சட்டத்தால் தடை செய்யப்படாதவராகவும், தகுதி நீக்கம் செய்யப்படாதவராகவும் இருக்கும் ஒவ்வொரு நபரும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு என்று வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்தாா்.
தேர்தல் ஆணையம் :
இந்த Special Intensive Revision நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்பட உள்ளது என தோ்தல் ஆணையம் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்று தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளித்துள்ளனா்.
தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி:-
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போது இந்த தீவிர சரிபார்ப்பினை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
தேர்தல் இல்லாத நேரங்களில் இதனை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே?
பீகார் தேர்தல் விவகாரத்தில் ஏன் குடியுரிமை பிரச்சனையை கொண்டு வருகிறீர்கள்?
அது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடியது. நீங்கள் எழுப்பக்கூடிய பிரச்சனை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தொடர்புடையது. இரண்டும் வெவ்வேறு அதிகார வரம்புக்குள் வரக்கூடியவை. இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
நீதிபதிகள்
தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடத்தும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும், பீகாரில் திடீரென தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையையும்,
தீவிர வாக்காளர் சரிபார்ப்பு நடைபெறும் நேரத்தையும் மனுதாரர்கள் எதிர்க்கின்றனர் என்றனா். இவ்வாறு நீதி மன்றத்தில் இன்று வாதம் நடைப்பெற்றது.
கோவில் பணத்தில் கல்லூரி! முழு சங்கியாக மாறிய எடப்பாடி! கொதித்தெழுந்த ராஜகம்பீரன்!