ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி, இவரது மகன் தீனதயாளன் (23) இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த லாஜியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. லாஜியா பியூட்டி பார்லர் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நிலையில் தீனதயாளன் – லாஜியா தம்பதி இருவரும் தனிக்குடித்தனம் இருந்து வந்துள்ளனர்.
அப்பொழுது இருவரும் இடையே சிறு சிறு காரணங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட துவங்கியது. இதனால் காதலி லாஜியா அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இது காதலன் தீனதயாளனுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தீனதயாளன் மனைவி லாஜியா விடம் கடந்த 2ம் தேதி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. அப்பொழுது காதல் மனைவி நீ எனக்கு வேண்டாம் நான் தாய் வீட்டிற்கு போகிறேன் என கூறி பட்டாபிராம் சேக்காடு கோபாலபுரம் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற தீனதயாளன் மனைவி லாஜியாவிடம் மன்னிப்பு கேட்டு இனி இது போன்று நடந்துகொள்ள மாட்டேன் மன்னித்து விடு என கெஞ்சி உள்ளார்.ஆனால் லாஜியா இதனை ஏற்க மறுத்து தீனதயாளனை திட்டி உதாசீனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீனதயாளன் காதலி லாஜியா வீட்டிலிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வரும் வழியில் உள்ள சேக்காடு ஆவடி மாநகராட்சி சுரங்கப்பாதை மீது ஏறி அப்பெண் வசிக்கும் வீடு எதிரில் நின்று மனைவி லாஜியாவை இறுதியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது, அப்பொழுது காதலி தீனதயாளன் மேம்பாலம் மீது நிற்பதை பார்த்தபடி செல்போனில் பேசியுள்ளார்.
அப்பொழுது திடீரென தீனதயாளன் மேம்பாலம் மீதிருந்து வாகனம் செல்லக்கூடிய பாதையில் குதித்துள்ளார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டுள்ளனனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 5ம் தேதி தீனதயாளன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார் தீனதயாளன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணமான சில மாதங்களில் கணவன் மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.