அதிமுகவை கைப்பற்றும் எஸ்.பி.வேலுமணியின் முயற்சியை, எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக முறியடித்து விட்டார். அதற்கு காரணம் தற்போதைக்கு அதை செய்ய பாஜக அனுமதிக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பாஜக – எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் குறித்தும், தலைமை பொறுப்பை கைப்பற்ற வேலுமணி முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நான் கவனித்தவரை எடப்பாடி பழனிசாமி தற்போது போரிடும் ஒரு மனநிலையில் தான் இருக்கிறார். உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று சொன்னார். அந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் வரவில்லை. அடுத்தபடியாக அமித்ஷா தமிழக சுற்றுப்பயணத்தை அறிவிக்கிறார். அதேநாளில் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை அறிவிக்கிறார். அப்போது, அமித் ஷா வந்தால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்க கூடாது என்பதுதான் அவருடைய திட்டமாகும்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஒரு கிலோ தங்க வேலை வழங்கிய வேலுமணி தான், எடப்பாடி பழனிசாமியின் கோவை சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கிறார். அதேபோல், வேலுமணிக்கு அனைத்துமாக இருந்து உளுந்தூர்பேட்டை கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்த சி.வி.சண்முகம்தான், விழுப்புரம் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கிறார். வேலுமணி போய் பார்த்த பின்னர்தான் அமித்ஷா பேட்டி அளிக்கிறார். அது தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிகைகளில் வெளியானது. அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று அமித்ஷா சொன்னார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுற்றுப் பயணத்தின்போது அதிமுக – பாஜக கூட்டணி நட்புணர்வோடுதான் இருக்கிறது. அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அதிமுக அடிபணியாது என்று சொன்னார். இதன் மூலம் அதிமுக – பாஜக இன்னும் ஒன்றாகவில்லை. அன்வர் ராஜாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. அது ஒருபோதும் முடியாது. அதிமுகவை உடைக்க பாஜக முயற்சித்தது. ஷிண்டேவாக வேலுமணியை கொண்டுவந்து பாஜக முன்னிறுத்தியது. அந்த ஷிண்டேவை, எடப்பாடி பழனிசாமி பெண்டை கழற்றிவிட்டார்.
வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மீது காஃபிபோசா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இருந்து அண்ணனை காப்பாற்றுவதற்காக முயற்சியாக வேலுமணி இதை செய்தார். வேலுமணி எந்த அளவுக்கு சென்றார் என்றால், சசிகலா, ஓபிஎஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வைத்திலிங்கம் போன்றவர்களை ஒருங்கிணைத்து, அதிமுகவை கைப்பற்றுவது என்றும், வேலுமணி முதலமைச்சர் ஆவது என்றும் முடிவு செய்யப்பட்டது. வேலுமணி தலைமையில் இரண்டரை ஆண்டுகளும், பாஜக தலைமையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வது என்றும் திட்டமிட்டார்கள்.
தேர்தல் ஆணையத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை காண்பித்து மிரட்டி தான் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தது. எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணிக்கு சென்றாலும், அவர்களுடன் சண்டையை தொடர்ந்து வருகிறார். இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்வதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எவ்வளவு காலத்திற்கு விசாரிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கை எவ்வளவு நாட்களுக்குள் முடிவு எடுப்பீர்கள் என்று எழுத்துப்பூர்வமான வாதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் எடப்பாடிக்கு, மாற்று ஏற்பாடாக தான் செங்கோட்டையன், வேலுமணி உள்ளனர். வேலுமணி ஒரு வெற்றிகரமான திட்டமாக இருந்தார். ஆனால் எடப்பாடி அதை முறியடித்துவிட்டார். அதே வேலுமணியை வைத்து தான் தற்போது கோவையில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்களையே கூட்டிவிட்டார். அதில் 25 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அவர்களை வேலுமணி கொண்டு போயிருந்தால், எடப்பாடி இன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்க மாட்டார். அவரை பொறுமையாக இருக்க சொன்னது பாஜக தான். ஆனால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த முடிவை பாஜக எடுக்கலாம். அதை எதிர் கொள்வதற்கு எடப்பாடி தயாராகவே உள்ளார்.
வேலுமணியிடம், கட்சியை விட்டு செல்வதென்றால் போகலாம், தன்னால் கட்சியை பார்த்துக்கொள்ள முடியும் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். இவர்களுக்கு இடையிலான மோதலில் கோவை சுற்றுப்பயணத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுவிட்டார். அது எப்படி என்றால் வேலுமணிக்கு, பாஜக சிக்னல் கொடுப்பதற்கு தயாராக இல்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் உச்சபட்ச இலக்கு என்பது அதிமுகவின் வாக்கு வங்கியை கைப்பற்றுவது தான். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு ஆகும்.
அதிமுக என்கிற கட்சி மெல்ல உதிர்ந்து போக வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அதற்கு பாஜக சொல்வதை கேட்கிற வேலுமணி, சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்கள் தான் தேவை. எடப்பாடி பழனிசாமி, அன்வர்ராஜா போன்றவர்கள் எல்லாம் அதிமுகவின் தனி அடையாளத்தை தொடர வேண்டும் போராடுகிறார்கள். அவர்கள்தான் பாஜகவின் எதிரிகள் ஆவார். இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் தற்போதைக்கு எடப்பாடியை பாஜக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் எடப்பாடி தப்பியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.