spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2026-இல் ஆட்சி அமைப்பது யார்? சத்தியம் டிவி கருத்து கணிப்பு முடிவுகள்!

2026-இல் ஆட்சி அமைப்பது யார்? சத்தியம் டிவி கருத்து கணிப்பு முடிவுகள்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும். யார் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து சத்தியம் டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

we-r-hiring

முதலமைச்சரின் செயல்பாடு எப்படி உள்ளது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு எப்படி உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகச் சிறப்பாக உள்ளது என்று 13 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக 31 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதேவேளையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் சுமார் என்று 42 சதவீதம் பேரும், மோசம் என்று 11 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவராக யாருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது ?

எதிர்க்கட்சி தலைவராக யாருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 56 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 23 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். தவெக தலைவர் விஜய்க்கு 8 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் 13 சதவீதம் உள்ளனர்.

பெண்களிடம் ஆதரவு மிக்க கட்சி யார்?

திமுக - அண்ணா அறிவாலயம்

திமுகவுக்கு பெண்களின் ஆதரவு பல இடங்களில் பெரிதாக எதிரொலிக்கிறது. திமுகவுக்கு 42 சதவீதம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு 31 சதவீதம் பெண்களும், தவெகவுக்கு 17 சதவீதத்தினரும், நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவை 6 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக ஆட்சியில் கொண்டு வந்த பெண்கள் நலத்திட்டம் இதற்கு மையக் காரணம். இளம் பெண்களின் ஆதரவை திமுகவும், தவெகவும் கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?

விஜய்

சத்தியம் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஒட்டுமொத்த ஹீரோவாக விஜய் இருக்கிறார். 39 சதவீத வாக்குகள் அவர் பெறுகிறார். திமுகவை 26 சதவீதம் பேரும், அதிமுகவை 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரித்துள்ளனர். நாதக 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 18 முதல் 30 வயது வரையிலான இளைய தலைமுறை ஆதரவில் தவெக 30 சதவீதம், திமுக 28 சதவீதம், நாதக 18 சதவீதம் என மூவருக்கும் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவு யாருக்கு?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு விழும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு 20 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் அதிமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதம் பேர் ஆதரவளிக்கின்றனர். எஞ்சிய 58 சதவீதம் பேர் அதிருப்தியில் இருப்பதாகவும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த 58 சதவீதம் பேரின் வாக்குகள் யாருக்கு செல்கிறது என்பதை பொறுத்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2026 தேர்தலில் X பேக்டர் யார்?

2026 தேர்தலில் எக்ஸ் பேக்டராக விஜய் திகழ்கிறார். இவர் யாருடைய வாக்குகளை பிரிக்கப் போகிறார் என்பதை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறுவது நிச்சயம். சத்யம் டிவி சர்வேயின்படி ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகளை விஜய் பெரிதளவு பிரிக்கிறார். அதிமுக உடன் விஜய் கைகோர்த்தால் பெரிய அளவில் வெற்றி நிச்சயம். இரு தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்காதது, திமுகவுக்கு பெரிய பிளஸ்.

யார் முதலமைச்சராக வர வேண்டும்?

2026-இல் முதலமைச்சராக யார் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று மக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக வர வேண்டும் என்று 39 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று 13 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவளிக்கின்றனர். மற்றவர்கள் என்று 5 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல், தற்போது தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக கூட்டணி என்று 39 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று 35 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று 6 சதவீதம் மக்கள் வாக்களித்து உள்ளனர்.

மண்டல வாரியாக வெற்றி யாருக்கு?

chennai voters

சத்தியம் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் மண்டலங்கள் வாரிய யாருக்கு செல்வாக்கு உள்ளது? என்று நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பில், வடக்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 53 தொகுதிகளில் திமுகவுக்கு 26 தொகுதிகளும், அதிமுகவுக்கு 16 தொகுதிகளும் கிடைக்கும். 11 தொகுதிகளில் இழுபறியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் திமுகவுக்கு 18 தொகுதிகளும், அதிமுகவுக்கு 38 தொகுதிகளும் கிடைக்கும் என்றும், 5 தொகுதிகள் இழுபறியாக செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்டா மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் திமுகவுக்கு 31 தொகுதிகளும், அதிமுகவுக்கு 8 தொகுதிகளும் கிடைக்கும். 7 தொகுதிகள் இழுபறியாக செல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் திமுகவுக்கு 22 தொகுதிகளும், அதிமுகவுக்கு 25 தொகுதிகளும், இழுபறியாக 11 தொகுதிகளும் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவிற்கு 8 தொகுதிகளும், அதிமுகவிற்கு 3 சட்டமன்ற தொகுதிகளிலும், 5 தொகுதிகள் இழுபறியில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் வெல்லப் போவது யார்?

சத்தியம் தெலைக்காட்சி நடத்திய மெகா சர்வேயில் திமுக கூட்டணிக்கு 105 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 90 இடங்களும் கிடைக்கும் என்றும், இழுபறியாக 39 இடங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 25 இடங்களில் திமுகவும், 14 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன. இந்த 39 தொகுதிகள் யார் பக்கம் செல்கிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ