ஓபிஎஸ் பாஜகவை நம்பியதால், அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலை வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து வரும் நிலையில், இதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகளில் ஏற்படும் மாறுதல் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ், பிரேமலதா, வைகோ போன்ற தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியுள்ளனர். திமுக அரசு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்கிற நிலை இருக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவுக்கும், அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளன. தமிழகத்தை காப்போம் என்று சொல்கிற எடப்பாடியால் கட்சியை காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் கள எதார்த்தமாக உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஒபிஎஸ் விலகியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு பெரிய தலைவராகி விட்டதாக கற்பனை செய்து கொள்கிறார். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று சொல்கிறபோது, அவரை மக்கள் யாரும் நம்பவில்லை. பல இடங்களில் அதிமுக மூன்றாவது இடத்தை தான் பிடித்தது.
ஒரு தேசிய கட்சியோடு திமுக, அதிமுக என 2 கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இவர்களை போன்று சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கிடப்பது கிடையாது. முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேர்வு செய்யும் என்று சொல்கிற அளவுக்கு மோசமாகி விட்டார்கள். ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை இழந்துவிட்டு வந்துள்ளார். திமுகவிடம் சரணடைந்து உள்ளார். அவர் பாஜகவை நம்பினார். அதனால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. அவருடைய நிலைமை தான் நாளைக்கு எடப்பாடிக்கு வரும்.
மதிமுக உடன் சந்திரபாபு நாயுடு மூலம் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஆனால் கூட்டணி அமைய இன்னும் காலம் கனியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேற சரியான காரணங்கள் வேண்டும் என்பதற்காக வைகோ காத்திருக்கிறார். வைகோ, திமுக உடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து போட்டுவிட்டு அதிமுக கூட்டணிக்கு சென்றவர். அவர் எப்போது வேண்டுமானாலும், எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்வார் என்பது அவருடைய கடந்த கால வரலாறு ஆகும். எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து வந்தபோது, கடைசி வரை திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அதனால்தான் அதிமுக நின்றது. ஆனால் வைகோ அப்படி இருக்கவில்லை. எந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்தாரோ அந்த இடத்திற்கு மீண்டும் வந்து சரணடைந்தபோதே அவருடைய அரசியல் முடிந்துவிட்டது. அதனால் இந்த முறையும் அவர் சந்தேகத்திற்கு உரியவராகவே இருக்கிறார்.
தேமுதிக செய்த வரலாற்று பிழைதான், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வருவதற்கு காரணமாக அமைந்தது. திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தபோதே திடீரென அதிமுகவுக்கு சென்றுவிட்டனர். அதன் காரணமாக விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகிய போதும், 100 நாட்கள் கூட அது நிலைக்க வில்லை. அடுத்து மக்கள் நலக்கூட்டணியின் வாயிலாக திமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. 10 ஆண்டுகாலம் திமுக வனவாசம் போனதற்கு தேமுதிக காரணமாகும். விஜயகாந்த் இறப்பின் மூலம் ஏற்பட்ட அனுதாப அலை அரசியல் களத்தில் பெரிதாக எதிரொலிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கணக்கு போட்டார். அந்த கனவுதான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் கடைக்கண் பார்வை பட்டால் தான், தேமுதிகவுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்களாவது வரும். இல்லாவிட்டால் அந்த கட்சியை இழுத்து மூட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை ஆதரிக்கிறார். அதேவேளையில் அன்புமணி பாஜக அணியில் உள்ளார். தற்போது 2 கட்சிகளாக பாமக களத்தில் உள்ளது. நிறுவனர் ராமதாஸ் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது என்று சொல்கிற காலம் வரும். ராமதாஸ் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்துக் கட்சிகளும் திமுகவை நோக்கிய செல்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் ஒருவழி பாதையாக மாற்றிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி பெரிய கட்சி கூட்டணிக்கு வரும் என்று சொல்கிறார். எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு வந்த அன்வர்ராஜா போன்றவர்கள் இனி அதிமுக கரையேறாது என்று வெளியே போகிறார்கள். ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகள் விசுவாசமாக இருந்த ஓபிஎஸ் போன்றவர்கள் எல்லாம் அதிமுகவை விட்டு இடம் மாறுகிறார்கள். திசை மாறுகிறார்கள். அதிமுக தேர்தலுக்கு பின்னர் காலியாகும் என எதிர்பார்க்கும் நிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே காலியாகி விடும் என்பது போல உள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் அது தற்காலிகமானது தான். இன்றைக்கு திமுகவுக்கு அப்படி ஒரு நிலைமை உள்ளது. ஆனால் இது நிரந்தரம் என்று சொல்லிவிட முடியாது. பல பேர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருக்கும் திமுக தான் எதிரியாக உள்ளது. அண்ணாவை பேசிவிட்டு, அவர் உருவாக்கிய திமுகவை அழிப்பாரா? சினிமாவில் இருந்து ஓய்வுபெறும் வயசு வந்துவிட்டதால் விஜய் அரசியலுக்கு வருவதா? இளமை முழுவதும் சினிமாவில் கோடிகளில் புரண்டுவிட்டு, 50 வயதானதும் நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார உங்களை தமிழக மக்கள் விட்டு விடுவார்களா? இந்த மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தியுள்ளீர்கள். பாஜகவுக்கு எதிராக எத்தனை போராட்டம் நடத்தியுள்ளீர்கள். திமுகவை குறைசொல்லிவிட்டால் திமுகவின் இடத்தை பிடித்துவிடலாமா?
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். செயல்படாத விஜயை மக்கள் நம்ப மாட்டார்கள். எந்தவித செயல்பாடும் இல்லாமல் பனையூர் பங்களாவிற்குள் பதுங்கிக்கொண்டு மாதத்திற்கு ஒரு முறை நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு செல்வது போல வருகிறாரே தவிர, அவருக்கு கள அரசியல் கிடையாது. அன்றாட அரசியலில் எந்த எதிர் கருத்தும் அவருக்கு கிடையாது. அவராக கிளி சீட்டு எடுப்பது போல எப்போதாவது வெளியே வருகிறார். அவராக மறைந்துவிடுகிறார். இந்த அரசியல் கரையேறாது. விஜய் தன்னை தானே எம்ஜிஆராக நினைத்துக்கொண்டு தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், பாமக, போன்றவர்கள் விஜயுடன் கூட்டணி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், முதலமைச்சராக கனவு காணுகிற விஜயை ஆதரிப்பாரா? சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி ஆக இருந்தவர்கள் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களாக உள்ளனர். இதுவரை தேர்தலையே சந்திக்காத விஜயை நம்பி, ஓபிஎஸ் கள அரசியலுக்கு வருவாரா? கூட்டம் கூடி கலைந்து விடுவார்கள். தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக மாற்று சக்தியே இல்லாமல் பாஜக செய்துவிட்டது. நாம் தமிழர் கட்சியில் இருந்து திடீரென நிர்வாகிகள் போகிறார்கள். அவர் கள் விற்பனைக்கான விளம்பர தூதரே தவிர, அரசியல் கட்சியின் தலைவர் கிடையாது. திமுகவை எதிர்க்கக்கூடிய கட்சிகளுக்கு மாற்று அமைப்பே கிடையாது என்பது ஜனநாயகத்திற்கான வீழ்ச்சியாகும். அத்தகைய நிலையை ஏற்படுத்தியது பாஜக, இவ்வாறு அவர் தெரிவித்தார்.