2004 தேர்தலில் கலைஞர் மிகப்பெரிய கூட்டணியை கட்டிஎழுப்பி, தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தது போலவே 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை கட்டமைத்து, வெற்றி பெறுவார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் மூன்று முறை சந்தித்தன் நோக்கம் மற்றும் சந்திப்பின் காரணமாக திமுக கூட்டணியில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவை குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்ததாவது :- ஒ.பன்னீர்செல்வம் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை, சந்திக்க அனுமதி கோரி எழுதிய கடிதம் என்பது சுயமரியாதை உள்ள யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். பிரதமர் மோடி ஒன்றும் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர் கிடையாது. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. இந்த நாட்டின் பிரதமர் அவ்வளவுதான். பிரதமர் மோடியிடம் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று காலில் விழுந்து கெஞ்சிய ஓபிஎஸ், வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிந்த உடன் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தின் முடிவில் அவர் செயதியாளர்களிடம் பேசாமல், பண்ருட்டி ராமச்சந்திரன் தான் பேசிக் கொண்டிருந்தார். அரசியலில் இருப்பை தக்கவைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இத்தனை நாட்களாக ஓபிஎஸ் என்கிற ஒரு சப்ஜெக்ட் இருந்தது தமிழ்நாட்டு அரசியலில் யாருக்காவது நினைவுக்கு வந்ததா? ஆனால் தற்போது திடீரென செய்திகள் வர காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததுதான். இதன் மூலம் தன்னுடைய இருப்பு தமிழ்நாட்டு அரசியலில் காட்டப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் நினைக்கிறார்.
குருமூர்த்தி, பாஜகவின் கண் அசைவு இல்லாமல் ஓபிஎஸ் ஒருபோதும் இயங்க மாட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சென்று சந்தித்தது என்பது ஒரு இடைக்கால ஏற்பாடு ஆகும். எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்கு ஓபிஎஸ்-ஐ பாஜக வைத்திருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அன்வர்ராஜா, பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவில் இருந்து விலகவில்லை என்றும், கடந்த காலங்களில் சீட்டுகளை பிரித்து தரும் இடத்தில் அதிமுக இருந்தது. ஆனால் இம்முறை பாஜக பிரித்து தருகின்ற இடத்தில் அதிமுக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணி ஆட்சி என்று பாஜகவினர் பேசுவதை கணடிக்கக்கூட முடியாத இடத்தில் அதிமுக உள்ளது. அதனால் என்னால் கட்சியில் தொடர முடியவில்லை என்று சொன்னார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும், பிரிந்துகிடக்கும் அதிமுக அணிகளும் சேர்ந்துவிட்டால் அதிமுக மீண்டும் வலிமை பெற்றுவிட்டதாக தோற்றமளிக்கும். அப்போது சீட்டுகளை பிரித்துக்கொடுக்கும் இடத்திற்கு மீண்டும் அதிமுக சென்றுவிடும். சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை காட்டித்தான் பாஜக, அதிமுகவை மிரட்டி வருகிறது. இந்நிலையில், அரசியலில் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின சென்று சந்தித்தார். நிச்சயமாக ஓபிஎஸ் திமுக, கூட்டணியிலேயோ, அல்லது திமுகவிலோ இணைய மாட்டார். திமுக அவரை ஒருபோதும் ஏற்காது. காரணம் அவருக்கு சுயமாக யோசிக்க தெரியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்க்ரிப்ட் எழுதியவர் குருமூர்த்தி. அதை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தவர் ஓபிஎஸ்.
விஜயை பின்னால் இருந்து இயக்குவது யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் அனைத்து வகையிலும் பாஜக கொடுக்கிற செயல்திட்டத்தை செயல்படுத்துகிற இடத்திற்கு வந்து நிற்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் பாஜக தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்று சொல்கிறார். பலா பழத்தை தூக்கிக் கொண்டு ராமநாதபுரத்துக்கு சென்றபோது அது தெரியவில்லையா? அதிமுகவை கபலிகரம் செய்கிற பணி 60 சதவீதம் முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிறகு எஞ்சிய பணிகளும் முடிந்துவிடும். பாஜக அந்த வேலையை செவ்வனே செய்து முடித்துவிடும். விஜய்க்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலை என்ன என்றால் இப்படி ஒரு அணியை கட்டமைத்து நிற்க வேண்டும். அதிமுகவை கபலீகரம் செய்த பிறகு அந்த இடத்தை நிரப்புதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். அது விஜயாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் விஜயை மக்கள் நம்புவார்கள் என்று பாஜக நினைப்பதுதான், அவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தெரியவில்லை என்பதற்கான ஆதாரமாகும். ஓபிஎஸ்க்கு எந்தவிதமான அரசியல் செல்வாக்கும் கிடையாது. இந்த காலி பெருங்காய டப்பாவை, அந்த காலி பெருங்காய டப்பாவிற்கு அருகில் வைத்தால் அது பெரிய மாற்றாக வந்துவிடும் என்று பாஜக நினைப்பதான் பாஜக தமிழ்நாட்டு அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.
2011ஆம் ஆண்டில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. அதன் பிறகு அந்த கட்சி எந்த தேர்தல் வெற்றியையும் பெறவில்லை. 2016ல் மக்கள் நலக்கூட்டணி என்று விஜயாகாந்தை படுகுழியில் தள்ளினார்கள். மிகப்பெரிய சரிவை அந்த கட்சி சந்தித்துள்ளது. விஜயகாந்தும் தற்போதும் இல்லை. இந்த நேரத்தில் ஒரு தேர்தல் வெற்றித்தான் புத்துணர்ச்சியை தரும். கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஏற்கனவே அதிமுக உடன் கூட்டணியில் இருந்ததால் அதன் சாதக பாதகங்கள் பிரேமலதாவுக்கு தெரிந்திருக்கும். அப்போது திமுக கூட்டணிதான் வின்னிங் ரேசில் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். இதுதான் எதார்த்தமான நிலைமை. அப்போது திமுக உடன் கூட்டணி வைக்கும் இடத்திற்கு பிரேமலதா வருகிறார். மேலும், அதிமுகவில் மாநிலங்களவை இடம் தருவதாக சொல்லி ஏமாற்றியதால், அவர் திமுக கூட்டணிக்கு வருவதற்கான சமிக்ஞைகளை காட்டிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் உடல்நலம் சரியில்லாமல் போனது ஒரு வாய்ப்பாக அமைந்த நிலையில், அதனை பயன்படுத்தி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.
தேமுதிக ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் அதிகபட்சம் 6 இடங்கள் தரலாம். திருமாவளவன், பொதுஉடைமை கட்சிகளுக்கு ஏற்கனவே போட்டியிட்ட 6 இடங்கள் தர வேண்டும். ஐ.யு.எம்.எல், இன்னும் பிற கட்சிகளுக்கு தர வேண்டிய இடங்களை கணக்கில் கொண்டு 160 முதல் 150 இடங்கள் வரை போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. பாமக வந்தாலும், இதனை கருத்தில் கொண்டுதான் இடஙகள் தர முடியும். அதற்கு மேல் இடங்களை தர முடியாது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. 2004 தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றது. அப்போது கலைஞர் மிகவும் சிறப்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து வழங்கினார். அதேபோல், 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய அணியை கட்டமைத்து, சீட்டுகளை பகிர்ந்தளித்து 90 சதவீத வெற்றியை பெறுவார். அதனால்தான் வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்று முதலமைச்சர் சொன்னார். அதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் என்ற சட்டப்பேரவையில் இருக்க வேண்டும் என்பது தான் காரணம். 2016 தேர்தலில் திமுக தோல்வியடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், பொது உடமை இயக்கங்கள் இல்லாத சட்டமன்றம் அமைவதை என்னால் பார்க்க முடியவில்லை. மிகுந்த வருத்தம் அளிப்பதாக சொன்னார். அதுதான் ஜனநாயகம். எனவே 200 இடங்களில் வெற்றி பெறுகிற அணியை 2026ல் முதலமைச்சர் கட்டமைப்பார். மத்தான வெற்றியை பெறுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.