ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக சட்டத் திருத்தம் மேற்கொண்டு வந்து அதை வழங்கவிடாமல் செய்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு இதுவே ஒரு சான்று என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

பாஜக – தேர்தல் ஆணையம் இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடியதாக குற்றம்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அதற்கு சான்றாக மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் முறைகேடாக ஒரு லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள் இருந்ததாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட வீட்டிற்கு இந்தியா டுடே நிருபர் களஆய்வுக்கு சென்றார். ஆனால் நேரில் சென்றுபார்க்கும் போது அதுவீடு அல்ல. ஒரு சிறிய அறை என்று தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் மேற்குவங்கத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார்.

உணவு டெலிவரி செய்யும் அந்த இளைஞரிடம், விசாரித்தபோது அங்கு 80 வாக்காளர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். அடுத்து, வீட்டின் உரிமையாளர் ஜெயராம் ரெட்டி என்பவருக்கு நிருபர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் தன்னை பாஜக நபர் என்று சொன்னவர், பின்னர் தான் ஒரு பாஜக ஆதரவாளர் என்று மறுக்கிறார். மேலும், வீட்டில் 80 பேர் வசிக்கவில்லை என்றும் ஜெயராம் ரெட்டி ஒப்புக்கொள்கிறார். அதேபகுதியில் வசிக்கும் நபர்களிடம் விசாரிக்கும்போது அந்த 80 நபர்களை பார்த்ததே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்போது போலியாக ஒரு லட்சம் வாக்காளர்களை சேர்த்து, போலியாக தேர்தலை நடத்தி, போலியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
குர்கிரத் சிங் தாங் என்பவருக்கு பெங்களுரு அர்பன் தொகுதியில் வாக்கு உள்ளது. அடுத்ததாக மற்றொரு அடையாள அட்டையில் குர்கிரத் சிங் தாங் என்கிற அதே பெயரில் சிவாலி என்கிற தொகுதியில் வாக்கு உள்ளது. மற்றொரு அடையாள அட்டையில் சிவாலி தொகுதியில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் வருகிறது. ஒரே நபருக்கு பல்வேறு அடையாள அட்டைகளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கிறார். மற்றொன்று ஒரே வாக்காளர் அட்டை உ.பி., மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ளது. அவருடைய பெயர் ஆதித்ய ஸ்ரீவத்சவா. இவர் அந்த அந்த ஊர்களுக்கு வேலைக்கு செல்லும்போது வாக்களிப்பதாக செல்கிறார். ஒரு இடத்தில் சேர்ந்தால் மற்ற இடத்தில் நீக்க வேண்டும் அல்லவா? ஏன் நீக்கவில்லை.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால் தேர்தலில் 9.7 கோடி வாக்குகள் பதிவாகியது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. இது எப்படி சாத்தியமாகும். மகாராஷ்டிராவில் 2019 மக்களவைத் தேர்தலுக்கு 2024 மக்களவை தேர்தலுக்கும் இடையே 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அடுத்த 5 மாதங்களில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றங்களுக்கு வழக்கமாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள். ஆனால் இம்முறை தனித்தனியாக நடத்தினார்கள். ஹரியானாவில் மாலை 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் மளமளவென உயர்கிறது. குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரத்தில் 600 பேர் வாக்களித்துள்ளனர். இதனை கண்டறிய சிசிடிவி காட்சிகளை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும், ஆவணங்களையும் வழங்கிட வேண்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 1961 தேர்தல் நடத்தை விதிகளின்படி இந்த ஆவணங்களை வழங்கிட நீதிபதி உத்தரவிடுகிறார். 2024 டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்கிறது.
அதன்படி, தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களை தர வேண்டியது கிடையாது என்றும், சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்குள் அழித்து விடலாம் என்று கொண்டு வந்துவிட்டனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் கேட்ட தரவுகளை தர மறுக்கிறது. சட்டத்தை மாற்றுகிறது. அப்போது தேர்தலில் எவ்வளவு தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும்.
இப்படி மோசடி செய்து, தேர்தல்களில் வென்றுவிட்டு, பாஜக வெற்றி வெற்றி என்று சொல்கிறது. மோடியே வாரணாசியில் தோற்றிருப்பார் என்று சந்தேகம் உள்ளது. பாஜகவுக்கு 20 முதல் 25 தொகுதிகள் தான் தேவைப்பட்டது. அந்த தொகுதிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வாக்காளர்களை போலியாக சேர்ப்பது பாஜகவுக்க மிகவும் எளிதான வேலையாகும். இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார் என்றால்? அனைவரும் தேர்தல் ஆணையத்தை நோக்கிதான் அனைவரும் கேள்வி கேட்கிறோம். ஆனால் பதில் பாஜகவிடம் இருந்து வருகிறது. அப்போது பாஜகவும், தேர்தல் ஆணையமும் கள்ளக்கூட்டணியா? என்கிற சந்தேகம் எழுகிறது. அரசியலமைப்பு சட்டம் எனக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது.
வடநாட்டில் செய்த தில்லுமுல்லுகளை தமிழ்நாட்டிலும் செய்ய பாஜகவினர் தயாராகிறார்கள். தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் ஏஜெண்டுகள் உள்ளனர். அதனால் ஓரளவு தாக்கு பிடிக்க முடிகிறது. அப்படி உள்ளபோதும் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதை போல ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. இன்றைக்கு ராகுல்காந்தி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நிச்சயமாக என்றைக்காவது ஒரு நாள் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அன்றைக்கு தேர்தல் மோசடிக்கு துணையாக இருந்த அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.