பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு திமுக தான் காரணம் என்கிற அன்புமணியின் வாதம் எடுபடாமல் போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பில் இருந்து ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவின் விதிகளை மீறியதாக அன்புமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் விதிகளை மீறியதாக தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவின் விதிகளுக்கு புறம்பாக அன்புமணி செயல்பட்டதாக கூறப்பட்டுகிறது. அதேவேளையில் பாமகவின் மற்றொரு பொதுக்குழு கூடி அவரை தலைவராக தேர்வு செய்துள்ளது. அப்போது, ராமதாஸ் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பது இயலாத காரியமாகும். பாமக வழக்கறிஞர் பாலு, இதுபோன்று அன்புமணிக்கு நோட்டீஸ் கொடுப்பதற்காக அதிகாரம் கிடையாது என்று செய்தியாளர்களிடம் கூறி வருகிறார். அப்போது, அதிகாரம் தனக்கு உள்ளது என்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர் ராமதாஸ் உள்ளார்.
ராமதாஸ் ஒரு பொதுக்குழுவை கூட்டிய நிலையில், அதில் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பாமகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் கிடையாது. மாம்பழம் சின்னமும் கிடையாது. எனவே இவை இரண்டுக்காகவும் போராட வேண்டிய நிலையில் பாமக உள்ளது. அப்படிபட்ட சூழலில் அன்புமணிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கியது, அதற்கு அவர் பதில் அளிக்காமல் இருப்பது எல்லாம் பழைய அதிமுக வரலாற்றை நினைவு படுத்துகிறது. ஆனால் அன்புமணி நிச்சயமாக எம்ஜிஆர் கிடையாது. காரணம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கிதான் இருக்கிறது. குறிப்பிட்ட வாக்கு வங்கியிலும் பெரும்பாலானது வன்னியர் சங்கத்தை அடிப்படையாக கொண்டதாகும். மருத்துவர் ராமதாஸ், அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கும்போது பாமகவுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பாமகவின் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படுவதுடன், அதன் பேர வலிமை குறையும். அன்புமணி, 60 சீட்டுகள் வரை கேட்டுக் கொண்டிருந்தார். அதிமுக கூட்டணியில் 10 சீட்டுகள் கூட தர மாட்டார்கள். அதை ஒப்புக்கொண்டு அன்புமணியால் நிற்கவும் முடியாது. குறைந்தபட்சம் 15 இடங்களில் பாமக போட்டியிட்டால் தான் அங்கீகாமும், வாக்கு வங்கியும் கிடைக்கும். எனவே பாமகவுக்கு இருத்தலுக்கான நெருக்கடி வந்துவிட்டது.
அன்புமணி, நாற்காலி ராமதாசுக்காக காலியாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் ராமதாசோ நான் தான் தலைவர், தலைவர் பதவி நாற்காலி இல்லாமல் உட்கார முடியாது என்று சொல்கிறார். கட்சிக்கான அங்கீகாரம் போய்விட்டது. அதனால் கூட்டணி பேசுகிற அதிகாரம் வரும் தேர்தலில் தனக்கு வேண்டும். அங்கீகாரத்தை மீட்டு கொடுத்த உடன் அன்புமணியை கட்சியை நடத்தலாம் என்று ராமதாஸ் சொல்கிறார். ஆனால் அன்புமணி விட்டுக்கொடுக்கும் அரசியலுக்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர் திமுக எதிர்ப்பு கையில் எடுத்துவிட்டார். பாஜக கூட்டணியில் தொடர்கிறார். பாமக திரிசங்கு சொர்க்கத்திற்கு போய் சேர்ந்துவிட்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இருவரும் தங்கள் பக்கம்தான் தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதை தேர்தலில் தான் முடிவு செய்ய முடியும். ஆனால் தேர்தலுக்கு செல்லும்போதே பின்னடைவோடு தான் செல்கிறார்கள். அன்புமணிக்கான வாய்ப்பு என்பது, பாஜக கூட்டணியில் அவர் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டால், விஜயிடம்தான் கூட்டணிக்கு செல்ல வேண்டும். அதை தாண்டி வேறு வழியில்லை. இல்லாவிட்டால் விஜய், அன்புமணி, சீமான், ஓபிஎஸ், டிடிவி என்று அணி அமைய வேண்டும். அது ஒரு கனவு அணிதான். அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது.
அன்புமணி நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். ஒரு அரசியல் பிளவு கொதிப்பாக உள்ளது. அப்படியான சூழலில் கட்சி கட்டுக் கோப்பாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக கட்சியில் செங்குத்துப்பிளவு ஏற்பட்டுள்ளது.இந்த பிளவை பிற கட்சிகள் சாதகமாக பயன்படுத்தக் கூடும். சாதி அடிப்படையிலான ஒரு கட்சி சிதிலமடைகிறது என்றால் அதை எடுப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. திமுகவுக்கு அது சாதகம் என்றாலும், அவர்கள் நேரடியாக வர மாட்டார்கள். காரணம் பாமக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே அன்புமணி, பாலு போன்றவர்கள் திமுக, பாமகவில் பிளவை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் இது ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எனவே அன்புமணியின் குற்றச்சாட்டு எடுபடவில்லை. ஒரு கட்சி உடைகிறபோது, மாற்றுக்கருத்து உள்ளவர்கள் நம்ம பக்கம் வந்தால் நல்லா இருக்கும் என திமுக நினைக்கலாம். ஆனால் அவர்கள் அதிமுகவில் இருந்து வருவதைதான் அவர்கள் விரும்புகிறார்கள்.
அதிமுகவில் அதிருப்தியில் உள்ள 7 பேரை இழுக்க திமுக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையாக கூட இருக்கலாம். அதிமுகவை பலவீனப் படுத்துவது, கூட்டணியில் உள்ள பாஜக அதிக இடங்கள் பெறுவதற்கு அது உதவியாக மாறிவிடும். திடீரென சி.பி.ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள். அப்போது என்ன வாதம் வைக்கப்படுகிறது என்றால்? தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு உணர்வுகளுக்காகவும் தான் அவரை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கி உள்ளோம் என்று சொல்கிறார்கள். எந்த வகையில் பார்த்தாலும் தேர்தலை நோக்கி செல்கிறது. அதிமுகவை திமுக பலவீனப்படுத்தப் பார்க்கிறது. அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை திமுக இழுக்கப் பார்க்கிறது. அப்படி இழுக்கும்பட்சத்தில் பாஜக அதிக இடங்களை கேட்கும். ஆனால் அதிக இடங்களை பாஜகவுக்கு தர முடியாது. அப்போது கூட்டணியில் விரிசல் ஏற்படும். பாஜக தனித்து போட்டியிட்டால் நமக்கு லாபம்தான். அந்த இடத்தில் திமுக வேட்பாளரை போட்டி தோற்கடித்துவிடலாம். ஏனென்றால் இதே டெக்னிக்கை ஜெயலலிதா கடைபிடித்தார். காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் போட்டியிட்டதோ, அங்கெல்லாம் அதிமுக போட்டியிட்டது. இங்கு பாஜகவை விட திமுக தேர்தல் வேலைகளில் பலமாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.