முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையான குற்றச் செயலில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 1. யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா – 2025 , 2. அரசியலமைப்பு 130-வது திருத்த மசோதா – 2025, 3. ஜம்மு & காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு இருந்ததால், மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் முன்மொழிந்தார். அதன்படி நாடாளுமன்ற மக்களவையில் மசோதாக்களை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையான வாக்குகள் “அனுப்பலாம்” என கிடைத்ததால் மூன்று மசோதாக்களையும் மக்களவை சபாநாயகர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.
மக்களவையை சேர்ந்த 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் என 31 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு நடப்பு ஆண்டு குளிர் கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு மூன்று மசோதாக்களும் அனுப்பப்பட்ட போதிலும் மக்களவையில் கடும் அமளி நிலவியதால் மக்களவை மாலை 5 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா-வினால் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை தான் கடுமையாகக் கண்டிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 130வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல – இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை தான் கடுமையாகக் கண்டிப்பதாகவும், இந்த சர்வாதிகார முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் கீழ் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான முயற்சி இது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளங்களையும் கெடுக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு வளர்ந்து வரும் சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கையும் இப்படித்தான் தொடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போட்டியாளர்களைக் பதவியில் இருந்து அகற்றுவதற்கான அதிகாரத்தை இந்த மசோதா வழங்க முயல்வதாக தெரிவித்துள்ள அவர், எந்தவொரு தண்டனையும் அல்லது விசாரணையும் இல்லாத, இந்த அரசியலமைப்புக்கு விரோதமான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர், மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிகொள்வார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிவனோ கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள பதிவில், மோடியும் – அமித்ஷாவும் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளார்கள் என்றும், இந்த மசோதா சட்டமானால் முதலமைச்சர்களையும், மாநில அமைச்சர்களையும் கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும்தான் மிகவும் பயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசுக்கான தங்களின் ஆதரவை விலக்கிக் கொள்வார்களோ என மறுபக்கத்தில் மோடி பயப்படுவதால்தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.