பீகார் போன்ற பெரிய மாநிலத்தில் ஆட்சியை இழந்தால் பாஜகவுக்கு பெரிய பின்னடைவாகும். எனவே அவர்கள் இந்தியா கூட்டணியின் பிரச்சாரத்தை கண்டு பயப்படுகிறார்கள் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகாரில் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்றது தொடர்பாக பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்கு திருட்டுக்கு எதிராக உரையாற்றினார். பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி கட்சி ஒன்றரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தது. இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் முயற்சிக்கிறார்கள். ஆர்ஜேடி வலிமையாகவே உள்ளது. இந்நிலையில், வாக்கு திருட்டு நடவடிக்கைக்கு எதிராக ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது காங்கிரஸ் – ஆர்.ஜே.டி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், கடந்தகால வரலாறு என்று எல்லாவற்றையும் பார்க்கிறபோது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். யாத்திரையில் தேஜஸ்வி மற்றும் ராகுலுக்கு நடுவில் ஸ்டாலின் நிற்கிறார். தேசிய அரசியலில் ஸ்டாலினுக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவம் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்றே தகவல்கள் வெளியாகின்றன. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியமான தேர்தலாகும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு 32 இடங்கள் குறைவாக உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றது என்றால், அங்கே ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் வலுப்பெற்று விடும். அப்போது பாஜக கூட்டணியை சேர்ந்த எம்.பி-க்கள் உள்ளுர் அரசியலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தால் அது பாஜக அரசுக்கு ஆபத்தாகும். ஆந்திராவுக்கு கொடுப்பது போல பீகாருக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்க வில்லை. சந்திரபாபு நாயுடு – நிதிஷ் போன்றோருக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்களுக்கு தரப்படவில்லை என்று எம்.பிக்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, பாஜக எம்பிக்கள் சிலர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தால், அது பாஜகவுக்கு பின்னடைவாகும். பீகார் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில் ஆட்சியை இழப்பது என்பது, பாஜகவுக்கு பதற்றம் ஏற்படும். சந்திரபாபு நாயுடுவும் ஜெகனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெறவே விரும்புவார். அதனால் பாஜக பயப்படுகிறது.
பீகாரில் யாத்திரையின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி கட்சிகளின் புதிய அத்தியாயம் இங்கே தொடங்குகிறது என்றும், ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்து என்றால், அதில் பீகார் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பதற்காக தான் பீகாருக்கு சென்றிருக்கிறார். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது என்றும், தங்களை பலவீனப்படுத்துவதற்காக வாக்கு திருட்டு நடப்பதாகவும் சொல்லியுள்ளனர். இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர்களை பீகாரில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைக்க பார்க்கிறார்கள் என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியா கூட்டணியில் தலைவர்கள் இருக்கிறார்கள். பிரச்சாரம் செய்கிறார்கள். ஏன் பாஜகவுக்கும் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரை கூப்பிட்டு பிரச்சாரம் செய்ய வேண்டியது தானே? இந்தியா கூட்டணியில் அகிலேஷ், மம்தா போன்ற தலைவர்களும் கூட அழைத்தால் பிரச்சாரம் செய்வார்கள். வாக்கு திருட்டு என்பது நாடகம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். காங்கிரஸ் முதலில் குற்றம்சாட்டியது தேர்தல் ஆணையத்தை தான். பாஜக ஏன் இடையில் வருகிறது? பாஜக இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னர் தான் தேர்தல் ஆணையர் நியமனத்திலேயே பிரச்சினை உள்ளது என்று சொன்னார்கள். தற்போது குஜராத் மாநிலத்திலேயே பாஜக இப்படிதான் வெற்றி பெற்றதா? என்கிற புதிய விஷயத்தை கிளப்பியுள்ளன.
கடந்த காலங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு சொல்கிற வாக்கு சதவீதத்திற்கும், மறுநாள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் இறுதி வாக்கு சதவீதத்திற்கும் அதிகபட்சம் ஒரு சதவீதம் தான் மாறுபாடு இருக்கும். ஆனால் இன்றைக்கு 10 சதவீதத்திற்கு மேலாக வாக்கு வித்தியாசம் உள்ளது. இது ஏமாற்று வேலையாகவே தெரிகிறது. வாக்கு திருட்டு புகார் தொடர்பாக ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. என்னை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியம் செய்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ராகுல்காந்தியின் நடவடிக்கையால் தேசத்திற்கு ஆபத்து என்றும் தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் உங்களால்தான் இந்த தேசத்திற்கே ஆபத்து உள்ளது. நான் பாஜகவை முதல் குற்றவாளி என்று சொல்ல மாட்டேன். நீங்கள் வாங்குகிற சம்பளத்திற்கு உரிய வேலையை பார்க்கிறீர்களா? இறந்துவிட்டார்கள் என்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கும்பல் கும்பலாக வந்து ராகுல்காந்தியுடன் டீ குடிக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்திற்கு அவமானமாக இல்லையா?
ராகுல்காந்தி வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளை சுட்டிக்காட்டி, தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றுதான் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியின் மீதே குற்றச்சாட்டை மடைமாற்றுகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தேர்தல் ஆணையம் அரசியல் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? மக்கள் வாக்களித்தனரா? பதிவான வாக்குகளை எண்ணினோமா? முடிவுகளை அறிவித்தோமா? அவ்வளவுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் ஆள்மாறாட்டம் செய்வது. வாக்குகளை நீக்குவது, வாக்குகளை சேர்ப்பது. ஒரு கட்சிக்கு உதவது இதெல்லாம் மோசடியா? இல்லையா? இதுபோன்ற செயல்களை அரசியல் கட்சியினர் செய்வது இயல்பு. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு எங்கே சென்றது மாண்பு? இன்றைக்கு வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் அம்பலப்பட்டு நிற்கிறது. மற்ற நாடுகள் இந்தியாவின் தேர்தல் அமைப்பு குறித்து தவறாக நினைக்க மாட்டார்களா? கடந்த காலங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போடுவார்கள். தற்போது மொத்தமாக வாக்குகளை திருடுவதா? வாக்காளர் பட்டியலையே அடமானம் வைப்பீர்களா? ஒரு அரசியல் கட்சியின் முக்கிய கடமை, மக்களின் நம்பிக்கை பெறுவதாகும். அப்படி நம்பிக்கையை பெற்று வாக்குகளை பெற்றால் வெற்றி பெற்றுவிடலாம். 5 ஆண்டுகள் ஆகி இதை கூட செய்ய முடியாமல் திருட்டு வேலை செய்வதை என்ன அரசியல் இது?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.