என்.டி.ஏ கூட்டணியில் வெளியேறியுள்ள டிடிவி தினகரன், விஜயுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்து தினகரன் வெளியேறியதன் பின்னணி மற்றும் அவருடைய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், டிசம்பரில் தனது கூட்டணி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்து உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் குறித்து அவர் பேசியபோது, விஜய்க்கு அரசியலில் சிறந்த எதிர்காலம் உள்ளதாக கூறியிருந்தார். அப்போது, அவர் விஜயுடன் கூட்டணிக்கு செல்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவுக்கு எப்படி அவருக்கு தைரியம் வந்தது என்று கேள்வி எழுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததாகவும், நடைபெற உள்ளது மாநில சட்டமன்றத் தேர்தல் என்பதால் மாநில கட்சிகள் எந்த முடிவை வேண்டும் எடுக்கலாம் என சொல்லியிருந்தார். தினகரனின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தபோது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவையில் தேர்தலில் போட்டியிட வைத்து எம்.பி. ஆக்கி விடலாம் என்று நினைத்தார்கள். இதனை அறிந்த அண்ணாமலை, அந்த தொகுதியாக கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டார். இதனால் ஹெச்.ராஜா, தமிழிசை போன்றவர்களை கோவைக்குள் விடாமல் வைத்திருந்தார். இதனால் அவர்கள் நிர்மலா சீதாராமனை கூப்பிட்டு கூட்டம் போட்டார்கள். ஆனால் அவற்றை எல்லாம் அண்ணாமலை தன்னுடைய பாணியில் உடைத்துவிட்டார். நிர்மலா சீதாராமன் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், தற்போது ஒரு பெண்ணை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கினால், ஜெயலலிதாவை போன்று அவருக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கின்றனர். இதற்காக அண்மையில் மூப்பனார் நினைவு தினத்தன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார்.
ஜிகே.மூப்பனார், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தமிழக அரசியலின் மையமாக விளங்கியவர். தேசிய அரசியலில் இந்திரா காந்தியுடனும், நரசிம்ம ராவ் போன்றவர்களுடனும் பயணித்துள்ளார். ஆனால் அவர் மறைந்து தற்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்கால தலைமுறைக்கு மூப்பனார் என்றால் யார் என்றே தெரியாது. மூப்பனாரின் மகன் வாசன் 20 ஆண்டுகள் அரசியல் செய்து, மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரசை உடைக்க, ஜி.கே.வாசனின் வாக்குகளை இழுத்துவிடலாம் என்று யார் ஆலோசனை சொன்னார்கள் என்று தெரியவில்லை. நிர்மலா சீதாராமன் அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வந்து அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால், அவரை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த அண்ணாமலை, டெல்லிக்கு சென்று ஆட்டத்தை கலைத்துவிட்டு வந்துவிட்டார்.
இப்படி பாஜகவில் உள்ளுக்குள் நடைபெறும் மோதல்களை கண்டு டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்தார். ஜெயலலிதா, சசிகலா போன்ற ஆளுமைகளுடன் பயணித்த அவர், நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னதால் எரிச்சல் அடைந்துள்ளார். பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது? நயினாரை தலைவர் என்கிறார்கள். ஆனால் அவருக்கு செல்வாக்கு கிடையாது. அண்ணாமலையை தலைவர் இல்லை என்கிறார்கள். ஆனால் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. பாஜகவுக்காக கடுமையாக உழைத்து வாக்கு சதவீதத்தை உயர்த்திய அண்ணாமலைக்கு பாராட்டி பதவி உயர்வு வழங்குவதற்கு பதிலாக அவரை பொறுப்பில் இருந்து நீக்குகிறார்கள். இது என்ன கூட்டணி? எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அண்ணாமலை பல்டி அடித்துவிட்டார் என குழம்பி போய் தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
தினகரனின் அடுத்த திட்டம் என்ன என்றால்? விஜயுடன் கூட்டணி வைத்து, அவரிடம் ஒரு 25 தொகுதிகளையும், தேர்தல் நிதியையும் பெற்றுவிடலாம் என்பதுதான். தென் மாவட்டங்களில் வெற்றி பெற குறைந்த அளவிலான வாக்குகளே தேவைப்படுகிற சூழலில், விஜயின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். பாஜக உடன் சென்றால் வாக்குகள் கிடைக்காது, ஒன்று இரண்டு சீட்டுகள் கூட கிடைப்பது கடினம். அதேவேளையில், விஜயுடன் சேர்ந்தால் 5 இடங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற கணக்கிற்கு தினகரன் போய்விட்டார். டெல்லியில் சென்று பேசி பார்த்துள்ளனர். அவர்கள் ஒத்துவரவில்லை என்றால், விஜயுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என்று நினைக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். சிறிய கட்சிகளை வைத்திருக்கக்கூடிய ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களே பாஜகவை மதிக்கவில்லை என்றால்? யார் தான் அவர்களை மதித்து வாக்களிப்பார்கள்?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.