நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வழக்கை வரும் 12 ஆம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளாா்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம்,”இந்த விவகாரத்தில் எதிர்தரப்பு மனுதாரர் ஒரு பெண் பதிக்கப்பட்டுள்ளாரே. அதற்கு மனுதாரரின் பதில் என்ன? என்று கேள்வியெழுப்பியதோடு, இதில் 12 வாரத்தில் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் சீமான் தொடர்பான வழக்கு விவகாரத்தில் செட்டில்மெண்ட் என்பதற்கு தயாராக இல்லை என்று திட்டவட்டமாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிவி நாகரத்னா அமர்வில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முறையீட்டை முன் வைத்தார். அதில் நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீண்ட நாள் நிலைவையில் இருந்து வருவதால் அதை விரைந்து பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி, சீமான் தொடர்பான வழக்கை வரும் 12 ஆம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.


