எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை விட்டு விலகப் போகிறாரா? என்பது செங்கோட்டையன் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்து முடிவு செய்யலாம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிய விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியதாக சொல்லியுள்ளார். இப்படி டெல்லியின் உதவியை நாடினால், இதனை அவர்கள்தான் தங்களின் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள். கடைசியாக அதிமுக 1988ல் அதிமுக (ஜெ) அணி – அதிமுக (ஜா) அணி என இரண்டாக பிளவு பட்டது. மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஜானகி அம்மாளுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டது. இதனால் ஜானகி தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது. பின்னர் மூப்பனார் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தனி முயற்சி எடுத்து, அது தேறாமல் போனது. இதனை தொடர்ந்து, அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கும் ஒப்புக்கொண்டார்கள். பாஜகவின் தற்போதைய முயற்சியின் உள்நோக்கம், அதிமுகவை பலவீனப்படுத்துவது தான். அதிமுக ஒருபோதும் ஒற்றுமைப்படாது. காரணம் செங்கோட்டையன் நான் தான் கட்சியில் சீனியர் என்பார். ஓபிஎஸ், தினகரன், சசிகலா என எந்த அணியையும், அதிமுக உடன் சேர்ப்பது சாத்தியம் அற்றது.

டிடிவி தினகரன் சொல்வது போன்று எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உடன் பாஜக கூட்டணி வைக்குமா? எதற்கும் வாய்ப்பு இல்லை. இது செங்கோட்டையனுக்கும் தெரியும். இதில் உச்சபட்சமாக என்ன முடிவு வரும் என்றால் 2026 சட்டமன்றத் தேர்தல். இதேபோன்று தான், 1988 தேர்தல் வந்தபோதும் நடைபெற்றது. 1988 செப்டம்பர் 15ஆம் தேதி சிந்தாமணியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஜெயலலிதா பிரச்சார பயணத்தை தொடங்கினார். டிடிவி தினகரன்தான் சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார். அப்போது கட்சி தங்களிடம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தேர்தல் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாத ஒரு உணர்வாகும். அதிமுக இரண்டாக பிரிந்தால் வெற்றி பெற முடியாது என்று ஜானகி அம்மாளுக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாததா என்ன? தேர்தல் நடந்து முடியட்டும், அதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனோபாவம் இது. அதன் பிறகு கட்சி ஒன்றாகிவிடும். நாம் தலைமை ஏற்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஜெயலலிதா தலைமையில்தான் கட்சி ஒன்றானது. எனவே 2026 தேர்தலுக்கு பிறகுதான் எதுவுமே சாத்தியமாகும். எனவே உடனடியாக அதிமுக அணிகள் எல்லாம் ஒன்றிணைந்துவிடும். உடனே அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பது சாத்தியமில்லை. திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று ஒரு குரூப் நினைக்கிறது அங்கே.
செங்கோட்டையன் டெல்லி போய்விட்டு வந்தார் என்றால், அவரை டெல்லி பாஜக மேலிடம் கூப்பிட்டு இருக்கக் கூடாது. உள்துறை அமைச்சரையோ, நிதி அமைச்சரையே நேரம் ஒதுக்காமல் செங்கோட்டையன் போய் பார்க்க முடியாது. அப்போது பாஜகவுக்கு நோக்கம் இருக்கிறது. தேறாத ஜனநாயக கூட்டணி என்று ஜுனியர் விகடனில் விரிவான கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி தேறாது என்று தெரியும். ஆனால் அமித்ஷா வியூகம் வெற்றி பெறும் என்கிறார்கள். அப்படி எல்லாம் அமித்ஷாவின் வியூகம் வெற்றி பெறாது. இது அவருக்கும் தெரியும். அமித்ஷாவுக்கும் 2029 மக்களவை தேர்தல் தான் நோக்கமாகும். எடப்பாடிக்கும், வேறு நோக்கம் இருக்கிறது. யாரும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பொதுவான அஜெண்டாவில் வேலை பார்ப்பதாக எனக்கு தோன்றவில்லை. செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அமித்ஷா தரப்பிலோ, நிர்மலா தரப்பிலோ விளக்கம் அளித்தால் தான் உண்டு.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பது தவறு. அவர்கள் அந்த கால கட்டத்திற்கு வருவதற்கே நிறைய காலம் எடுத்துக் கொண்டார்கள். 1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார் என்றால், அதற்கு முன்பாக எம்ஜிஆர் திமுகவில் எவ்வளவு உட்கட்சி பிரச்சினைகளை சமாளித்து வந்திருப்பார். 1967களிலேயே எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு பெரிய குரூப் முயற்சி செய்தது. அண்ணா தலையிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் உட்கட்சி பிரச்சினைகளை எல்லாம் அனுபவப்பூர்வமாக பார்த்துவிட்டுதான், அவர் 1972ல் அதிமுகவை தொடங்கினார். 1984 – 85 கால கட்டத்தில் ஜெயலலிதாவை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றாலும், அவரை புறக்கணித்தார்கள். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்சி கட்டுப்படும் என்கிற நிலையை அடைவதற்கு அவர்களுக்கு பல பல வருடங்கள் ஆகியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி இல்லை. 2016 தேர்தல் என்பது ஜெயலலிதாவின் வெற்றி. அதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி 4 வருடங்கள் இருந்தார். இனி அவர் தனியாக போராடி வெற்றி காண வேண்டிய ஒரு தேர்தல் காத்திருக்கிறது. 2021 வெற்றியிலும் பல தலைவர்கள் இருந்துள்ளனர். எடப்பாடி பார்த்தாலும் 70 இடங்கள் என்பது நல்ல வெற்றிதான். 2026 தேரதல் முக்கியம் என்கிறபோது எடப்பாடி பழனிசாமி தான் வளைந்து நெலிந்து போக வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உயரத்தை அவர் அடைந்துவிட்டார் என்றால்? அவர்களை போன்ற சகிப்புத் தன்மையை எடப்பாடி பழனிசாமி காட்ட வேண்டும் அல்லவா?
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது மிகவும் போட்டி மிகுந்த தேர்தலாகும். அதற்கு காரணம் நடிகர் விஜய். விஜய் பேக்டர் என்பது எத்ததை ஓட்டு. யாருடைய ஓட்டு என்று யாருக்கும் தெரியாது. எல்லாமே யூகம்தான். ஆனாலும் கடும் போட்டிதான் என்பது தெரிகிறது. ஏன் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுக்கிறார். கோபிச் செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனுக்கு சீட்டே கிடையாது. அவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படியான முடிவை எடுக்க முடியாது அல்லவா? ஏன் இந்த அவசரம்? எப்படி செங்கோட்டையனுக்கு வேண்டியவர்கள் டெல்லியில் இருக்கிறபோது, எடப்பாடிக்கு வேண்டியவர்களும் டெல்லியில் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்களா?
அப்படி என்றால் பாஜக கூட்டணியை விட்டே எடப்பாடி பழனிசாமி விலகப் போகிறாரா? இது செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிற போதுதான் தெரியும். செங்கோட்டையனின் வாதத்தை மலுங்கடிக்க செய்யும் விதமாக தம்பிதுரை, நான் கூட அமித்ஷாவை அடிக்கடி சந்திப்பேன் என்கிறார். மத்திய அமைச்சர் என்பது பெரிய பொறுப்பாகும். ஒரு கட்சியின் விவகாரம் தொடர்பாக அவர் உட்காருவாரா? அப்போது, அவர் அப்படிதான் உட்காருவார் என்று தம்பிதுரை சொல்வதை வைத்து யூகிக்க முடிகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.