விஜயிடம் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் உள்ளது. விஜய் என்கிற திரை நட்சத்திரம் வாயிலாக அவர்களிடம் அரசியல் உரையாடல் திணிக்கப்பட்டால், தனிநபர் மோகம் போய்விடும் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.


விஜய் பிரச்சார பயணம் குறித்து பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது :- நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். விஜயை ஒரு நடிகராக ஏற்றுக் கொண்டவர்கள் வந்தனரா? அல்லது அவரை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் வந்தனரா? என்கிற கேள்வி எழுகிறது. விஜய் ஷுட்டிங் நடைபெறும் இடம் எங்கே என்று மக்களுக்கு தெரியாது. தற்போது அறிவிக்கப்படும்போது மக்கள் பெருந்திரளாக வருகின்றனர். அவர்களுக்கு சந்தோஷம். பாட்டு போட்டு நடனம் ஆடுகிறார்கள். தமிழக அரசு மீதான விஜய்-ன் விமர்சனத்தை கடந்து, அவரது பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்கள் யார்? இந்த மக்கள் திரள் பொதுவாக இந்த ஆட்சியின் கீழ் வாழ்பவர்கள் தான். திராவிட கட்சிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு கொண்டிருக்கிற நிலையில், அதன் பலன்களை, நலத்திட்டங்களை அனுபவிப்பர்கள்தான். அதேவேளையில் இடஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்களின் பலன்கள் சென்றடையாத ஒரு தரப்பினரும், விஜய் தங்களுக்கு மாற்றம் தரப் போகிறார் என்று நினைக்கின்றனர்.

மகளிருக்கு ஆயிரம் கொடுப்பதை ஏன் சொல்லிக்காட்டுகிறீர்கள் என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தங்களை வழங்குகிறார். பள்ளியில் படித்து, அவர்கள் உழைத்து அதிக மதிப்பெண் எடுத்தவர்களை ஏன் விளம்பரப் படுத்துகிறீர்கள். அதை மறைமுகமாக செய்ய வேண்டியது தானே. துப்புறவு பணியாளர்களை பனையூரில் தனியாக சந்தித்து பேசியபோது ஏன் அங்கே கேமரா இருக்கிறது? காரணம் அதை நீங்கள் ஆதரிப்பதை வெளியே சொல்ல விரும்புகிறீர்கள். வீடுகளில் வேலை பார்க்கிற பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அரசு மாதந்தோறும் ஆயிரம் வழங்குகிறது. சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடைத்துள்ளது ஒரு ஆரோக்கியமான விஷயம். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய சொல்லலாம். ஆனால் திட்டத்தை கொச்சைப்படுத்துவது நல்ல அரசியல் அல்ல. விஜய், தான் வந்தால் நியூசன்ஸ் என்று ஒவ்வொரு மாவட்டமாக சென்று விளக்கிக் கொண்டிருக்கிறார். பேசுகிற 10 நிமிடங்கள் போக கூட்டத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

விஜய் தன்னுடைய பிரச்சார திட்டத்தை சனிக்கிழமைகளில் நடத்துகிறார். சனிக்கிழமை ஒரு வகையில் வேலை நாள் தான். பொதுவாக கூட்டங்கள் மாலை நேரங்களில்தான் நடத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் விஜய் ஏர்போர்ட் முதல் மரக்கடை வரை பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி, பேசும் வரை மக்களை கொடுமைப்படுத்தியுள்ளீர்கள். ஏர்போர்ட்டில் இருந்து பேரணியாக கூட நடத்திவிட்டு போங்க, ஆனால் அதில் பங்கேற்றவர்களின் முழக்கம் அரசியல் முழக்கமாக இருந்ததா? நீங்கள் வழிநெடுக அரசியல் முழக்கங்களை எழுப்ப செய்திருந்தால், அவர்களுக்கு ஒரு அரசியல் பயிற்சியாவது கிடைத்து இருக்கும். தவெகவை மற்றொரு திராவிட கட்சி என்று சொல்கிறார்கள். ஒரு திராவிட கட்சிக்கு காமராஜர் எப்படி கொள்கை தலைவர் ஆவார்? சரி அண்ணா, காமராஜர் கொள்கை தலைவர்கள் என்றாலும், எம்ஜிஆருக்கு என்ன கொள்கை இருந்தது? நடிகர் விஜயின் எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த நீதிக்கு தண்டனை என்கிற படத்தை தடை செய்ய முனைப்பு காட்டியவர் எம்ஜிஆர். கலைஞர் கைது நடவடிக்கை மற்றும் வட மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு என்கிற பெயரில் காவல்துறையினர் நடத்திய கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராக படம் எடுத்து இருந்தார்.

விஜய் பயன்படுத்துகிற அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் அதிமுகவுக்கான தலைவர்கள் ஆவர். அவர்களை பயன்படுத்துவதன் மூலமாக இன்னொரு அதிமுக தொடங்கப்பட்டு உள்ளது. தற்போதைய அதிமுகவின் காலம் முடிந்து, அதற்கு பதிலாக புதிய அதிமுக தொடங்கப்பட்டிருக்கிறது. விஜய் குறித்து பேசுகிற அரசியல் நோக்கர்கள், விஜய்க்கு பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லை என்கிற வாதத்தை முன் வைக்கிறார்கள். இந்த நியாயம் இதற்கு முன்னதாக பேசப்பட்டது. அண்ணா தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, ஆட்சிக்கு வர முயன்றபோது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ணையார்கள், தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்கள். விஜய்க்கு பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் தவெக-வின் கடைசி தொண்டனுக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவனை தலைவர் ஆக்குவீர்களா? உங்கள் கட்சியில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள். அவர்கள் குறித்த உங்களின் மதிப்பீடு என்ன? நாளைக்கு இவர்கள் தான் வேட்பாளராக போகிறார்கள். அல்லது பணம் சம்பாதிக்க தேவை இல்லாத அளவிற்கு பணம் வைத்திருப்பவர்களை தான் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா? காசு இல்லாதவர்கள் ஒரு வேளை வேட்பாளராக விரும்பினால், அவர்களை வேட்பாளராக நிறுத்துவீர்களா?

விஜய் பிராச்சத்திற்கு வந்த கூட்டத்தை பார்க்கிறபோது, தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய கூட்டம் அரசியல்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. இந்த இளைஞர்களை விஜய் ஏன் அரசியல்படுத்தவில்லை என்கிற ஒரு கேள்வி எழுகிறது. எனவே அவர்களை அரசியல்படுத்தப்பட வேண்டிய கடமை சமுதாயத்திற்கும் உள்ளது. தற்போதுள்ள ஆட்சி முறையில் அதிருப்தி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதனை சரிசெய்வது குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். விஜய் திமுகவை எதிரியாக கூறும் நிலையில், தவெக தொண்டர்கள் சீமானை எதிரியாக பார்க்கிறார்கள். மாற்றுக்கருத்துக்கள் உள்ளபோதும் சீமான் பொதுவெளியில் பேசுவது அரசியல் ரீதியான உரையாடலாகும். அது குறித்து நாம் பொதுவெளியில் விவாதிக்கலாம். ஆனால் தவெகவில் எதற்காக சண்டை போடுவார்கள். அதற்காகவாவது அவர்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும்.

ஒரு பெரிய இளைஞர் கூட்டம் அரசியல் களத்திற்கு வந்துள்ளது. விஜய் என்கிற நட்சத்திர அந்தஸ்தை வைத்து, அவர்களிடம் அரசியல் உரையாடல் திணிக்கப்பட்டால், அவர்களிடம் உள்ள தனிநபர் மோகம் போய்விடும். விஜய்க்கு ஒரு நோக்கம் இருக்கலாம். ஆனால் இந்த மக்களுக்கு நோக்கம் கற்பிக்க முடியாது. அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அதில் முதல் மாற்றம் நம்ம தெருவுக்கு விஜய் வந்துவிட்டார் என்பதாக கூட இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவர்கள் வாழ்க்கை பற்றி யோசிப்பதற்கு நமக்கும் பொறுப்பு உள்ளது. பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு விஜய் வருவார். வாக்குகளை பிரிப்பார் என்றோ, விஜய் வாக்குகளை பிரித்து நம்ம வெற்றி பெற வைப்பார் என்றோ எந்த கட்சி எதிர்பார்த்தாலும் தவறு. இந்த இளைஞரகள் தான் நாளைக்கு அரசியல் வெளியை பாதுகாக்க போகிறார்கள். எனவே அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


