கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசலால் விஜய்க்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அவர் பாஜக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- விஜய் தற்போது சக்கர வியூகத்திற்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார். அவர் சுதாரித்துக் கொள்ள வில்லை என்றாலே, பாஜகவை நோக்கி நகரவில்லை என்றாலோ, திமுக அவரை காலி செய்துவிடும். அவர் தொடக்கூடாத இடத்தை தொட்டுவிட்டார். திமுக ஆட்சியில் இருக்கிறபோது எவ்வளவு பலமுடன் இருக்கும் என்பது விஜய்க்கு புரியவில்லை. தன்னுடைய வலிமை, எதிரியின் வலிமை போன்றவற்றை எல்லாம் பார்த்துவிட்டு தான் அரசியல் என்கிற போருக்கு செல்ல வேண்டும். அது தெரியாமல் அரசியல் தானே என்று நினைத்து விஜய் போய்விட்டார்.
இனி அவரால் ஒரே நேரத்தில் திமுக, பாஜக என இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள முடியாது. இனி விஜய்க்கு திமுக என்கிற ஒரு எதிரி மட்டும் தான். அதை சமாளிக்க வேண்டும் என்றால், அரசியலில் இருக்க வேண்டும் என்றால் அவர், பாஜக உடன் சேர்ந்தால் மட்டும்தான் முடியும். அரசியலில் இது மிகவும் தீவிரமான டெவலெப்மெண்ட் ஆகும். இதற்கு மேல் அரசியலில் இருந்து விலகுவது என்பது சாத்தியமற்றதாகும். விஜயகாந்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தது போல ஒரு அரசியல்வாதி இருந்தாலும் புத்தி வந்திருக்கும்.
முழுக்க முழுக்க தனி மனித ஆளுமையில் நடைபெற்ற பிரச்சினையாகும். 2 வாரங்கள் இந்த கூட்டநெரிசல் நடைபெறாததுதான் ஆச்சரியமானதாகும். 5 ஊர்களில் தப்பியது தான் ஆச்சரியம். 6வது ஊரில் மாட்டியது ஆச்சரியமல்ல. இப்படி ஒரு கூட்டநெரிசல் நடைபெற்ற பிறகு ஒரு வழக்கமான அரசியல் கட்சியாக இருந்தால் இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வார்கள். ஆனால் எதற்காக தவெகவின் நிர்வாகிகள் ஓடி ஒளிகிறார்கள்?
தவெகவின் கொள்கை தலைவரான காமராஜரின் நினைவு தினம் அக்டோபர் 2ஆம் தேதி. அன்றைக்கு விஜயின் வீட்டில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து புகைப்படம் வெளியிட்டிருக்கலாம். ஆனால் கேரவனுக்கு ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள். 41 பேர் மரணத்திற்கு பின்னர் ஒரு வார காலம் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றுகூட அறிவிக்கவில்லை. காரணம் இவை எதுவுமே அவர்களுக்கு தெரியாது. அவர்கள் முழுக்க முழுக்க சினிமா ரசிகர் கூட்டம். விஜய் அடிப்படையில் ஒரு நடிகர். அதிகபட்ச அவருடைய அரசியல் அறிவு என்பது டயலாக் பேசுவதுதான்.
அது இவ்வளவு நாளாக பிரச்சினை இல்லாமல் ஓடியது. ஊர் ஊராக உங்களை தடி பார்த்தார்கள். சம்பவம் நடைபெற்ற பிறகு நீங்கள் வெளியிட்ட 4.5 நிமிட வீடியோவில் உங்களுக்கு வருத்தமோ, கழிவிறக்கமோ எதுவும் இல்லை. முதலமைச்சரை சுண்டிப் போட்டு சவாலுக்கு அழைக்கிறீர்கள். நடைபெற்ற சம்பவத்திற்கு நான் தார்மிக பொறுப்பேற்கிறேன் என்று ஒரு வார்த்தைகூட வரவில்லை. மாறாக நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் அரசு என்றும், உண்மை வெளியே வரும் என்று சொல்கிறார். இத்தகைய ஒரு குற்ற உணர்ச்சி எள்முனை அளவும் இல்லாத ஒருவர் அரசியல் கட்சித்தலைவராக வலம் வருவாரேயானால், அவரால் இந்த சமூகத்திற்கு ஏற்படுகிற தீங்கு என்பது கற்பனை செய்து பார்க்க முடியாததாக தான் இருக்கும். விஜய் ஒரு அரசியல்வாதியாக மிகவும் ஆபத்தானவர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. இப்படி எல்லாம் ஒரு மனிதால் இருக்க முடியுமா? என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும். விஜய் ஒரு அறிகுறி மட்டும்தான். அவர் பிரச்சினை அல்ல. விஜயை விட ஆபத்தானவர்கள் அவரை ஆராதிக்கின்ற கூட்டம். அவர்களை தான் சிவில் சமூகம் டீல் செய்ய வேண்டும். எந்த போலீசாரும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இவ்வளவு பெரிய கட்டுப்பாடு இல்லாத கூட்டம் இதுவரை இருந்தது இல்லை.
மக்கள் கருத்து விஜய்க்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. 2026 தேர்தல் மிகவும் கடினமானதாகத்தான் இருக்கும். அருதி பெறும்பான்மைக்கு தேவையான இடங்கள் 118. அந்த 118 இடங்களை தனித்து பெற்று ஆட்சியை தக்க வைக்க முடியும் என்கிற சொகுசை திமுக இழந்துவிட்டது. கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் அமையலாம். ஆனால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காயம்பட்ட விஜய், எந்த எல்லைக்கும் வேண்டும் என்றாலும் செல்வார். ஒருவேளை அவர் என்டிஏ கூட்டணிக்கு சென்று விட்டால், அது சுனாமி போன்றதாகிவிடும். திமுகவுக்கு எதிராக முடிவுகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். விஜய்க்கு எதிராக அதிகளவு விமர்சனங்களை வைப்பதும் ஆபத்தானது. இன்றைக்கு விஜய்க்கு தான் அட்வாண்ட்டேஜ் உள்ளது.
நாடு முழுவதும் சுழன்று அடித்துக்கொண்டிருக்கிற பாஜகவிடம் இருந்து தப்புவதற்கான கடைசி பெருஞ்சுவர் தமிழ்நாடு. ஆனால் அந்த பெருஞ்சுவரில் ஓட்டை விழுந்துக் கொண்டிருக்கிறது என்பதை திமுகவும், திமுக தலைமையும் நம்ப வேண்டும். தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகரும். முதல் சுற்றில் விஜய்க்கு கெட்ட பெயர் வந்திருக்கு என்று நாம் நினைக்கிறோம். இதேபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடைபெற்று இருந்தால் அது அவர்களுக்கு எதிராக திரும்பி இருககும். ஆனால் இன்றைக்கு விஜய்க்கு எதிராக தேவையான அளவு திரும்பாமல், திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. சதி கோட்பாட்டை பலரும் நம்புகிறார்கள். பொதுமக்களின் பார்வையில் திமுக தோற்றுக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற வாய்ப்புள்ள திமுக தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.