குரு மித்ரேஷிவா
கேள்வி: குரு எவ்வளவு உழைத்தும் என்னால் பணக்காரன் ஆகமுடியவில்லை. என்ன காரணம்?

செல்வம் உங்களைத் தேடி வருவதற்கு மிகப் பெரிய தடை எது?
நீங்கள்தான்.
குழம்பாதீர்கள். கோபப்படாதீர்கள். நீங்கள் செல்வந்தர் ஆகாமல் தடுக்கிற ஒரே ஆள் நீங்கள்தான்.
ஒருவரும் சொல்லாத. பெரும்பாலானோர் சொல்லித் தர விரும்பாத ஒரு பிரபஞ்ச ரகசியத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. எப்போதுமே அது நம்மை நோக்கி வந்த வண்ணமே இருக்கின்றன.
கையில் காசு இல்லாமல் கடன் தரவும் ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன் இப்படிச் சொல்கிறீர்களே என்கிறீர்களா?
இன்று உங்களுக்குச் செல்வம் சேரவில்லை. நீங்கள் ரொம்ப ஏழையாக பணக்கஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால், மிகப் பெரிய காரணம் ஒன்று உண்டு. அதைத் தெரிந்துகொண்டால் உங்களை நோக்கிய பணத்தின் பயணம் அன்ஸ்டாப்பபிள்!
ஒரு மனிதனுக்கு பணக்கஷ்டம் அல்லது செல்வம் ஏன் சேரவில்லை என்பதற்கு பற்பல காரணங்கள் சொல்லலாம். அதாவது, வியாபார யுக்தி இல்லை, திறமைஇல்லை,தொலைநோக்குப் பார்வை இல்லை,முன் கோபி, அதிர்ஷ்டம் இல்லை… அதனால் போய்விட்டது, இதனால் கிடைக்கவில்லை என்று அவரவருக்குத் தக்கபடி காரணங்களை அடுக்கலாம். அதெல்லாம் மிகச் சிறிய காரணிகள்தான். மூல காரணம் என்று ஒன்று உண்டு அதுதான் மிகப் பெரிய ரகசியம்.
இந்த ஒரு பண்பு மட்டும் உங்களுக்குள் வந்துவிட்டால் போதும் செல்வம் உங்களைத் தேடி வரும். நாம் எப்போதுமே இன்னொருவரின் வாழ்க்கையை எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பெரும்பாலும் அவர் நமது பக்கத்து வீட்டுக்காரர் ஆகவோ, நண்பராகவோ, உறவினராகவோ இருக்கலாம். அவர் தொழிலில் வளர்கிறார், மிகப் பெரிய செல்வந்தர் ஆகிவிட்டார், மாளிகை கட்டிவிட்டார், லக்ஸூரி கார் வாங்கிவிட்டார், பையன் அமெரிக்காவில் படிக்கிறான், நம்மிடம் இருப்பதைவிட சிறந்த நகை வாங்கிவிட்டார்.
இதையெல்லாம் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் உணர்வு உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறதா? இல்லை, அதைப் பார்த்து பொறாமைப் படுகிறதா? நான் இப்படி ஆக முடிய வில்லையே? என்று ஒரு சிறிய வருத்தம் வந்தால்கூட இது ஒரு மிகப்பெரிய தடையாக மாறிவிடுகிறது. உங்களை நோக்கி வந்துகொண்டிருந்த செல்வம் திகைத்துக் குழம்பி நின்றுவிடுகிறது.
குழப்புகிறீர்களே என்கிறீர்களா? ஒரு எளிய கதை மூலம் விளக்குகிறேன்.
பழனிச்சாமியும் முருகேசனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருபவர்கள். இருவரும் வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்து மரம் செடிகொடிகள் வளர்த்து வந்தார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் தண்ணீர் ஊற்றி, அதற்குத் தேவையான உரம் வைத்து நன்றாக பராமரித்து வந்தார்கள்.
மலர்களின் தேவதை பூமிக்கு வந்தது. முதலில் பழனிச்சாமி தோட்டத்திற்குள் சென்ற தேவதை, தன் சிறகுகளால் ஒவ்வொரு மொட்டாக தொட்டுத் தொட்டு பூக்கச் செய்தது. அத்தனை மரங்களும் பூத்துக் குலுங்கின.
முருகேசனின் தோட்டத்திற்குச் சென்றது தேவதை. அதே போல தன் சிறகுகளால் ஒவ்வொரு மொட் டாகத் தொட்டு பூக்கச் செய்துகொண்டிருந்தது. அப்போது முருகேசன் மிகவும் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தது.
முருகேசன் கவலையாக பழனிச்சாமியின் தோட்டத்தைப் பார்த்து,”ஹ்ம்ம்ம்.. அவன் தோட்டத்தில் எவ்வளவு மலர்கள் பூத்திருக்கிறது” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான். உடனே தேவதை, ‘ஓஹோ இவருக்குப் பூக்கள் பிடிக்காது போல, இவரது தோட் டத்தை பூக்க வைக்கலாம் என தவறு செய்ய இருந்தோமே. நல்ல வேளை, முன்பே தெரிந்துவிட்டது’ என்று நினைத்து பேசாமல் சென்றுவிட்டது.
பழனிச்சாமி தோட்டத்தில் மட்டும் பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு முருகேசன் பொறுமிக்கொண்டே இருந்தான்.
மறுமுறை தேவதை பூமிக்கு வந்தபோது, முருகேசனின் தோட்டத்திற்கு முதலில் சென்றது. ஒரே ஒரு மொட்டை மட்டும் பூக்க வைத்துவிட்டு பழனிச்சாமியின் தோட்டத்திற்குச் சென்றது. அங்கு பழனிச்சாமியோ, முருகேசனின் தோட்டத்தில் பூத்திருக்கும் ஒற்றை மலரை சந்தோசமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஒற்றை மலரின் சிரிப்பு அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது.
அவனது ஆனந்தத்தைக் கண்ட தேவதை பழனிச்சாமியின் தோட்டம் முழுவதும் பூக்களைக்கொட்டிவிட்டுச் சென்றது. தேவதை வந்து சென்றதையும் பூக்களைப் பூக்கவைதததையும் செடி மறைவில் ஒளிந்து நின்று பார்த்த முருகேசனுக்கு சங்கதி புரிந்துவிட்டது. அடுத்த முறை இந்த தேவதை வரட்டும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்று முடிவு செய்து இரவும் பகலும் தோட்டத்தை காவல் காக்க ஆரம்பித்தான் முருகேசன்
மீண்டும் தேவதை வந்தது. முருகேசனின் தோட்டத்தில் ஒற்றைச் செடியை மட்டும் பூக்க வைத்துவிட்டு பழனிச்சாமியின் தோட்டத்திற்குச் செல்ல முயன்றது. அப்போது மறைந்திருந்த முருகேசன் சட்டென்று தேவதையின் ரெக்கையைப் பிடித்துக்கொண்டான்.
பழனிச்சாமியின் தோட்டத்தைவிட என்னுடையது பெரியது. மரங்களும் பூச்செடிகளும் அதிகமாக இருக்கின்றன. இருவரும் ஒரே போலத்தான் தோட்டத்தைப் பராமரிக்கிறோம். ஆனால், என் தோட்டத்தை விட்டுவிட்டு பழனிச்சாமியின் தோட்டத்தை மட்டும் பூக்க வைக்கிறாய். இது என்ன நியாயம்?’ என்றான் முருகேசன்.
அதற்கு தேவதை. “முதல் முறை பழனிச்சாமியின் தோட்டத்தில் பூக்கள் பூத்ததைக் கண்டு நீ மிகவும் வருத்தமடைந்தாய். அதனால் உனக்குப் பூக்கள் பிடிக்காது என்று நினைத்து பேசாமல் சென்றுவிட்டேன். ஆனால், உன் வீட்டில் பூக்கும் ஒற்றைப் பூவைக்கூட கண்டு பழனிச்சாமி மிகவும் மகிழ்ச்சியடைவதைக் கண்டேன். அதனால் அவன் தோட்டத்தில் நிறைய பூக்கள் பூத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவானே என்று அவன் தோட்டத்தைப்பூக்கச் செய்தேன்” என்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நம்மைச்சுற்றி இருப்பவர்கள் செல்வந்தராக வாழ்ந்தாலும் சரி, அவர்களுக்குச் செல்வம் வருகிறது என்றாலும் சரி, அதை நாம் பார்க்கும்போது நமக்குள் ஏற்படுகிற வருத்தம் அல்லது பொறாமை, ஏமாற்றம் அல்லது ஏக்கம் இந்த மாதிரியான உணர்வுகள் எல்லாமே செல்வத்தைத் தடுக்கும் மிகப் பெரிய தடையாக மாறுகின்றன. இந்த உணர்வுகள் ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஒருவனின் வளர்ச்சியைப் பார்க்கும்போது நம்முடைய உணர்வு இந்த மாதிரி இருந்தது என்றால், இந்த உணர்ச்சி பிரபஞ்சத்தில் போய் மோதி, அதிர்வாக மாறி, மிகப் பெரிய ஒரு தடையை ஏற்படுத்திவிடும். இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
ஆகவே, நண்பர்களே, செல்வம் உங்களைத் தேடி வர வேண்டுமென்றால், நீங்கள் விரும்பிய வாழ்க்கை முறை அமையவேண்டுமென்றால், நம்மைச்சுற்றி யார் பணக்காரர்கள் ஆகிறார்களோ, பெரிய பொருட்கள் வாங்குகிறார்களோ, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்கிறார்களோ அவர்களைப் பார்த்து மகிழப் பழகுங்கள். பெரிய அளவில் அவர்களுக்குச் செல்வம் வந்தது என்றால் முதலில் சந்தோசமடையும் ஆள் நீங்களாக இருந்தீர்கள் என்றால் செல்வம் உங்களைத் தேடி வரும். இது தான் செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சூட்சுமம்.
எதனால் இப்படி என்று கேட்பீர்களேயானால், இதற்கு விஞ்ஞானப்பூர்வமாகவே ஒரு விளக்கம் தரலாம். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் ஒத்திசைவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது நான் வேறு, இன்னொருவர் வேறு அல்ல. எல்லாமே ஒரே உயிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா உயிர்ப்பொருளும் ஜடப்பொருளும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கிறது. Yes, the whole existence is connected, it is one harmonious unity.
இப்படி எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக ஒரே உயிராக இயங்கிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவருக்கு செல்வம் வருகிறது என்றால் அவர் யாரோ ஒருவர் அல்ல. அவரும் உங்கள் உயிருடன் ஒரு தொடர்பில் இருக்கிறார். அவருக்கு வந்த செல்வத்தை நினைத்து வருத்தம் ஏற்பட்டது என்றால் இந்தப் பிர பஞ்சம் என்ன நினைக்கிறது தெரியுமா? ‘ஓஹோ இவருக்கு செல்வம் வந்தது என்றால் வருத்தம் ஏற்படுகிறது; அதனால் இவருக்குக் கொடுக்க வேண்டாம்’ என்று நினைத்து உங்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதை நிறுத்திவிடும்.
இதைக் கேட்கும்போது, என்னடா இது ஒரு கட்டுக் கதை போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நூற்றுக்கு நூறு சதவிகித உண்மை. இயற் கையின் உண்மை.
இன்றிலிருந்து நீங்கள் யார் செல்வம் நிறைய வைத்திருக்கிறார்களோ அவர்களைப் பார்த்துச் சந்தோசப்ப டங்கள். அவர்களை மனதார வாழ்த்துங்கள், அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினையுங்கள். இப்படி நினைக்கும்போது உங்களையும் தேடி செல்வம் ஓடிவரும்.
குறிப்பாக, இதில் யார் யார் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றால் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோ அல்லது வீட்டுத் திணையில் உட்கார்ந்து கொண்டோ மற்றவர் வளர்ச்சியைக் கண்டு கிசுகிசுப்பவர்கள், வசைபாடுபவர்கள் எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்கள். இது போல யாரைப் பற்றி நீங்கள் புலம்பினாலும் திட்டினாலும் எரிச்சல்பட்டாலும் அல்லது பொறாமைப்பட்டாலும் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய செல்வம் உறுதியாக தடை செய்யப்படும். இது பிரபஞ்சத்தின் ரகசியம்.
அதனால், இன்றிலிருந்து பணம் காசு யாருக்குக் கிடைத்தாலும் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. உங்களைச் சுற்றி இருக்கக்கூடியவர்களுக்கு நல்லது நடந்தால், அதைப் பார்த்து சந்தோசப்படும் முதல் மனிதராக நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்றால், அத்தனை செல்வமும் உங்களைத் தேடி வரும்.
உங்களைத் தேடி நாடி ஓடிவரும் செல்வத்தை திறந்த மனதுடன் வரவேற்கத் தயாராகுங்கள்!
விஜய்க்கு எதிராக 2 சாட்சிகள்! தனி ரூம் ரகசியத்தை அம்பலப்படுத்தவா? பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேர்காணல்!


