திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவரது வாகனம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கியதால், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் விடுவிக்க, காவல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கோரியுள்ளனர்.

வாகனத்தை விடுவிக்க சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர், அஜித் குமாரிடம் ரூ. 10,000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அஜித் குமார் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அஜித் குமாரிடம் கொடுத்து அனுப்பினர்.
பாஸ்கரன் மற்றும் சுகுமார் லஞ்சமாக ரூ. 10,000 பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்சம் பெற்ற குற்றத்திற்காகச் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகிய இருவரையும் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது இருவரும் சிறை வைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது மக்களிடம் லஞ்சம் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள்…சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…


