திமுக ஆட்சியில் அங்கும் இங்கும் குறைகள் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உழைக்கிறார். அதை மக்களும் நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை என்று அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.


அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன், தன்னை அதிமுகவை சேர்க்க சொன்னதே பாஜக தான் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில அரசியல் பிளவு படுவதற்கும், சில அரசியல் கட்சிகள் பிறப்பதற்கும் காரணமாக இருப்பது பாஜக தான். செங்கோட்டையன் இவ்வளவு காலம் அமைதி காத்ததற்கு காரணம் அதிமுகவின் நன்மைக்காக என்று பார்த்தேன். ஆனால் இப்போது அவர் பேசுவது, அவர் பின்னால் பாஜக இருப்பதாகவே நான் பார்க்கிறேன். அதிமுகவின் மூத்த தலைவராக அவர் எப்போது பேசி இருக்க வேண்டும்? எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட விதிகளை, எடப்பாடி பழனிசாமி மாற்றினார். கட்சி தலைமை தொண்டர்கள் தீர்மானிக்கின்ற பிரத்யேக உரிமையை எடப்பாடி பறித்தார். அதற்கு பிறகு அவருக்கு பதவி கொடுத்தவர்கள், அவருடைய பதவியை காப்பாற்றி கொடுத்தவர்கள் என அத்தனை பேரையும் தூக்கி வெளியே போடுகிறார்.

நான் ஏறத்தாழ 20 வருடங்களாக இரவும், பகலாகவும் அதிமுகவுக்காக எழுதியவன், பேசியவன். நமது எம்ஜிஆர், நமது அம்மா நாளிதழ்களின் ஆசிரியர். ஜெயலலிதாவுக்காக எழுதியவன். எடப்பாடிக்காகவும் உழைத்தவன். அவர் அவற்றை எல்லாம் பார்க்கவில்லை. அதிமுகவை தன் கையில் வைத்துக்கொள்ள யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம் என்கிற தைரியத்தை எடப்பாடிக்கு கொடுத்தது பாஜக தான். பாஜக அப்படி தைரியம் கொடுக்க காரணம், அவர்களுக்கு காங்கிரசை போன்று இரு திராவிட கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டணி வைப்பதில் உடன்பாடு கிடையாது. எப்படியாவது இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்றை சிதைத்து விட்டு, அந்த இடத்திற்கு தாங்கள் வந்துவிட வேண்டும் என்கிற கனவும், கற்பனையும் பாஜகவுக்கு உண்டு. 2017ல் கவிழப் போன ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக. கவர்னரையே நடுவராக வைத்து இருவரையும் கைகோர்க்க வைத்து ஒன்றாக்கினார்கள். சசிகலாவின் கைகளில் கட்சி, ஆட்சி போகக்கூடாது என்பதிலும், தங்களுடைய பேச்சுக்கு கட்டுப்படுகிற ஒரு தலைமை தான் இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

1967க்கு ஒரு காங்கிரஸ், ஒரு திமுக. அதேபோல் இன்றைக்கு ஒரு திமுக, ஒரு பாஜக. திமுகவை அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. திமுக அச்சுறுத்தி, மிரட்டி அடக்க முடியாத இயக்கம். அது பவள விழா கண்டு கொண்டிருக்கிறது. இது பிளவு விழா கண்டுகொண்டிருக்கிறது. திமுக சித்தாந்தத்தை நம்பி நடத்துகிற கட்சியாகும். அது வேர் தளர்ந்தால் கூட, விழுதுகள் தாங்கி பிடித்துக்கொள்ளும். ஆனால் ஸ்டார் வேல்யூவை நம்பி நடக்கும் கட்சி வாழை மரம் போன்றது. ஒரு கட்டை தள்ளும். இன்னொரு கட்டை தள்ளும். வேகமாக காய்ச்சும், வேகமாக பூக்கும். ஆனால் வேகமாக முடிவுக்கு வந்துவிடும். அதிமுக, வி.ஹெச்.பி, இந்து முன்னணி போன்று, பாஜகவின் ஒரு கிளையாக மாறிவிட்டது. செங்கோட்டையன் டெல்லி போய்விட்டு வந்த பிறகுதான் பேச தொடங்கினார். எம்ஜிஆர் மீது பற்று இருந்தால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றியபோது பேசி இருக்க வேண்டும். அன்றைக்கு அவரும் ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தார்.

அதிமுக ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்ல அவசியம் இல்லை. பாஜக சொன்னாலே ஒன்றிணைத்து விடுவார். 2031லும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொன்னார். ஆனால் ஈரோட்டில் ஒரே ரெய்டில் அதிமுக பத்திரங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு டெல்லிக்கு ஓடினார். ஒரே சோதனையில் அவரை டெல்லிக்கு வரவழைத்து, டெல்லியில் இருந்து அமித்ஷா வந்து நாங்கள் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொன்னாரா? இல்லையா? அமித்ஷா கருத்து எதையாவது அவர் மறுத்து பேச முடிந்ததா? பாஜக ஒன்றிணைக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனிடமோ, ஓபிஎஸ் இடமோ பேச வேண்டாம். அவர்கள் எடப்பாடிக்கு உத்தரவு போட்டால் போதும். அவர் அப்படியே கேட்பார். ஆனால் பாஜக போடவில்லை. நயினார் நாகேந்திரன் நமக்கு இலக்கு 2029 என்கிறார். பிறகு எதற்காக அதிமுக உடன் கூட்டணி வைத்தீர்கள்? அதிமுக உடன் கூட்டணி வைத்து, கட்சியினரை பாஜக சார்புடையவர்களாக மாற்றுகிறார்கள். இந்த முயற்சிக்கு தான் செங்கோட்டையன் ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவர் உண்மையில் ஜெயலலிதா மீது பற்று கொண்டிருந்தால் அவர் 2022லேயே வெடித்திருக்க வேண்டும்.

விஜய், 2026 தேர்தலில் திமுக – தவெக இடையே தான் போட்டி என்று சொல்கிறார். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமா? இன்றைக்கு 40 தொகுதிகளையும் தன்வசம் வைத்திருக்கக்கூடிய கட்சி திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் கடின உழைப்பால் நாட்டின் சிறந்த முதலமைச்சராக இந்தியாவின் பிற மாநில தலைவர்களால் பாராட்டப்படுகிறார். அப்படிபட்ட கட்சியிடன் போட்டி என்றால், அதற்கு உங்களை தயார் படுத்திக் கொண்டீர்களா? 3 மாதத்திற்கு ஒரு முறை 3 நிமிடங்கள் வீடியோவில் பேசுகிறார். உள்ளரங்கு கூட்டங்களில் பேசுகிறார். பொதுஇடங்களுக்கு வருகிறபோது தன்னுடைய ரசிகர்களை எல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு சுய ஆலாபனை பாடுகிறார்களே தவிர, மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை என்றைக்கும் பேசியதில்லை. களம் அவருக்கு மிக சாதகமாக தான் இருந்தது. பிரதான எதிர்க்கட்சி பிளந்து கிடந்தது. திமுக நாளுக்கு நாள் வலிமை பெற்று வந்தது. திமுக ஆட்சியில் அங்கும் இங்கும் குறைகள் இருக்கின்றன. அவை எதிர்காலத்தில் சரிசெய்யப்படும். அதற்காக உழைக்கிறார் முதலமைச்சர். அதை மக்கள் நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை.

திமுகவினுடைய ஆட்சி நிர்வாகம், அவர்களுடைய பலமாக மாறி இருக்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜகவிடம் அடிமைபடுகிறார்கள். விஜய் நடத்திய பொதுக்குழுவில் நாட்டையே உலுக்கக் கூடிய எஸ்.ஐ.ஆர் குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். திமுக பொதுச்செயலாளரின் வயதை பார்க்காமல் அவருடைய உடல்நிலையை கேலி செய்தனர். முதலமைச்சரை தனித்து கேலி செய்வது. அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைப்பதை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். அதிமுக இன்றைக்கு அனைவரும் பொதுவான இயக்கமாக இல்லை. செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர். எம்ஜிஆர் நியமித்த பொருளாளரை எடப்பாடி தூக்கி வெளியே போடுகிறார். எதிர்க்கட்சிகளின் பலவீனமும் திமுகவுக்கு பலம். மேலும், திமுக அரசின் சாதனைகளும், அரசின் மக்கள் நலத்திட்டங்களும் திமுகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உண்டாக்கி கொண்டிருக்கின்றன. விஜய் சரியான அரசியலை முன்னெடுத்து, சரியான கூட்டணிகளை அமைத்தால் 2வது இடத்தை அதிமுகவிடம் இருந்து பிடுங்க வாய்ப்பு இருக்கிறது. அதை செய்வாரா? என்று எனக்கு தெரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


