spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

-

- Advertisement -

பா.சிதம்பரம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான ‘இந்து’. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது. அந்த நாளிதழின் வாயிலாக எனக்கு அறிமுகமான அரசியல் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்கள்தாம். நேரு அவர்களின் தோற்றம், பேச்சு மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எனக்கு அறிமுகமான முதல் அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்.

we-r-hiring

ஆங்கில நூல்களை வாசிக்கும் பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டேன். ஆங்கில நூல்கள் எனக்குப் புதுமையான பல செய்திகளை அறிமுகப்படுத்தின. உதாரணமாக, சோவியத் யூனியன், கம்யூனிஸ்ட் இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோஷலிசக் கொள்கை.

திராவிட இயக்கம், அதன் வரலாறு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம் போன்ற செய்திகளை நான் கல்லூரியில் படித்த காலத்தில் (1961-66) தெரிந்துகொள்ளத் தொடங்கினேன். ஆனால், அந்தச் செய்திகள் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 1962ல் நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.கழகம் 50 இடங்களை வென்றது, பரபரப்பாகப் பேசப்பட்டது, மக்களின் கவனத்தை ஈர்த்தது.

1965-ஆம் ஆண்டில் மொழிப் போராட்டம் எழுந்தபோது, நான் படித்துக்கொண்டிருந்த சென்னைச் சட்டக் கல்லூரி, ஒரு களமாக இருந்தது. இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்தது. ஆனால், அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை எனக்கு இல்லை. அது, பிற்காலத்தில் என்னை உறுத்தியது, அது துரதிர்ஷ்டம் என்று உணர்ந்தேன். அதற்குக் காரணம், நான் பிறந்து வளர்ந்த சமூகம் மற்றும் குடும்பச் சூழ்நிலை என்பதையும் உணர்ந்தேன்.

1967-ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடந்தபோது, நான் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்ததால் தமிழ்நாட்டில் இல்லை. தேர்தல் செய்திகளை உலகமெங்கும் பரப்பும் ஊடகங்களும் அப்போது இல்லை.

திரு சி.என். அண்ணாதுரை (அண்ணா) அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சராக 1967ல் பதவி ஏற்றார். 1968 என்று நினைக்கிறேன். முதலமைச்சர் அண்ணா, அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று Visiting Scholar (அறிஞர் – விருந்தினர்) ஆக வருகிறார் என்ற செய்திக் குறிப்பைப் படித்தேன். நான் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகம் அண்டை மாநிலத்தில் இருந்தது. ரயிலில் பயணம் செய்தால் 2 1/2 மணி நேரமாகும். அண்ணா அவர்களைப் பார்க்கலாமே என்று தோன்றியது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

யேல் பல்கலைக்கழகத்தில் எனக்கு யாரும் அறிமுகமில்லை. ஓர் அறிஞர், விருந்தினரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா என்றும் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், ஓர் அசட்டுத் துணிச்சலில் ரயிலில் பயணம்செய்து, யேல் பல்கலைக்கழகத்தை அடைந்து, விருந்தினர் இல்லத்தைக் கண்டுபிடித்து, அண்ணா அவர்கள் இருந்த இடத்தை அடைந்தேன்.

அந்த இடத்தில் விசாரித்தபோது, முதலமைச்சர் அண்ணாவின் தனிச் செயலாளர் சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ்., அவர்கள் இருக்கிறார் என்று அறிந்து, அவரைச் சந்தித்தேன். நான் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த, தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவன் என்று தெரிந்து, அன்புடன் வரவேற்று “உட்காருங்கள், முதலமைச்சர் விரைவில் வருவார்கள்” என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் அண்ணா வந்தார். சில நிமிடங்கள் மட்டுமே உரையாடல். அவருடைய எளிமை, பணிவு, கனிவு என்னைக் கவர்ந்தன. முக்கியமான பொருள்கள் பற்றி எதையும் நாங்கள் பேசவில்லை, பேசும் தகுதியும் எனக்கு இல்லை. “படித்து முடித்த பிறகு தமிழ்நாட்டுக்குத் திரும்ப வருவீர்களா?” என்று மட்டும் கேட்டார். ”ஆம்” என்று சொன்னேன். அதற்குப் பிறகு, அண்ணாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

அமெரிக்காவில் இருந்த காலத்தில், அந்தச் சந்திப்பை நான் பலமுறை அசைபோட்டிருக்கிறேன். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வர்க்கச் சூழ்நிலையில் வளர்ந்து, தமிழ் அறிஞராக, ஆங்கிலப் புலமை உடையவராக, எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, புகழ்பெற்ற பேச்சாளராக, ஏழை மக்களையும் இளைஞர்களையும் கவர்ந்து எழுச்சியூட்டிய அரசியல் தலைவராக அண்ணா எப்படி உயர்ந்தார் என்று பல நேரங்களில் சிந்தித்திருக்கிறேன். அந்த 1968-ஆம் ஆண்டு சம்பிரதாயமான சந்திப்புக்குப் பிறகு, திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி நான் அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.

1967-ஆம் ஆண்டு முதல் திராவிட இயக்கத்திலிருந்து கிளைத்த அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டை இடையறாமல் ஆண்டு வருகின்றன என்பது 1970 முதல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் என்ற முறையில் எனக்கு வியப்பையும் நெருடலையும் தருகின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

தி.மு.கழகத்தின் பங்களிப்பை நான் சிந்தித்துப்பார்க்கிறேன். பல நேரங்களில், தி.மு.கழகத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்திருக்கிறது; நானும் விமர்சித்திருக்கிறேன். சில கொள்கைகளில் தி.மு.கழகமும் காங்கிரஸ் கட்சியும் முரண்பட்டிருக்கின்றன. இன்றும் சில வேறுபாடுகள் உள்ளன. ஆயினும், தி.மு.கழகம் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை யாரும் மறுக்க முடியாது.

திராவிட இயக்கமும் தி.மு.கழகமும் மூன்று தலைமுறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் கீழ்கண்ட கருத்துகளை ஆழமாகப் பதித்திருக்கின்றன.

  1. சுயமரியாதை
  2. தமிழ்ப்பற்று
  3. பகுத்தறிவு
  4. சமூக நீதி
  5. தொண்டர்களின் பலமே, கட்சியின் பலம்

பிற்காலத்தில் கூட்டாட்சி, அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்துகளையும் தி.மு.கழகம் வலியுறுத்தியது. சுயமரியாதை, தமிழ்ப்பற்று மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றிலிருந்து விலகி, ஓர் அரசியல் கட்சி தமிழ்நாட்டில் வேரூன்றித் தழைக்க முடியாது என்பதை கடந்த 60 ஆண்டுகளின் வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் பரப்பப்பட்ட சில அடிப்படைக் கொள்கைகளைத் தி.மு.கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. என்பது அக்கட்சியின் நெகிழ்வுத் தன்மையையும், மீள்தன்மையையும் (Flexiblity. Resilience) குறிக்கின்றன. உதாரணமாக, மதச்சார்பின்மை (secularism) என்ற அடிப்படைக் கொள்கை. கடவுள் மறுப்பு என்ற நிலையிலிருந்து ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற நிலைக்கு மாறி. இன்று ‘ஒரு மதத்தைப் பின்பற்றுவதும் அதனுடைய வழக்கங்களைக் கடைப்பிடிப்பதும்’ தனி மனிதனின் உரிமைகள் என்ற நிலைக்கு தி.மு. கழகம் மாறியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

என்னைக் கவர்ந்த மாறுதல் ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி சோஷலிஸக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், தி.மு.கழகமும் சோஷலிஸக் கொள்கைகளை வலியுறுத்தியது.

பிறகு, 1991-ஆம் ஆண்டில், ‘திறந்த போட்டிப் பொருளாதாரம்’ (Open and competitive economy) என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. தி.மு.கழகமும் அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு 1996, 2006 மற்றும் 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றது. ஆட்சி அமைத்த பிறகு, புதிய பொருளாதாரக் கொள்கையைத் தி.மு.கழகம் பொறுப்போடும் திறமையோடும் செயல்படுத்தியது. 2024-25-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.79% என்பதே தலைசிறந்த சான்று.

தி.மு.க. இளைஞர் அணியின் வரலாற்றை நான் ஓரளவு அறிந்துள்ளேன். அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சலியாத உழைப்பையும் பங்களிப்பையும் நான் பல நேரங்களில் வியந்து பாராட்டியிருக்கிறேன். இன்று, தி.மு.கழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் பலர் தி.மு.க. இளைஞர் அணி என்ற பாசறையில் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நான் அறிவேன்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!தமிழ் மொழிப்பற்று என்ற கேடயமும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற போர்வாளும் தி.மு.க. இளைஞர் அணியின் ஆயுதங்கள் என்பது அதனுடைய வலிமை. இன்று, இளைஞர் அணிக்கு மேலும் வலிமை கூட்டுவதற்காகக் கலைஞர் நூலகங்கள், பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், நூல்கள் வெளியீடு என்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. இளைஞர் அணியின் செயல் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய கொள்கை ஆயுதங்களை உருவாக்கித் தருவதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் முதல் கடமை. ஆட்சிப் பொறுப்பில் மக்களின் ஆதரவுடன் அமர்ந்து ஆட்சி செய்வது என்பது அடுத்த கடமை. தன் முதல் கடமையை உணர்ந்து, தி.மு.க. இளைஞர் அணி புதிய முயற்சிகளை மேற்கொள்வதை நான் பாராட்டுகிறேன்.

‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ என்று கலைஞரின் நினைவாக தி.மு.க. இளைஞர் அணி ஓர் அமைப்பை நிறுவியிருக்கிறது. தி.மு.கழகத்தின் 75 ஆண்டுக்கால வரலாற்றை ஆவணப்படுத்தி, தமிழர்களுக்குத் தெரிவிப்பது என்ற செயல் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிடுகிறார்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பு தி.மு.கழகம், தி.மு.க. இளைஞர் அணியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளைச் சென்றடைய வேண்டும் என்று இம்முயற்சியை வாழ்த்துகிறேன்.

ஸ்டாலின் கையில் எடுக்கும் ஐடியாலஜி ஆபரேஷன்! மருது அழகுராஜ் நேர்காணல்!

MUST READ