பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இனி விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்களை கசிய விட மாட்டார்கள். அதற்கான பலத்துடன் அவர்கள் இல்லை. இனி திமுக கூட்டணியில் அதிகமான இடங்களையும் அவர்களால் கேட்க முடியாது. கடந்த தேர்தலின் போதே ஸ்டாலின், நன்றாக இடங்களை குறைத்துவிட்டார். இம்முறையும் அப்படியே செய்வார். பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருந்தது.
இருந்தபோதும் அவர்கள் கூட்டணிக்குள் ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவிகரமாக இருந்தார்கள் என்பதை ஸ்டாலின் தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு எடுத்துக் கூறுவார் என்று நினைக்கிறேன். பீகார் தேர்தலுக்கு பின்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பெரிய அளவில் பிரச்சினை செய்ய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியை பொருத்தமட்டில், எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று திட்டவட்டமாக சொல்லி விடுவார். அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக இடம்பெற்றிருந்தாலும், சீமான், விஜய் என மூன்று அணிகளாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால், அது திமுகவுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

திமுகவின் வெற்றி என்பது கடும் சவால் மிகுந்ததாகவே இருக்கும். விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தால் போட்டி கடுமையானதாக மாறிவிடும். அதிமுக – தவெக இணைந்தால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பாஜகவுக்கு தோன்றினால், அவர்கள் தாமாகவே அதிமுகவை, தெவக கூட்டணிக்கு செல்லும்படி ஆசிர்வதிப்பார்கள். காரணம் 2026ல் ஆட்சியை பிடிப்பது அவர்களுடைய நோக்கம் கிடையாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் அவர்களுடைய நோக்கமாகும். தவெக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பட்சத்தில் அது திமுகவுக்கு பாதிப்பாக அமையும். அதேவேளையில் விஜய் தனித்து நிற்பேன் என்று உறுதியாக இருப்பார் என்றால், அது திமுகவுக்கு சாதகம்.
கூட்டணி தொடர்பாக அவர்கள் இதுவரை பேசியது குறித்து கவலைப்பட தேவையில்லை. தேர்தல் நெருங்கும்போதுதான் உண்மையான கூட்டணிகள் வெளியே வரும். திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொல்கிற விஜய், அதிமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி அவர் கூட்டணி வைத்தால் அவர் மீதான நம்ப தன்மை போய்விடும். காரணம் அதிமுக ஆட்சியில் ஊழல்களே நடைபெறவில்லையா?

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை அதிமுக பெரும்பான்மை பெறும்பட்சத்தில், மகாராஷ்டிரா, பீகார் பாணியில் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அரசியலில் எடப்பாடி பழனிசாமியை பூஜியமாக்குவது தான் பாஜகவின் நோக்கமாகும். அதிமுக பூஜியமானால் தான், அவர்களால் 2வது இடத்திற்கு வளர முடியும். எனவே அதிமுக மீதான நம்பகத் தன்மையை சாகடிப்பதற்கு அனைத்துவிதமான வேலைகளையும் பாஜகவினர் ஈடுபடுவார்கள்.
பீகார் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதால், வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று பாஜகவினர் சொல்கின்றனர். இந்தியா கூட்டணி மாடல் வேண்டுமெனில் பீகாரில் தோற்றுவிட்டதாக சொல்லலாம். ஆனால், திமுக கூட்டணி தமிழ்நாட்டில் தோற்றுவிட்டதாக சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாது. ஆனால் பாஜக தரப்பில் அப்படி பிரச்சாரம் செய்யப்படும். அதற்கு திமுக தரப்பில் உரிய பதிலடி தராவிட்டால், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பீகாரில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அதிக இடங்களை தரக்கூடாது என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தரப்பில் அதிக இடங்களை கேட்பதற்கான தார்மீக உரிமை இல்லை. ஆனால் பாஜக, அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்கலாம். ஆனால் அப்படியும் எடப்பாடி பழனிசாமி ஏமாந்துவிட மாட்டார். காரணம் தன்னுடைய கட்சி அழிந்துவிட்டால், அதற்கு பிறகு தனக்கு எதிர்காலமே கிடையாது என்று அவருக்கு தெரியும். கட்சி இருக்கும் வரை நான் தான் பொதுச்செயலாளர் என்று இருக்கிறார். அதற்கு போட்டியாக உள்ளவர்களை எல்லாம் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார். அப்படி இருக்கும்போது பாஜகவை மட்டும் உள்ளே விடுவாரா? அப்படி விட்டால் என்ன ஆகும் என்று அவருக்கு தெரியும்.


