spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

-

- Advertisement -

தோழர் தியாகு

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

இந்திய நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, சிறை வரலாற்றில் – அது கொடுவதையின் முத்திரை பதிந்த ஆண்டு. விடுமை பெற்ற இந்தியாவில் மக்களின் விடுமை மிதித்து நசுக்கப்பட்டதும், குடியாட்சியமும் குடியாட்சியர்களும் இருட்டறையில் தள்ளப்பட்டதும் அந்த ஆண்டில் போல் வேறு எந்த ஆண்டிலும் இல்லை!

we-r-hiring

இந்திய நாடெங்கிலும் நெருக்கடிநிலைச் சூறாவளி 1975 சூன் 25ஆம் நாளிலிருந்தே தாக்கி நாசம் செய்துகொண்டிருந்தது என்றாலும் தமிழகமும் குசராத்தும் அதன் நுழைவைத் தடுத்துத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தன. அங்கே, ஜனதா மோர்ச்சா கூட்டணியும் இங்கே திராவிட முன்னேற்றக் கழகமும் மாநில அளவில் ஆட்சி புரிந்ததே காரணம்.

1976 சனவரி 8ஆம் நாள் மாநிலங்களவையில் உரையாற்றியபோது கூட, தலைமையமைச்சர் இந்திரா காந்தி இவ்விரு மாநிலங்களையும் ஒழுங்கின்மைத் தீவுகள் (islands of indiscipline) என்று வர்ணித்திருந்தார். மூன்று வாரம் தள்ளி, சனவரி 31ஆம் நாள், தி.மு.க. அரசும் மார்ச் 12 குசராத் அரசும் கலைக்கப்பட்டன. அன்றிரவு ஒரு நிகழ்ச்சியில் பேசத் தொடங்கும்போது, கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தார். பேச்சுக்கு இடையிலேயே அவருக்கு ஒரு துண்டுச்சீட்டில் ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை நீக்கம் செய்யப்பட்டு, சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. தி.மு.க., ஸ்தாபன காங்கிரசு, மார்க்சியப் பொதுமைக் கட்சி (சிபிஎம்) போன்ற கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தளைப்படுத்தப்பட்டனர். 1974ஆம் ஆண்டின் மிசா (MISA – Maintenance of internal Security Act) சட்டத்தின்படி அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த மிசா கைதிகளில் பெரும்பாலார் தி.மு.கழகத்தினராகவே இருந்தனர்.

நானும் என் தோழர் இலெனினும் அப்போது திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் இருந்தோம். கோ.சி.மணி, தாழை மு.கருணாநிதி, மா.மீனாட்சிசுந்தரம், துறவி இளங்கோ, மலர்மன்னன் இன்னும் பலர் மிசா சிறையாளர்களாக வந்து சேர்ந்தனர். கோ.பாரதிமோகன், பி.எஸ். தனுஷ்கோடி உள்ளிட்ட சில மார்க்சியக் கட்சித் தலைவர்களும் வந்து சேர்ந்தனர்.

அரசியல் கைதிகள் நீண்ட காலம் சிறைப்பட்டிருக்க நேரும்போது, ஒருசில அமைப்புமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது மரபு. ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர் மேயர் எனப்படுவார். ஒரு துணை மேயரும் செயற்குழுவும்கூட இருப்பதுண்டு. சிறையில் எழும் சிக்கல்கள், தேவைகள் குறித்து சிறை அதிகாரிகளுடன் பேசுவது, தமக்கிடையிலான சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வது, வேலைப்பகிர்வு செய்துகொள்வது போன்றவை எல்லாம் இந்தப் பொறுப்பாளர்தம் கடமைகள். நெருக்கடி நிலைக் காலத்தில் திருச்சி நடுவண் சிறையில் மிசா மேயராக இருந்தவர், தாழை மு.கருணாநிதி.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

அந்த நெருக்கடி காலத்திலும் ‘முரசொலி’ தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. கடுமையான தணிக்கையைச் சமாளித்து, அது நாட்டு நடப்பையும் கழகச் செய்திகளையும் ஏந்தி வந்தது. பல செய்திகளை மறைமுகமாகப் புலப்படுத்தியது. காட்டாக, ஒரு திருமணச் செய்தியை வெளியிட்டு, அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள் என்று பட்டியலிடப்பட்டிருந்தால், அவர்கள் சிறைப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மிசா சிறையாளர்களை நேர்காண வருவோர், ‘முரசொலி’ கொண்டுவந்து கொடுப்பது வழக்கமாயிற்று. அந்த ‘முரசொலி’யை முதலில் படிப்பது யார் என்ற போட்டியே நடக்கும்.

அரிதாக, அவசர விடுப்பில் சென்று திரும்புவோர் கொண்டுவரும் செய்திகளும் பெரிதும் விரும்பப்படும். தி.மு.க. அரசு கலைக்கப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் தோழர் ஏ.கே.கோபாலன் ஆற்றிய உரை எந்தச் செய்தியேட்டிலும் வரவில்லை. ஆனால், அது கமுக்கமாகச் சுற்றுக்கு விடப்பட்டது. தியாகராச காடு வெட்டியார் விடுப்பில் சென்று திரும்பும்போது, ஏகேஜி உரையின் படியை உள்ளே கொண்டுவந்து விட்டார். அது ஒவ்வொருவராலும் பல முறை படிக்கப்பட்டு, மிசா சிறையாளர்களிடையே ஓர் ஊக்க அலை பரவச் செய்தது.

மிசா சிறையாளர் வந்து ஒரு திங்களுக்கு மேலாகியிருந்தது. சென்னைச் சிறையில் நிலைமை சரியில்லை என்ற செய்திகள் அரசல் புரசலாக வரத் தொடங்கின. பிறகு சிறைக் கொடுமைகள் நிகழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டது. எங்களுக்குக் கிடைத்த செய்திகளை மிசா சிறையாளர்களுக்கு அனுப்பிவைத்தபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இருக்கவே இருக்காது’ என்று அடித்துச் சொன்னார்கள். அவர்கள் மேல் தவறில்லை. அவை உண்மையிலேயே நம்ப முடியாத செய்திகள்தாம்!

1977 பொதுத் தேர்தலுக்கு முன் நெருக்கடிநிலை தளர்த்தப்பட்டு செய்தித்தணிக்கை நீக்கப்பட்ட பிறகு, கருத்துரிமை ஓரளவு மீட்கப்பட்ட பிறகுதான் சென்னை சிறைக்கொடுமைகள் முழுமையாகத் தெரியவந்தன. ஆளுநர் பிரபுதாஸ் பத்வாரி முயற்சியால் அமைக்கப்பட்ட மு.மு. இஸ்மாயில் நீதிவிசாரணை ஆணையம் விரிவாக விசாரித்து அறிக்கை அளித்தபோது, அந்தச் செய்திகளைப் படித்தவர்கள் அதிர்ந்தார்கள். பிற்காலத்தில் அந்தச் செய்திகளை நான் ஜூனியர் விகடனில் ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ தொடரில் எழுதினேன்.

முதலாவதாக, சிறைப்பட்டோரின் மாந்தவுரிமைகளுக்கான போராட்டத்தில் சென்னை மிசா சிறைக்கொடுமைகளை எதிர்த்து நடந்த போராட்டத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. இரண்டாவதாக, கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் புயற்காலத்துக்கு எவ்வாறு முகங்கொடுத்து மீண்டு வந்தது என்பதும் என்னைப் போன்ற அரசியல் மாணவர்களின் கருத்துக்குரியதொரு பாடம். சற்றே விரித்துப் பார்ப்போம்.

1976 பிப்ரவரி முதல் நாள், தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள். தமிழ்நாடெங்கும் கழகத்தினர் தளைப்படுத்தப்பட்டனர். சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாநகர மேயர் சிட்டிபாபு உள்ளிட்ட 48 பேர் மாலை ஆறு மணிக்குப் பிறகு சென்னை நடுவண் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் சிறை வாயிலிலேயே திட்டும் வசவுமாக மோசமாக நடத்தப்பட்டு, உடைமைகள் யாவும் பறிக்கப்பட்டு, ஒன்பதாம் தொகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விளக்கில்லாத அறைகள், தரையில் தூசிப்படலம், காற்றில் கலந்த துர்நாற்றம், கொசுக்கடி, கரப்பான் பூச்சிகள், ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போக ஒரு மூத்திரச் சட்டி இத்தனைக்கும் இடையே அறைக்கு ஐந்தாறு பேர் அடைக்கப்பட்டனர். எல்லாவற்றையும் மறக்கடிப்பவையாக இருந்தன. குற்றக் காவலர்கள் உள்ளிட்ட சிறைக்காவலர்களின் கடுஞ்சொற்கள்.பிப்ரவரி முதல் நாள் இரவே ஒன்பதாம் தொகுதிக்குப் புது வரவாகக் கொண்டுவரப்பட்டவர், திரு மு.க.ஸ்டாலின். ஆட்சிக் கலைப்புக்குப் பின் கலைஞரைப் பார்த்த சிட்டிபாபு முதலான கழகத்தவர் சிறைப்படாமல் தவிர்ப்பதற்குத் திட்டம் சொன்னபோது, ‘அதெல்லாம் கூடவே கூடாது’ என்றார் கலைஞர். அவரது கட்டளை ஏற்று விரும்பிச் சிறைப்பட்டவர்களில் ஒருவர் ஸ்டாலின் அவர் அண்மையில் மணமுடித்தவர் என்பதை சிட்டிபாபு மறக்கவில்லை.

பிப்ரவரி இரண்டாம் நாள் இரவு, ஒன்பதாம் தொகுதியின் பூட்டிய கொட்டடிகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு, அதிகாரிகள் ஆணையின் பேரில் காக்கியுடுத்திய காவலர்களும் வெள்ளையுடுத்திய குற்றக் காவலர்களும் நடத்திய கொடுந்தாக்குதல் பற்றிப் பல முறை சொல்லப்பட்டு விட்டது. குறிப்பாக, ஸ்டாலின் மீது அடிவிழாமல் இயன்ற வரை காப்பற்ற சிட்டிபாபு எடுத்த முயற்சியைப் பற்றிப் பலமுறை பேசப்பட்டு விட்டது. நானும் எழுதியுள்ளேன், ஈண்டு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்.

1976 பிப்ரவரி 2 அறிக்கைக் குறிப்பேட்டில் சிறை அலுவலர் எழுதி வைத்த குறிப்பு இதுதான்: “ஒன்பதாம் பிளாக்கில் காவலில் வைக்கப்பட்டிருந்த மிசா கைதிகள் சிறை அறைகளுக்குள் செல்ல மறுத்தனர். எனவே, அவர்களை அறைக்குள் தள்ள இலேசான பலப்பிரயோகம் செய்யப்பட்டது. இது தகவலுக்காக.

இது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் பிறப்பித்த ஆணை: இவ்வாறு அவர்கள் மீண்டும் செய்தால், கடுமையான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கவும்; விதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொல்லவும்.’

சிட்டிபாபுவைப் பொறுத்தவரை அடித்தது போதும் என்ற மனம் அதிகாரவர்க்கத்துக்கு வரவில்லை. ஒரு நாள் விடியற்காலை, காவலர் ஒருவர் சிட்டிபாபுவின் அறைக்கதவைத் திறந்து. ‘டேய் சிட்டி, வாடா வெளியே’ என்று கூப்பிட்டார்! இதுகுறித்து சிட்டிபாபு தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்.

‘நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 12 இலட்சம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். நான் அத்தகைய தகுதியை இழக்காதபோதும் கூட எவ்வளவு மரியாதையாக அதிகாரத்துடன் கூப்பிடுகிறார்! என்ன செய்வது? காலச் சூழல் அப்படி!”

பிறகு, சிட்டிபாபுவை விட்டே குருதிக்கறை படிந்த அவருடைய உடைகளைத் துவைக்கச் செய்தனர் கறை நீங்கும் வரை! தன்னை அடித்துக் காயப்படுத்தியதன் தடயங்களைத் தானே அழிக்கும்படி செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி குறித்து சிட்டிபாபு எழுதுகிறார்:

‘புதுமையான நிகழ்ச்சி! ஜார் அல்லது சார்லஸ் அரசர்கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்!

எந்தக் கொடுங்கோலாட்சியும் மன்னராட்சியும் செய்யத் துணியாத கொடுமைகள் நெருக்கடிநிலை காலத்தில் தமிழ்நாட்டுத் தலைநகரம் சென்னை நடுவில் அமைந்த நடுவண் சிறையில் செய்யப்பட்டன.

நெருக்கடி நிலை காலத்தில், சென்னை நடுவண் சிறையில் கண்காணிப்பாளராக இருந்தவர் உண்மையிலேயே தன்னை மன்னர் என்றுகூட அல்ல, மன்னாதி மன்னர் (king of kings) என்று அழைத்துக்கொண்டார். மிசா கைதிகளைப் பார்த்து அவர் இப்படிச் சொல்வாராம்:

யோவ், நீங்கள்லாம் ஆளுங்கட்சில இருந்து நாட்டுக்கே கிங்கா இருந்தவங்க, இல்லையா? இந்த ஜெயிலைப் பொறுத்தவரைக்கும் நான் தான் கிங்! கிங் ஆஃப் கிங்ஸ்! புரியுதா?’

பிற்காலத்தில், நீதியரசர் இஸ்மாயில் தன் அறிக்கையில் எழுதினார்: ‘மெய்யாகவே சிறையைப் பொறுத்தவரை கண்காணிப்பாளர் மன்னாதி மன்னர்தான்! சிறை விதிகள் அவருக்கு அத்தகைய அதிகாரங்களைத் தந்துள்ளன.’

சிறைப்பட்டோரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதும், சிறை மீதான வெளி மேற்பார்வை உறுதியாக நிறுவப்படுவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும். மு.மு.இஸ்மாயில் மட்டுமல்ல, சிறை நிலைமைகள் பற்றித் தீர்ப்புகள் எழுதிய வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவர்களும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்குமுறை கொடுமைகளை நிறுத்தச் சிறைப்பட்டவர்களின் விழிப்புணர்வும் போராட்டமும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை சிட்டிபாபுவும் மற்ற மிசா தோழர்களும் உணர்ந்திருந்தார்கள். ஆனால் என்ன செய்வது? முதலில் செய்தி வெளியே சென்றாக வேண்டும். அதற்கொரு வழி உறவினர்கள், நண்பர்களின் நேர்காணல். ஆனால், அடிபட்டவர்களின் உடற்காயங்கள் ஆறும் வரை நேர்காணல் அனுமதிப்பதில்லை என்று சிறை நிர்வாகம் உறுதியாக இருந்தது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

நெருக்கடிநிலைக் கால கெடுபிடிகளுக்கு நடுவிலும் தி.மு.க. தலைமையும் கழக வழக்கறிஞர்களும் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் ஓரளவு பயனளித்தன. பிப்ரவரி 26ஆம் நாள், கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தமிழக ஆளுநரின் அறிவுரைஞர் தவேவுக்கு அனுப்பிய தந்தியில், மிசா கைதிகளை நேர்காண சென்னை சிறையில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதையும், சிறைக்குள் அக்கைதிகள் கொடிய முறையில் அடிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். மறுநாளே, சிறைத் துறைத் தலைமை அதிகாரியிடமிருந்து அறிக்கை கோரப்பட்டதுடன், சட்ட விதிகளின்படி நேர்காணல் அனுமதிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

சிறைத் துறைத் தலைமை அதிகாரி அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், ‘தி.மு.க.வைச் சேர்ந்த மிசா கைதிகள் சிறையில் அடிக்கப்பட்டதாகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் கூறப்படும் புகார்கள் ஆதாரமற்றவை. என்று கூறியிருந்தார். அதே போது, ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் மிசா கைதிகளைத் தி.மு.க.வை விட்டு விலகச் செய்யும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன என்பதற்கு இந்த அறிக்கையிலேயே அகச்சான்று உள்ளது:

சென்னை மத்திய சிறையில் காவல் வைக்கப்பட்டிருந்த 104 மிசா கைதிகளில் 41 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டனர் என்று எனக்குத் தெரியவந்தது…. மேல் நடவடிக்கைக்காக அவர்களின் கடிதங்கள் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன:

சிட்டிபாபுவிடமே ஒரு சிறை அதிகாரி சொன்னார்: ‘எல்லாரும் கட்சியை விட்டு விலகிவிட்டதாக எழுதிக் கொடுத்துடுங்க. இல்லைன்னா அவனவன் வீடு வாசல் பார்க்க முடியாது… ஆமா!’

எழுதிக்கொடுத்த சிலர், மற்றவர்களையும் எழுதிக் கொடுக்கத் தூண்டலாயினர். சிட்டிபாபு எழுதுகிறார்: ‘சாவின் வாசலில் அரசனும் வாழ்வுப் பிச்சை கேட்பது இயற்கைதானே!’ சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன் போன்றவர்கள், தாங்கள் எழுதிக்கொடுக்க மறுத்ததோடு மற்றவர்களையும் ஊக்கமூட்டி, உறுதியூட்டிய செய்தி மேலிடத்துக்குத் தெரிந்துவிட்டது. ஒரு சிறையதிகாரி வந்து எச்சரித்தார்:

‘எல்லாரும் கேட்டுக்கங்க. எழுதிக கொடுக்கறவங்களத் தடுக்கறது, அத இதச் சொல்லிக் கலைக்கறது தப்பு. யாராவது அப்படிச் செய்யறதாத் தெரிஞ்சது… அப்புறம் டவர் டிரம்பெட்டுதான்! ஆமா’

‘டவர் டிரம்பெட்டு’ என்றால் ‘டவரில்’ கொண்டுபோய் நிறுத்திப் புட்டத்தில் தடியால் அடித்தல் என்று பொருள்! ஒன்பதாம் தொகுதியில் இவை யாவும் நடந்துகொண்டிருந்தபோது, மு.க. ஸ்டாலின், முரசொலி மாறன், க. சுப்பு மற்றும் பலர் வேறொரு பகுதியில் தனித் தொகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரே சிறையில் இரு மிசா தொகுதிகளுக்கும் இடையே தொடர்பில்லாமல் வைத்திருந்தனர். இந்தத் தொடர்பற்ற நிலையை சிறைக் கண்காணிப்பாளர் பயன்படுத்திக்கொண்டு, கழகத்தைக் கலைக்கும் இழிவான உத்திகளைக் கையாண்டார்.

எழுதிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானோருக்கு விடுதலை ஆணை விரைந்து வந்துவிடவும் இல்லை. அவர்களையும் அரசாள்வோர் எளிதில் நம்பிவிடவில்லை என்பதே காரணம்.

சிறைத்துறை டிஐஜி, இரு மிசா தொகுதிகளையும் பார்வையிட்டு விட்டு எல்லா மிசா கைதிகளையும் ஒரே தொகுதியில் வைத்து விதிப்படியான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று ஐஜியும் ஆணை பிறப்பித்தார். ஆனால், சிறைக் கண்காணிப்பாளர் எந்தப் பரிந்துரையையும் எவர் ஆணையையும் மதிக்கவில்லை. அவருக்கு வேறு அரசியல் எசமானர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கம் இருந்தது. அவர்கள் இஸ்மாயில் ஆணைய விசாரணையில் அம்பலப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து, சிறைக்குள்ளேயே புதைத்து விடுவதுதான் அந்த நோக்கம். கழகம் இந்தச் சோதனையைச் சிறையிலும் வெளியிலும் வென்று, இறுதி நோக்கில் குடியாட்சியத்துக்கே வெற்றி தேடிக் கொடுத்தது.

பெரும்பாலான தளபதிகள் சிறையில் அடைபட்டிருந்த நிலையிலும், எஞ்சியவர்களும் வெளிப்படையாகச் செயல்பட முடியாதிருந்த நிலையிலும் கலைஞர் தனியொருவராகத் தாமே ஒரு படை போல் திறம்பட இயங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அவரே கையில் கழகக் கொடியேந்தி, அண்ணா சாலையில் துண்டறிக்கை கொடுத்துச் சென்ற செய்தி, குடியாட்சியத்தின் நாளங்களில் புதுக் குருதி பாய்ச்சுவதாக அமைந்தது.

குடும்பத்தினர் நேர்காண்பது சிறைப்பட்ட மிசா கைதிகளின் உள்ளத்திற்கு உரமூட்டும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைக் கலைஞர் தெளிவாக அறிந்திருந்தார். அதற்காகப் பொறுமையுடன் விடாப்பிடியாக எல்லா முயற்சியும் எடுத்தார். ஆளுநர், ஆளுநரின் அறிவுரைஞர்கள், அரசு அதிகாரிகள், இன்னும் மேலே… இந்தியத் தலைமையமைச்சர், உள்துறையமைச்சர்…இப்படி எல்லா நிலைகளிலும் அதிகாரக் கதவுகளை நேர்காணல் விண்ணப்பக் கைகள் ஓங்கித் தட்டின.

கலைஞர் அரசுக்கு அனுப்பிய தந்தியில், ‘நேர்காணல் அனுமதிக்கப்படுவதிலான காலத்தாழ்வுக்கு சிறையில் நடந்த கொடுமைகளை மறைக்கும் நோக்கமே காரணம்’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். தி.மு.க. மிசாக் கைதிகளின் உறவினர்கள் கலைஞரைச் சந்தித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்தினார்கள். கலைஞர், முன்னாள் அமைச்சர் இராசாராமை தில்லிக்கு அனுப்பி, உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியிடம் முறையிடச் செய்தார். மிசாவினால் துயரப்பட்ட மற்ற கட்சியினரும் வெளியில் தம்மாலான முயற்சிகளைச் செய்தார்கள். மிச்சமிருந்த நாடாளுமன்றத்தில் மிச்சமிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முடிந்த வரை குரல்கொடுத்தார்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

மற்ற சிறைகளில் போலவே சென்னைச் சிறையிலும் மிசா கைதிகளை நேர்காண அனுமதிக்காவிட்டால், சிறை வாயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகக் கலைஞர் எச்சரித்தார். அரசு அதிகாரி ஒருவர் கலைஞரைத் தொலைபேசியில் அழைத்து, “நீங்க உங்க ‘சன்’ ஸ்டாலினை இன்டர்வியூ பண்ணிக்கலாம். சிறைக் கண்காணிப்பாளருக்கு மனுக் கொடுத்தீங்கன்னா அவரு கிராண்ட் பண்ணுவார்.”

“அப்படியா? இந்த அனுமதி எனக்கு மட்டும்தானா? மற்ற மிசா கைதிகளையும் உறவினர்கள் பார்க்க அனுமதி உண்டா?”

“நீங்க மொதல்ல பார்த்துட்டு வாங்க, அப்புறம் மத்தவங்களுக்கும் கவர்ன்மென்ட்ல கன்சிடர் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்.”

“அப்படின்னா மொதல்ல அவங்களுக்குக் காட்டுங்க. பிறகு நான் பாத்துக்கறன். எல்லா மிசா கைதிகளையும் அவங்க உறவினர்கள் பார்க்குற வாய்ப்பு தரப்பட்ட பிறகுதான், நான் ஸ்டாலினைப் பார்க்கப் போறேன், சொல்லிடுங்க…”

ராஜகோபால் என்ற மிசா கைதிக்கு முதல் நேர்காணல், பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் நேர்காணல் நடந்துகொண்டிருந்தது. நீண்டு நீண்டு சென்ற 30 நாட்களுக்குப் பிறகு, சிட்டிபாபுவை அவர் குடும்பத்தினர் சந்தித்தனர். உணர்ச்சிகள் கொந்தளித்த அந்த நேரத்திலும் சிட்டிபாபு ஓர் அரசியல் கடமையைத் திறம்பட செய்து முடித்தார். ‘எழுதிக் கொடுத்த’ மிசா கைதிகளின் பட்டியலை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கமுக்கமாகக் கொடுத்தனுப்பிவிட்டார்.

சென்னைப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவர், மிசா கைதியாக இருந்தார். அவரை மட்டும் அவர் குடும்பத்தினர் பார்க்க வரவில்லை. விசாரித்துப் பார்த்தபோது கிடைத்த செய்தி: பெரியவர் தி.மு.க.விலிருந்து விலகிக்கொள்வதாக எழுதிக் கொடுத்த செய்தி எப்படியோ அவர் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டதாம். ‘கட்சியைக் காட்டிக் கொடுத்தவர் முகத்தில் விழிக்க விரும்பவில்லை’ என்று சொல்லியனுப்பிவிட்டார்கள்! எழுதிக் கொடுத்தது தவறுதான் என்று குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட பிறகுதான், அவரைப் பார்க்க வந்தார்கள்.

எல்லாரும் எதிர்பார்த்திருந்த ஒரு நேர்காணல், மார்ச்சு 3ஆம் நாள் நிகழ்ந்தது. ‘உரிய’ எச்சரிக்கை எல்லாம் சொல்லி ஸ்டாலினைக் கலைஞரைப் பார்க்க அழைத்துச்சென்றனர். ஸ்டாலின் முழுக்கை சட்டை அணிய வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் கையை மடக்கி விடக் கூடாது என்பது கண்காணிப்பாளரின் கண்டிப்பான ஆணை. பிப்ரவரி 2 கொடுந்தாக்குதலில் ஸ்டாலினுக்கு வலது முழங்கை முன்புறத்தில் ஆழமான இரத்தக் காயம் ஏற்பட்டிருந்தது. அது இன்னும் முழுமையாக ஆறவில்லை. இதை மறைப்பதற்காகவே முழுக்கை சட்டை!

நான் பிற்காலத்தில் 1989ஆம் ஆண்டு, ‘முரசொலி’ அலுவலகத்தில் கலைஞரைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, அவரிடமே இந்த சந்திப்பு பற்றிக் கேட்டேன். கலைஞர் சொன்னார்: “அவன் எப்போதும் அரைக்கை சட்டைதான் போடுவான். அன்று அளவுக்குப் பொருந்தாத முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு வந்திருந்தான். அவன் அடிபட்ட செய்தி முன்பே எனக்குத் தெரிந்திருந்தாலும் அந்த முழுக்கை சட்டையும் உண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டது.”

அந்தக் காயம் ஸ்டாலின் கையில் தழும்பாக நிலைத்துவிட்டது -‘மிசா மார்க்’ என்னும் ஓர் அங்க மச்ச அடையாளம்!

நெருக்கடிநிலைக் காலத்தில் மிசாவில் சிறைப்படுத்தப்பட்டாலும் அடிக்குத் தப்பிய மிகச் சிலரில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறனும் ஒருவர். அவர், கைது செய்யப்பட்டதில் ஏற்பட்ட தாமதமே காரணம். கலைஞரே காவல் துறையினரை அழைத்து மாறனை ஒப்படைத்தார். மாறன் வந்தவுடன் மற்றவர்களிடம் சொன்னார்:

“நமக்கு ஒரே வழிதான் துணிச்சலாக எதிர்த்து நிற்க வேண்டும். இல்லையேல் இதோடு நம்மை ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.”

ஒருவித நச்சுக் காய்ச்சலால் பொது மருத்துவமனையில் உள்நோயாளராக இருந்துவிட்டு சிறை திரும்பிய பின் மாறன் சில முயற்சிகளை முன்னெடுத்தார். மிசா கொடுமைகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை மிசா கைதிகளே சிறையிலிருந்து தொடங்கினார்கள் என்பது மாந்தவுரிமைப் போராட்ட வரலாற்றில் பொறிக்கவேண்டிய செய்தி.

முரசொலி மாறனும் மார்க்சியத் தோழர்களான கே.எம். அரிபட்டும் வழக்கறிஞர் சிவாஜியும் 1976 மே இறுதிவாக்கில் ஒரு முடிவுக்கு வந்தார்கள் பிப்ரவரிக் கொடுமைகளை உலகறியச் செய்ய வேண்டும். முதலில் இது தொடர்பாக ஒரு குறிப்பு வரைந்து, ஐநா மாந்தவுரிமை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பொறுப்பை சிட்டிபாபு ஏற்றுக்கொண்டார். சிவாஜி குறிப்பு வரைந்தார். அவரும் சிட்டிபாபுவும் அதை எட்டு படிகள் எடுத்தனர். ஏழு படிகளை சிட்டிபாபு வெளியே அனுப்பிவிட்டார். ஒரு படி மட்டும் சிவாஜியின் அறையில் இருந்தது.

ஜூன் நடுவில், தமிழக அரசின் உள்துறைத் தனிச் செயலர் சிறையைப் பார்வையிட வருவதாகத் தகவல் கிடைத்தது. உடனே அரிபட், நடராஜன், திருவேங்கடம் ஆகிய தோழர்கள் கூடிப்பேசி சிறைக் கொடுமைகள் குறித்து உள்துறைச் செயலரிடம் மனுக் கொடுக்கத் தீர்மானித்தார்கள். சிவாஜி எழுதி அனைத்துத் தோழர்களும் ஒப்பமிட்ட மனுவும் அவரது அறையில் இருந்தது.

ஜூன் 15 மாலை திடீரென்று வந்த கண்காணிப்பாளர், தோழர் சிவாஜியின் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டு சில ஆவணங்களைக் கைப்பற்றினார். ஐ.நா. மாந்தவுரிமை ஆணையத்துக்கு எழுதப்பட்ட குறிப்பும் உள்துறைச் செயலருக்கு எழுதிவைத்த மனுவும் சிக்கிக் கொண்டன.

கண்காணிப்பாளரின் சீற்றத்துக்கும் எச்சரிக்கைக்கும் அஞ்சாமல் அரிபட் சொன்னார்: “உறுதியாக எந்த விளைவையும் சந்திக்கத் தயார். என்ன முடியுமோ செஞ்சுக்கிங்க. நாங்க எதையும் சந்திக்கத் தயாராத்தான் வந்திருக்கோம். நீங்க என்ன செய்யணுமோ செஞ்சுக்கலாம்.”

எதுவும் செய்ய முடியாமல் கண்காணிப்பாளர் பின்வாங்கினார். மிசா கைதிகளைக் கட்சி அடிப்படையில் பிரித்தாள முயன்று அதிலும் தோற்றுப்போனார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிட்டிபாபு சிறையிலிருந்து இந்தியத் தலைமையமைச்சர் இந்திரா காந்திக்கு எழுதிய மடல் பிற்காலத்தில் இஸ்மாயில் விசாரணையில் சான்றாகப் பயன்பட்டது. சிட்டிபாபு எழுதினார்.

“இந்தியாவில் அரசியல் கைதிகள் இரக்கமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதவுரிமைகள் ஆணையம் கூறியுள்ள தீர்ப்புகளை சிட்னியில் ஓம் மேத்தா மறுத்துள்ளதை அண்மையில் செய்தித்தாள்களில் படித்தேன். அதுபோன்று மாண்புமிகு பன்சிலால், மண்புமிகு பிரம்மானந்த ரெட்டி உட்பட, பல அமைச்சர்கள் இந்தியாவில் அரசியல் கைதிகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். சிறைச்சாலையில் நாங்கள் படும் துன்பங்கள் குறித்து நான் விவரிக்கப்போவதில்லை.

ஏனெனில், மதிப்புமிக்க என் நண்பர்கள் இது குறித்து அவையில் ஏற்கெனவே பல முறை கூறியுள்ளனர். இது குறித்துச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை சில பொறுப்புள்ள அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்து கண்டறிவதற்கு, நீங்களோ இது வரையில் கவனம் செலுத்தாததுதான் எனக்குள்ள வருத்தம். சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய எதிர்க்கட்சிக்காரர்களும் மனிதத் தன்மை இல்லாத வகையில் மிக மோசமாக நடத்தப்பட்டது. இதுவே முதல் தடவை ஆகும். முழு அளவில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்குமாறு நான் உங்களை அறைகூவி அழைக்கிறேன்.”

சிட்டிபாபு இந்தக் கடிதம் எழுதிய அதே நாள் – 1976 ஜூன் 22 – தமிழக அரசின் உள்துறைத் தனிச் செயலர் கே.சுப்பிரமணியம் சிறையைப் பார்வையிட வந்தார். அவர் மாறனுக்கு நண்பர் என்பதோடு நேர்மைக்குப் பெயர்போன அதிகாரி. கண்காணிப்பாளரின் அறையில் உள்துறைத் தனிச்செயலருடன் தனித்துப் பேச மாறன் விரும்பினார். சிறையதிகாரிகளைக் கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, அவர் மாறன் சொல்வதைக் கேட்டுக்கொண்டார். பிறகு, மாறன் தொகுதிக்குச் சென்று எஸ்.எஸ். மாரிசாமி, கி.வீரமணி, கே.எம். அரிபட், சிட்டிபாபு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் திரும்பி வந்து அவர்கள் அனைவரும் உள்துறைத் தனிச் செயலரைத் தனித்துச் சந்தித்து மனுக் கொடுத்தனர்.

அதிகாரிகளுக்குத் தெரியாமல் அந்த மனுவை வெளியே எடுத்துப்போனார் சுப்பிரமணியம். உள்துறைச் செயலரிடம் முறைப்பாடு செய்தமைக்காக மிசா கைதிகள் பல வகையிலும் பழிவாங்கப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள், ‘தட்டுக் கவிழ்த்தனர்’ – இதுவே மிசா கைதிகளின் முதல் பட்டினிப் போர் ஆயிற்று. அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பெற்று, இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்தது.

சிறையில் மிசா கைதிகள் கையளித்த மனுவைக் காட்டாமலே உள்துறைத் தனிச் செயலர் எடுத்த நடவடிக்கைகள் சிறை நிலைமைகளில் ஓரளவு மாற்றம் கொண்டுவந்தன. கொடுமைகளின் மூலவரான சிறைக் கண்காணிப்பாளர் வித்யாசாகரன் உள்துறைத் தனிச் செயலரின் விடாமுயற்சியால் அனைத்து ‘அரசியல்’ தடைகளையும் மீறி வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். மிசா கைதிகள் நிம்மதியடைந்தனர் என்றாலும் பிப்ரவரிக் கொடுமைகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அதற்கான போராட்டம் தொடர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

இதற்கிடையில், மாறன் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்து வர அவருக்குச் சில மணி நேர விடுப்பு மட்டுமே தரப்பட்டது. சிறை திரும்பிய பின், அவருக்கு முதுகுத் தண்டுவடத் தட்டுகள் திடீரென நழுவி (slip disc) படுத்த படுக்கையாகிவிட்டார்.

இத்தனைக்கும் இடையே நீதி இறுதியில் வென்றே தீரும் என்ற உறுதியான நம்பிக்கை சிட்டிபாபுவுக்கு இருந்தது. எது எப்படியானாலும் நடந்தவற்றை எழுதி வைத்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற கடமையில் அவர் உறுதியாக இருந்தார்.

சிறைப்படுவதற்கு முன்பு சிட்டிபாபுவுக்கு நீரிழிவு நோயும் இதய நோயும் மூல நோயும் இருந்தன. 1970ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிழைத்தார். சிறை வதைக்குப் பின் புதிய துன்பங்கள் வளர்ந்தன. 1976 அக்டோபரில், பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது ஆசன வாயும் சிறுநீர்த் துவாரமும் சிறுத்துப்போயிருந்தன. உடனே அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருந்தது. கொடும் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோதே, சிறைக் குறிப்பேடுகளை மனைவியிடம் ஒப்படைப்பதில் குறியாக இருந்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  - மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

சிட்டிபாபு சொன்னார்: “நான் பொழைக்க மாட்டேன். என்னை நொறுக்கித் தூளாக்கிட்டானுங்க… உயிரோட வெளியே வந்தேன்னா பார்லிமென்டுக்குப் போய் சட்டையைக் கழற்றிக் காட்டாம விட மாட்டேன். இந்தக் காயங்களுக்குப் பதில் சொல்லியே ஆகணும்.”

நவம்பர் 22ஆம் நாள், சிட்டிபாபுவுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. படுத்த படுக்கையில் உயிருக்கான இறுதிப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நிலையிலும் அவரைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சியது.

1977 ஜனவரி 5 காலை சிட்டிபாபுவின் நிலை கவலைக்கிடமாயிற்று. மிகக் கடுமையான மாரடைப்பு தாக்கிற்று. கோபாலபுரம் இல்லத்துக்குத் தொலைபேசியில் தகவல் பறந்தது. கலைஞரும் ராசாராமும் விரைந்து வந்தனர். அவர்களைக் காண ஒரு முறை கண் திறந்து பார்த்துவிட்டுக் கண்மூடிக்கொண்டார் அன்பிற்குரிய பாபு. 8.50-க்கு உயிர் பிரிந்தது. துண்டில் வாய்பொத்திக் கலைஞர் அழுதார்.

முரசொலியில் (சென்னை 06.01.1977) மறையாத மாணிக்கப் பரிதி என்ற தலைப்பில் கலைஞர் எழுதிய மடலிலும்கூட அவர் மிசா கைதியாக இருந்ததையோ கொடுமைப்படுத்தப்பட்டு இறந்ததையோ நேராக எழுத முடியவில்லை. செய்தித் தணிக்கையின் காலமாயிற்றே!

ஆனாலும் கலைஞர் இடையிடையே எழுதிய சில வரிகள் உண்மைகளைக் குறிப்பால் உணர்த்தி நின்றன:

“சூழ்ந்து நின்று பத்துப் பேர் அடித்துத் துவைத்தாலும் வீழ்ந்து விடாத வீரத்திருவுருவம் ஆயிற்றே எங்கள் சிட்டிபாபுவுக்கு.”

“…தேக்கு மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்தது போலல்லவா சாய்ந்து கிடக்கிறான்?”

சிட்டிபாபு மறைந்த பதினாறாம் நாள். 20.01.1977 – தலைமையமைச்சரின் அறிவிப்பு வந்தது; நாடாளுமன்றம் கலைக்கப்படும், மார்ச்சில் பொதுத் தேர்தல் நடைபெறும். அடுத்த சில நாளில் மிசா கைதிகளின் விடுதலை தொடங்கிற்று.

1977 மார்ச்சில் பொதுத்தேர்தல் முடிந்து தில்லியில் ஜனதா அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பிரபுதாஸ் பட்வாரி சென்னைச் சிறைக் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் விரிவாக விசாரித்துத் தெளிவாக அறிக்கை தந்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சட்டப் பேரவையிலேயே அறிவித்தார். அவ்வளவுதான்! இன்று வரை!

1976-77 நெருக்கடிநிலை படர்ந்த சென்னை சிறைக் கொடுமைகளின் காலம் என்பது நாட்டின் வரலாற்றில் மனித உரிமைகளுக்கு இருட்காலமாக மட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் ஒரு புயற்காலமாகவும் நினைக்கப்படும்.

“உயிரோடிருப்பவர்கள் இறந்துபோனவர்களின் கண்களை மூடுகின்றார்கள். இறந்துபோனவர்கள், உயிரோடிருப்பவர்களின் கண்களைத் திறக்கின்றார்கள்!”

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க: உள்ளடக்கும் தேசியமும் பன்முகத்தன்மையும்!

MUST READ