2026 தேர்தலில் முறைகேடு செய்து, தொங்கு சட்டமன்றம் அமைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கூட்டணி ஆட்சியை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதிபட கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கான சூழல் ஏற்படவில்லை. ஆனால் இனிமேல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தம்பிதுரை சொல்லும் செய்தி, அமித்ஷாவுக்கான செய்தியாகும். அவர்களால் வெளிப்படையாக கூட்டணி ஆட்சி இல்லை என்று மறுக்க முடியவில்லை. ஆனால் அமித் ஷாவோ, நீங்கள் அருதி பெரும்பான்மை பெற்றால் தானே தனித்து ஆட்சி அமைக்க முடியும். என்னிடம் தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர், வாக்குப்பதிவு இயந்திரம் போன்றவை உள்ளன. இதை வைத்து உங்களை 60 இடங்களுக்குள் நிறுத்தி, பாஜக 40 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் வென்றால் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று நினைப்பார்.
3 சதவீதம் வாக்குகள் வாங்கிய பாஜக 11.5 சதவீதம் வாங்கியதாக சொன்னபோது ஏற்றுக்கொண்ட நீங்கள் 11.5 சதவீதம் 20 சதவீதமாக உயர்ந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்டிஏ கூட்டணி 25 சதவீதம், அதிமுக 25 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 50 சதவீதம் வாக்குகள் வந்துவிட்டது என்பார்கள். அதிமுக ஏற்கனவே 60 இடங்கள் வாங்கியிருக்கும் நிலையில், கூடுதலாக 10 இடங்களில் வரும்போது 70 ஆக உயரும். பாஜக 30 இடங்களிலும், விஜய் 20 இடங்களிலும் வெல்கிறபோது ஒட்டுமொத்தமாக 120 இடங்கள் வந்துவிடும். மூவரும் சேர்ந்தால் கூட்டணி ஆட்சியாகிவிடும். இதுதான் மோடி, அமித்ஷாவினுடைய கணக்கு.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு காரணம் நிதிஷ்குமாரை போன்று தன்னையும் பாஜகவினர் முதலமைச்சர் ஆக்கி விடுவார்கள் என்று நினைக்கிறார். இதனால் அதிமுக, பாஜக இணைந்து இந்த திட்டத்திற்குள் செல்கிறார்கள். இதன் மூலம் திமுகவை 100 இடங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விடலாம் என்றும் எண்ணுகிறார்கள். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திர மோசடியின் பலமாகும். இதை காங்கிரசில் உள்ள சில அதிமேதாவிகள் நம்ப மாட்டார்கள். ஆனால் மோசடிகள் நடக்கும். திமுக ஆட்சியில் இருந்து வெளியே போக வேண்டியது தான்.
மோடி, பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுவதாக சொல்வதன் அர்த்தம் அதுதான். அதிமுக – பாஜக கூட்டணி கடைசி வரை இழுத்துக்கொண்டே போகும். ஜனவரியில் விஜய் நிற்க வைக்கப்படுவார். அவருக்கு பெரிய அளவில் கூட்டம் இருப்பது போன்று கட்டமைக்கப்படும். அதிமுக – பாஜக ஆகியோர், மற்ற கட்சிகளை எல்லாம் கூட்டணி சேர்த்து 39 சதவீதம் வாக்குகள் வந்துவிட்டதாக பிம்பத்தை உருவாக்குவார்கள். எஸ்.ஐ.ஆர், வாக்குப்பதிவு இயந்திர மோசடி, வடமாநில தொழிலாளர்கள் மூலம் மோசடி செய்து தமிழகத்தில் வெற்றி பெறுவார்கள்.

ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை மீண்டும் என்டிஏவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை அமித்ஷா மேற்கொள்வார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால், என்டிஏவுக்கு இடங்களை கொடுத்துவிடுங்கள். நாங்கள் ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு இடங்களை பிரித்துக் கொடுத்துக் கொள்கிறோம் என்று அமித்ஷா சொல்வார். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்கிற சூழல் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி குறித்து தினகரன் இவ்வளவு பேசிவிட்டு மீண்டும் அவர்களுடனே கூட்டணி வைக்கும்போது, மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நேர்மையாக தேர்தல் நடைபெற்றால் அவர்களால் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். உண்மையாக தேர்தல் நடைபெறாவிட்டால் தொங்கு சட்டசபை அமையும். கூட்டணி ஆட்சிக்கான வழிபிறக்கும். ஈவிஎம் மோசடி நடைபெறும். பீகார் காற்று வீசும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 7 தொகுதிகளில் 5000 வாக்குகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றுள்ளது. 46 தொகுதிகளில் 5000 முதல் 10000 வாக்குகளுக்கு உள்ளாக வெற்றி பெற்றுள்ளது. 106 தொகுதிகளில் 10,000க்கும் அதிகமான வாக்குகள்ள வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூடுதலாக 7 தொகுதிகள் என 159 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளின் போது இந்த தொகுதிகளில் தான் எங்கு கூட்ட வேண்டுமோ அங்கு கூட்டுவார்கள். எங்கு குறைக்க வேண்டுமோ அங்கு குறைப்பார்கள். மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். அது வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதிரொலிக்கும். வெற்றி வாய்ப்பை அது பாதிக்கும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆர் விவகாரத்தில் ஓரளவுக்கு எச்சரிக்கையாக உள்ளனர். ஆனால் எஸ்.ஐ.ஆரில் என்ன செய்தாலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது தான் அதில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து நமக்கு தெரியும்.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் வாயிலாக தமிழ்நாட்டில் அதிகளவு பீகாரிகளை வாக்காளராக சேர்ப்பது தான் அவர்களுடைய திட்டமாகும். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக வசித்து, அவர்களுடைய குடும்பத்தினர் இங்கேயே இருக்கிறார்கள் என்றால் அவர்களை சேர்ப்பது நியாயமானது. ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு வந்தவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பு வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் என்ன தெரியும். அவர்களை ரயில்கள் மூலம் அழைத்துச்சென்று பீகாரில் வாக்களிக்க செய்தார்கள். தற்போது இங்கும் அவர்களை வாக்களிக்க செய்ய முயற்சிக்கிறார்கள். இதுதான் பாஜகவின் வெற்றிக்கான திட்டம். கோவையில் கமலஹாசனை தோற்கடித்ததே இந்த தில்லு முல்லு வேலைகள் தான்.
காங்கிரஸ் கட்சியில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவே உள்ளது. காங்கிரஸ், விஜயுடன் கூட்டணிக்கு செல்கிறது என்று ராகுல்காந்தி எப்போதும் சொல்லவில்லை. ஒருவேளை காங்கிரஸ், விஜயுடன் கூட்டணிக்கு சென்றால், சிறுபான்மை மக்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜயுடனோ, அதிமுக உடனோ கூட்டணி வைத்தால், அவர்கள் நம்பகத்தன்மையை இழப்பார்கள். ராகுல்காந்தி அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


