இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.


இந்தியாவின் மிகப்பெரிய நிதி கோட்டையான எல்.ஐ.சி நாட்டின் மொத்த முதலீட்டு சூழலை தானும் தாங்கி நிற்கும் ஒரு மிகப் பெரிய நிதி தூணாக பார்க்கப்படுகிறது. இந்த மகா நிறுவனத்தின் கீழ் உள்ள சொத்துகள் ரூ.57.2 லட்சம் கோடி.
இந்த அளவு (Assets Under Management ) AUM-ஐ நான்கு பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்துகளையும் சேர்த்தாலும் கூட அடைய முடியாது. ஆனால் இவ்வளவு பெரும் நிதி சக்தி, நாட்டின் பொதுமக்களின் சேமிப்புகள், ஓய்வூதிய நிதி, காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றின் மூலம் உருவாகிய இந்த பொது மூலதனம், தனியார் சில பெரிய வணிகக் குழுக்களின் உத்தரவுக்கே ஒத்துச் செல்வது போலத் தோன்றுவது கவலைக்குரியது மட்டுமல்ல, இது ஜனநாயக நிதி நிர்வாகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு போக்காகவும் பார்க்கப்படுகிறது.
Livemint வெளியிட்ட ஆய்வு, கடந்த 14 காலாண்டுகள் — அதாவது மூன்றாண்டுகளுக்கும் மேலாக — ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமங்கள் முன்வைக்கும் எந்த தீர்மானத்தையும் எல்.ஐ.சி எதிர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு தீர்மானத்திலும் “ஆம்” என்றே வாக்களித்துள்ளது.
ஆனால் இதே காலத்தில், பஜாஜ், டிவிஎஸ் போன்ற பழமையான தொழில்துறை குழுமங்களின் சில முக்கிய தீர்மானங்களுக்கு எல்.ஐ.சி “இல்லை” ” என்ற வாக்கை பதிவு செய்துள்ளது. இது இரட்டை நிலைப்பாட்டை உருவாக்குகிறது.
ஒரே கொள்கைக்கு இரு விதமான அணுகுமுறை? இது குறித்த குறிப்பிட்ட உதாரணமாக,
ஆகஸ்ட் 2023: முகேஷ் அம்பானி RIL நிறுவனத்தின் தலைவர்-கம்-முதன்மை நிர்வாக அதிகாரி பதவியை ஒருங்கே வகிக்க LIC ஆதரித்தது.
ஆனால், மார்ச் 2025: TVS மோட்டாரில் அதே இரட்டை பதவியை வேணு சீனிவாசன் ஏற்க முயன்றபோது, “உள் வழிகாட்டுதல்கள்” என்ற காரணத்தால் LIC எதிர்ப்பு தெரிவித்தது.
இரண்டு சம்பவங்களிலும் ஒரே வகை நிலைமை இருந்தபோதும், ஒன்று தவிர்க்க முடியாத ஆதரவு, மற்றொன்று ஆவணமற்ற கட்டுப்பாடு. இது வெறும் தளர்வான கொள்கை நடைமுறையா, அல்லது அரசியல்-வணிக ஒத்துழைப்பின் அடையாளமா? என்ற பெரும் கேள்வியை முன்வைக்கிறது.
எல்.ஐ.சி தனது வாக்கெடுப்பு கொள்கை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்திருந்தாலும், அது பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்கவில்லை.
பொது மக்களின் பணம், ஓய்வூதிய நம்பிக்கைத் தொகைகள், காப்பீட்டு பிரீமியங்களால் கட்டப்பட்ட இந்தப் பெரும் நிறுவனம் உண்மையில் யாருக்காக செயல் படுகிறது? காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காகவா, அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எல்.ஐ.சி போன்ற பொது நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சமநிலையான வாக்களிப்பு கொள்கையை பின்பற்ற வேண்டிய நேரத்தில், இது போன்ற ஒரு “தேர்ந்தெடுத்த ஆதரவு” ” போலத் தோன்றும் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிதி ஒற்றைச்செயல்முறை (financial capture) உருவாகும் முன்னோட்டமாகப் படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நிதி பீரங்கியாகிய எல்.ஐ.சியை யார் இயக்குகிறார்கள் என்பதைப் பற்றி கேள்விகள் கேட்கும் நேரம் இது. அரசு நிர்வாகமா? எல்.ஐ.சி இயக்குநர்களா? அல்லது அரசியல் ஆசீர்வாதம் பெற்ற சில வளமிகு தொழில் குழுக்களா? பதில் தேவைப்படுகிறது.
கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…


