திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விகாரத்தில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரசியலின் உள்நோக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற மனுதாரருடன், நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ள சிஎஸ்ஐஎப் படை வீரர்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அனுப்பிவைக்கிறார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மாநில அரசு முறையாக செயல்படாதபட்சத்தில், நீதிபதி மத்திய அரசுக்கு தான் உத்தரவிட முடியும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிஎஸ்ஐஎப் வீரர்களுக்கு நேரடியாக நீதிபதி உத்தரவிடுவது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மிகவும் அவசரம் அவசரமாக விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். மற்ற வழக்குகளையும் இதேபோன்று விசாரிப்பார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. ஒரு பேரிடர் நிகழ்ந்து பலர் இறந்து விட்டார்கள் என்றால் நீதிபதி நேரில் சென்று பார்த்துவிட்டு உத்தரவிடுவாரா?

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாஜக – ஆர்எஸ்எஸ்காரர்கள் போராடினார்கள். அங்கே சட்டத்தை மீறி போராடியவர்கள் மீதே இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அங்கே சட்டத்தையும் மீறி ஆன்மீகத்தில் தலையிடக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இங்கே, சட்டப்படி நடக்க வேண்டும் என்கிறார்கள். நீதிபதி யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இது எப்படி என்று புரியவில்லை. ஜி.ஆர். சாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீட்டிற்கு செல்கிறபோது, அவர்களுக்கு உத்தரவில் சந்தேகம் இருந்தால் மேல் நீதிமன்றத்திற்கு தான் அனுப்ப வேண்டும். ஆனால் தமிழக அரசு யார் மீது புகார் தெரிவித்ததோ, அவரிடமே மீண்டும் அனுப்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உள்ளார். இதற்காக அவர் மீது பொதுமக்கள் விமர்சனங்கள் வைப்பதையும் காண முடிகிறது. இந்த விவகாரத்தில் தவெக எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமானால் கருத்து சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகன் என்று ஆதரித்து போனால், பாஜகவை ஆதரிப்பதாக அமைந்துவிடும். மறுபுறம் முருகனுக்கு ஆதரவாக சென்றால் இஸ்லாமியர் எதிர்ப்பாக மாறிவிடும். எனவே கருத்து சொல்லாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறார்.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தை வைத்து கலவரம் செய்து, தேர்தல் நிலவரத்தை மாற்ற வேண்டும் என்பது பாஜக – ஆர்எஸ்எஸ்ன் திட்டமாகும். அதற்கு அனைத்து அடியாட்களையும் அந்த அந்த துறைகளில் வைத்து, ஒருங்கிணைத்து கொண்டுவந்து முட்டினார்கள். கடைசியில் மலை மீது தீபம் ஏற்றவிடவில்லை என்கிறபோது, அவர்கள் பாட்டிற்கு போய்விட்டார்கள். இது தேர்தலுக்கு முந்தைய தீபம் என்பதால் தான் அவர்கள் வந்தார்கள். அடுத்த வருடம் எல்லாம் அவர்கள் வர மாட்டார்கள்.
தேர்தலில் சீட்டு வாங்குவதற்கும், நான்கு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கும், அனைத்து பரிவாரங்களையும் கூப்பிட்டு இந்த வேலைகளை செய்வார்கள். தேர்தல் முடிந்ததும் எல்லோரும் தெறித்து ஓடிவிடுவார்கள். திருடனே, திருடன்… திருடன்… என்று கத்திக் கொண்டு செல்வார்கள். அப்போது உண்மையான திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல திமுக மதவாத அரசியலை கையில் எடுத்திருப்பதாக, பாஜகவினர் சொல்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரம் திமுகவுக்கு ஒரு பேரிழப்பாக அமையும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். ஆனால் இதனால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. அதன் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். நீதிமன்ற தீர்ப்பை வலதுசாரிகள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போதும், அவர்களால் மலை மீது தீபம் ஏற்ற முடியவில்லை. எனவே இது பாஜக – ஆர்.எஸ்.எஸ்-க்கு பெரும் தோல்விதான். இது இந்துக்களுக்கான தோல்வி கிடையாது. அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய வீடுகளில் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவார்கள்.
மதத்திற்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? மக்களிடம் அந்த தெளிவு உள்ளது. சிலநேரம் சிலர் அவர்களை நம்பி ஏமாந்து சென்றுவிடுவார்கள். விவரம் தெரிந்த பின்னர் அவர்களும் திரும்பி விடுவர். அனைத்து மதங்களிலும் இதுபோன்ற தீவிர வலதுசாரிகள் இருப்பார்கள். தங்களுக்கு சப்போர்ட் வரும் என்கிறபோது அவர்கள் எல்லாம் எழுந்து வருவார்கள். தோற்றுவிட்டால் பின்வாங்கி விடுவார்கள். இந்த வன்முறைகளின் மூலம் பாஜகவின் மதிப்பு கூடும். ஆனால் அது வெற்றி பெறுகிற அளவுக்கு இருக்காது. சலசலப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


