காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான நன்மையை கருத்தில் கொண்டே திமுக கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களின் வாதங்களை கட்சி தலைமை பொருட்படுத்தாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திமுக கூட்டணியில் 25 இடங்களுக்கு குறைவாக கொடுத்தால், காங்கிரஸ் மாற்று கூட்டணிக்கு செல்வது குறித்து யோசிக்க வாய்ப்பு உள்ளதாக மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்கிற எண்ணம் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எம்எல்ஏ சீட் தருவார்களா? என்பதே கேள்வி குறி. கடந்த முறை எம்.பி.சீட்டே தராதபோது, எப்படி எம்எல்ஏ சீட் தருவார்கள். இனி அவர் தன்னுடைய மகனுக்கு இடம் கேட்டால் வழங்க வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் திமுக கூட்டணியை விடுத்து, தவெக கூட்டணிக்கு சென்றால் வெற்றி உறுதியாக கிடைக்குமா? என்கிற கேள்வி எழுகிறது. தவெக வாக்குகள் கிடைத்துவிடும். ஆனால் காங்கிரசுக்கு வாக்கு வங்கி உள்ளதா? திமுகவில் நிற்பது அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தும். எனவே இடங்கள் குறைவோ, கூடுதலோ காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே தொடரும் என்பதுதான் என்னுடைய கணிப்பு. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால், அது திமுகவுக்கு தான் சாதகம். காரணம் அவர்களுக்கு தர வேண்டிய இடத்தை மாற்று கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க நிறைய கட்சிகள் உள்ளே வரும்.

காங்கிரஸ் இருந்தால்தான் திமுக கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்கள் நம்புவார்கள் என்று அக்கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன என்றால் திமுக இருப்பதால் தான் காங்கிரசையே மக்கள் நம்புகிறார்கள். காங்கிரசில் சில தலைவர்களை தவிர வேறு யார் இருக்கின்றனர்? பிரவீன் சக்ரவர்த்தி என்பவரே இப்போது தான் மக்களுக்கு தெரிகிறார். தமிழ்நாடு அரசியல் குறித்து அறிக்கையோ, தெளிவுரையோ கூறுகிற அளவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி இன்னும் இந்த அரசியலில் ஊறி வரவில்லை. திருநாவுக்கரசர் சொல்கிறார் என்றால், அவர் அப்படியான பாரம்பரியத்தில் ஊறிவந்தவர். ஆனால் பிரவீன் சக்ரவர்த்திக்கு அந்த பாரம்பரியம் எல்லாம் கிடையாது.
எதார்த்தத்தை பார்க்கிறபோது எல்லோரும் அவர் அவருக்கு வேலை பார்க்கிறார்கள். பிரவீன் சக்ரவர்த்தி மயிலாப்பூர் தொகுதியை எதிர்பார்க்கிறார். திமுக கூட்டணியில் தர மாட்டார்கள். ஒருவேளை தவெகவில் வழங்கலாம். அதனால் தவெக கூட்டணிக்கு தனது கட்சியை அழைத்துச்செல்ல பார்க்கிறார். காங்கிரஸ் என்பது தேசிய கட்சி. கூட்டணி குறித்து டெல்லியில் உள்ளவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். இவர் சொல்லி யாரும் முடிவு எடுக்க மாட்டார்கள். இன்றைக்கு அறிக்கை விடுகிறார். அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்றால்? அடுத்த ஒரு வருடம் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்.

காங்கிரஸ் தலைவர்களின் செயல்கள், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லா விட்டாலும் பரவாயில்லை என்கிற எண்ணம் திமுக தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். இது காங்கிரசுக்கு தான் நஷ்டம். காங்கிரஸ் தேசிய அளவில் ஏற்பட போகிற நஷ்டத்தை தான் பெரிதாக நினைக்கும். தேசிய கட்சிகளின் கேம் என்பது திமுக, அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும். எனவே இரு கட்சிகளும் அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி, 50 இடங்களில் தருவார்கள் என்று செய்திகளை அவர்களே கசிய விடுவார்கள். 234 தொகுதிகளிலும் விருப்பமனுக்களை வாங்குவார்கள். ஆனால் திமுக தரப்பில் உறுதியாக அவ்வளவு இடங்களை தர மாட்டார்கள்.
அப்படி இருந்தும் இந்த செய்திகளை கசிய விடுவதற்கு காரணம் இதுதான் தேசிய கட்சிகளின் அரசியல் ஸ்டைல் ஆகும். இதை தான் பாஜகவும் செய்யும். பாஜகவுக்கு கூட சில தொகுதிகளில் வாக்கு வங்கி உள்ளது. ஆனால் காங்கிரசுக்கு அப்படியான வாக்கு வங்கி கிடையாது. காங்கிரசுக்கு தொகுதிக்கு 2000 முதல் 5000 வாக்குகள் தான் உள்ளது. சில நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதியில் வாக்குகள் கூடுதலாக இருக்கலாம். அந்த தொகுதிகளை அவர்கள் கேட்பார்கள். ஆனால் 2000 வாக்குகளை வைத்துக்கொண்டு 50 சீட்டுகள் கேட்பது என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றதாகும்.

என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு இடங்களை கொடுத்து அவர்களை இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. மதுரையில் 8 தொகுதிகளில் அதிமுகவுக்கு 15 முதல் 30 சதவீதம் வரை வாக்குகள் உள்ளன. அதிமுக முக்கிய பிரமுகர்கள், பாஜக பிரமுகர்கள் அங்கே தான் போட்டியிட முயற்சி செய்வார்கள். அப்படி இருக்கும்போதும் ஒபிஎஸ், டிடிவிக்கு இடங்கள் தந்தால், அவர்களும் அங்கே தான் போட்டியிட முயற்சிப்பார்கள். இது சாத்தியமற்றது. ஒருவர் தங்களுக்கு சீட் தருவார்கள் என்கிற நம்பிக்கையில் தான் ஒரு கட்சியிலேயே சேர்வார்கள். செங்கோட்டையன், கோபி தொகுதியில் போட்டியிட சீட் கேட்ட பிறகுதான் அந்த கட்சியிலேயே சேர்ந்திருப்பார்.
இன்னும் தவெக, திமுகவுக்கு நிறைய பேர் செல்வார்கள். எல்லோருக்கும் உச்சபட்சமாக தங்களுடைய தொகுதியில் வெற்றி பெற முடியுமா? முடியாதா? என்பதுதான் கேள்வி. அரசியல்வாதி ஆகிவிட்டால் வெற்றி பெறாவிட்டால் யாருக்கும் மரியாதை கிடையாது. தங்களுடைய கட்சியில் புறக்கணிக்கிறார்கள் என்கிறபோது, மாற்றுக் கட்சிக்கு செல்வார்கள். அப்படி செல்லும்போது நிபந்தனை வைக்காமல் போக மாட்டார்கள். செங்கோட்டையனுக்கு கோபியில் சீட் கிடையாது என்பது உறுதியான பின்னர்தான் அவர் தவெக சென்றார். அவரை அப்படி செல்ல உந்தியது சொந்த வெற்றிதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


