பேராசிரியர் அ.இராமசாமி
1946 – 49ஆம் ஆண்டுகளில், வடக்கே – தில்லியில், இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிப்பதில் அரசியலமைப்பு அவை சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அரசியலமைப்பு அவை ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாளில், அதைக் கடுமையாக எதிர்ப்பதற்காகத் தெற்கே – சென்னையில், ஒரு புதிய அரசியல் கட்சியை ஒரு மாபெரும் தலைவர் தொடங்கினார். அந்த அரசியல் கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தலைவர், அறிஞர் அண்ணா.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950 சனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்பு, ஒன்றிய அரசு இந்தியைத் திணிப்பதில் முனைப்புடன் செயல்படத் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக, இரயில்வே நிர்வாகத்தினர், இரயில் நிலையங்களில் உள்ள ஊர்ப் பெயர்ப்பலகைகளில், இந்தியில் ஊர்ப் பெயர்களை எழுதத் தொடங்கினர்.

அதாவது, முதலில் இந்தியிலும் அடுத்து ஆங்கிலத்திலும், இறுதியில் தமிழிலும் எழுதினர். 1952 ஆகஸ்ட் முதல் நாள் 5,000 தொண்டர்களுடன் பெரியார், திருச்சி இரயில் நிலையம் சென்று, அங்கு பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழித்தார். அவர் சென்ற பின்பு, கலைஞர் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று, திருச்சி இரயில் நிலையத்திலும் அஞ்சல் நிலையத்திலும் பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர்.
அண்ணா தலைமையில் தி.மு.க.வினர் ஈரோடு இரயில்நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தனர். போராட்டம் தீவிரம் அடைந்ததால், நிர்வாகத்தினர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர். பெயர்ப்பலகைகளில் முதலில் இந்தி எழுத்துகளுக்குப் பதிலாகத் தமிழிலும், அடுத்ததாக இந்தியிலும், இறுதியாக ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினர்.
ஆனால், இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டத் தொடங்கியது. 1955 சூன் 7ஆம் நாள், பி.சி.கேர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சிமொழி ஆணையம், இந்தியைத் திணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியது. அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகள்மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோதுதான், 1959 ஆகஸ்ட் 7 ஆம் நாள் பேசிய, தலைமையமைச்சர் ஜவஹர்லால் நேரு, ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்’ என்றார். நேருவின் இந்த உறுதிமொழிகளை வரவேற்று, 1959 செப்டம்பரில் பூவிருந்தவல்லியில் நடைபெற்ற தி.மு.க. மாநாடு, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
ஆனால், நேருவின் உறுதிமொழிகளுக்குப் பின்பும், 1956ல் இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாகிவிடுமென்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் 1960 ஏப்ரல் 7ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆணையொன்றைப் பிறப்பித்தார். அதை எதிர்த்து, ஆகஸ்ட் மாதம் சென்னை வரும் குடியரசுத் தலைவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்தது. இந்நிலையில், இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் உறுதி கூறினார். அதே கருத்தைக் குடியரசுத் தலைவரும் தெரிவித்தார். நேருவும் தி.மு.க. உறுப்பினர் ஈ.வெ.கி.சம்பத்துக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய உறுதிமொழி காப்பாற்றப்படும் என்று மீண்டும் உறுதி அளித்தார். எனவே, கருப்புக்கொடி போராட்டத்தைக் கைவிடுவதாகத் தி.மு.க. அறிவித்தது.
ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்க வகை செய்வதற்கான சட்ட முன்வரைவை 1963 ஏப்ரல் 13ஆம் நாள், ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்ட முன்வரைவில், கருத்து வேறுபாட்டிற்கும் கடுமையான விவாதத்திற்கும்: இடமளித்த பகுதி, பிரிவு 3ல் உள்ள ‘May என்ற சொல்லாகும். இதன்படி, ஆங்கிலம் நீடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தியைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் ‘Shall’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இது, இந்தியைப் பயன்படுத்தியே ஆச வேண்டும் என்று பொருள் தருகிறது. எனவே ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற உறுதியை ஆட்சி மொழிச் சட்ட வரைவு தரவில்லை என்று தி.மு.க. கூறியது.

1963 மே 2ஆம் நாள், நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, ‘எந்த விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல், இந்தி திணிப்பை எதிர்த்துத் தி.மு.க. சளைக்காமல் போராடும். தெற்கு முழுவதிலும் ஒரு புரட்சியே வெடிக்கும்’ என்று எச்சரித்தார். எனினும், அண்ணாவின் எச்சரிக்கைக்கு பதில் எச்சரிக்கை விடுத்துப் பேசிய உள்துறை அமைச்சர், “எவ்வித நேரடி நடவடிக்கையிலும் ஈடுபடும் முன்பு, அண்ணாதுரையும் அவரது நண்பர்களும் அதுபற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், அண்ணா விடுத்த எச்சரிக்கை மிகக் குறைந்த காலத்திற்குள் -இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே உண்மையாகிப்போனது. அதனால், எண்ணற்ற உயிர்கள் பலியாகும் அளவிற்கும், ஏராளமான சொத்துகள் நாசமாகும் அளவிற்கும் ஒரு பெரும் புரட்சியை அரசு சந்திக்க வேண்டியிருந்தது.
1963 ஆம் ஆண்டு, ஆட்சிமொழிச் சட்டம் நிறைவைத் தராததாலும், 1965ல் இந்தியை ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியதாலும், தி.மு.க. இந்தியை எதிர்த்து ஒரு நெடிய போராட்டத்தை நடத்த ஆயத்தம் செய்துகொண்டிருந்தது. 1963 ஜூனில் சென்னையில் கூடிய தி.மு.க. செயற்குழு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கான திட்டங்களை வகுப்பதற்காகக் கலைஞர் தலைமையில் போராட்டக்குழு ஒன்றை நியமித்தது. போராட்டக்குழுவின் பரிந்துரைகளுக்கிணங்க தஞ்சையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அறிஞர் அண்ணா, “இப்போது நடைபெறுகின்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், நான்காவது போராட்டமாகும்” என்று குறிப்பிட்டார்.
தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழுத் தலைவர் கலைஞருக்கு வீரவாளும், கேடயமும் அளித்து அண்ணா பாராட்டினார். 1963 அக்டோபர் 13ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவைத் தீயிட்டுக் கொளுத்துதல், அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்தல் ஆகிய போராட்டத் திட்டங்களை அண்ணா அறிவித்தார்.
மாதம் ஒரு மாவட்டம் என்று தி.மு.க.வின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1963 நவம்பர் 16 ஆம் நாள் தொடங்கியது. அன்றைய தினம் சென்னையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவைத் தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்ததற்காக, அண்ணா கைதுசெய்யப்பட்டார். 1964 ஜனவரி 19ஆம் நாள் காஞ்சிபுரத்தில் ஐவர்; பிப்ரவரி 25 தூத்துக்குடியில் ஐவர்; மார்ச் 20 தென் ஆற்காடு மாவட்டத்தில் ஐவர்; மே 3 திருச்சியில் ஐவர்; நாகர்கோயிலில் ஐவர்; செப்டம்பர் 06 இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐவர்; அக்டோபர் 04 சேலம் மாவட்டத்தில் ஐவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவைத் தீ வைத்துக் கொளுத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். மேற்கண்ட மாவட்டங்களில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்ததற்காக நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கிடையே, கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற தி.மு.க. தொண்டர், திருச்சி புகைவண்டி நிலையத்தின் முன்பு “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!” என்று முழக்கமிட்டுக்கொண்டே தீக்குளித்து உயிர் துறந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் தீக்குளித்தவர் சின்னச்சாமிதான். அவரிட்ட தியாகத் தீ ஓராண்டு கழித்துத் தமிழ்நாடெங்கும் பற்றி எரிந்தது.
ஆனால், புயல் உருவாகிக்கொண்டிருப்பது பற்றி கொஞ்சம்கூட தெரியாமல், காங்கிரசுஅரசு இந்தி ஆட்சி மொழியாகும் நாளான 1965 ஜனவரி 26ஆம் நாளை ஒரு திருநாளாகக் கொண்டாடப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தது. எனினும் 1965 ஜனவரி 8ஆம் நாள் சென்னையில் கூடிய தி.மு.க. செயற்குழு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜனவரி 26ஆம் நாளைத் துக்கநாள் என்று அறிவித்ததுடன், அன்றைய தினம் கருப்புக்கொடிகள் ஏற்றி, கருப்புப் பட்டைகள் அணிவது என்றும் தீர்மானித்தது.
இந்நிலையில், கருப்புக்கொடிகள் ஏற்றும் தேசத் துரோகிகளை மக்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று முதலமைச்சர் பக்தவத்சலம் தெரிவித்தார். அந்த ‘மக்களும்’ காலிகள் உருவத்தில் புறப்பட்டனர். முதலமைச்சர் பேச்சும் செயலும் காவலர்களைத் தயார் செய்யாமல், கலவரங்களைத் தயார் செய்தன.
நிலைமையை உணர்ந்த அறிஞர் அண்ணா, பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டாம் என்றும், வீடுகளிலும் கட்சி அலுவலகங்களிலும் கட்டினால் போதும் என்றும், வன்முறைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்றும் அறிக்கைவிட்டார்.
ஆயிரம் இடங்களில் தி.மு.க. நடத்துவதாக இருந்த கூட்டங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. தி.மு.க.வின் கூட்டங்களுக்குக் காவலர்கள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தடையை மீறியாக வேண்டிய சூழ்நிலை உருவானது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதி தி.மு.க. பொருளாளர் சிவலிங்கம் ஜனவரி 26 ஆம் நாளும்; அரங்கநாதன் என்ற தி.மு.க. தொண்டர் ஜனவரி 27 ஆம் நாளும் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிர் துறந்தனர். ஜனவரி 26ஆம் நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிக்க தி.மு.கவினர் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அண்ணாவும் பிற தலைவர்களும் முதல் நாளே கைதுசெய்யப்பட்டு விட்டனர். போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருந்த அண்ணா, தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், திட்டம் நிறைவேறியதாகக் கருதி, கூட்டம் நடக்கவிருந்த இடத்தில், யாரும் கூடவேண்டாம் என்று ஏற்கெனவே அறிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், நிலைமை முதல் நாள் மாணவர் கிளர்ச்சியால் மிகவும் மோசமாக இருந்தது. காங்கிரசால் தூண்டிவிடப்பட்ட காலிகள், தி.மு.க.வினரைத் தாக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கில் தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தி திணிக்கப்பட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள்தான். எனவே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தி.மு.க.வினரிடம் விட்டுவிட்டு, அமைதியாக இருக்க மாணவர்கள் விரும்பவில்லை. அதனால், அவர்களும் நேரடி நடவடிக்கையில் இறங்கினர். களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கினர். ஜனவரி 08ஆம் நாள், தி.மு.க. போராட்டத்தை அறிவித்த ஆறுமணி நேரத்திற்குள்ளாகவே, சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் தலைவர்கள் கூடி, போராட்டத் திட்டத்தை வகுக்கத் தொடங்கினர்.
ஜனவரி 25ஆம் நாள் தொடங்கிய மாணவர் போராட்டம் மார்ச்சு 16ஆம் நாள் வரை, சரியாக 50 நாட்களுக்கு நடைபெற்றது. ஜனவரி 27ஆம் நாள், காவலர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு இராசேந்திரன் என்ற மாணவர் முதலில் பலியானார். மார்ச்சு 16ஆம் நாள், மயிலாடுதுறையில் சாரங்கபாணி என்ற மாணவர் தீக்குளித்து உயிர் துறந்தார்.
இந்தப் போராட்டத்தில் காவலர்களும் இராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டதில், நூற்றுக்கணக்கானோர் பலர் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர். கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் தனியார் சொத்துகள் சூறையாடப்பட்டன. தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அலுவலகங்கள், காவல் நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், ஜீப்கள், பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன காவலர்கள் தரப்பில் இரண்டு துணை ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். காவலர்கள் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை சுமார் 200 பேர் காயமடைந்தனர். தீக்குளித்து அல்லது நஞ்சுண்டு மட்டும் ஏழு பேர் உயிர் நீத்தனர். 10000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அதில் 16 வயதிற்கும் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 2000 ஆகும்.
தி.மு.க.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்னர். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கலைஞர் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்காம் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஒரு புரட்சியாக வெடித்த காரணத்தால்தான், ஆட்சிமொழிச் சிக்கலை மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முன்வந்தது. அதன் விளைவாக, 1963ல் இயற்றப்பட்ட ஆட்சி மொழிகள் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அவ்வாறு, 1967ல் ஒன்றிய அரசு இயற்றிய ஆட்சிமொழிகள் திருத்தச்சட்டம் ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்தது. அதற்கு, முழுமுதல் காரணம் 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டமே!
ஐந்தாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1963 ஆட்சிமொழிகள் சட்டத்தில் May என்ற சொல்லுக்குப் பதிலாக, Shall என்ற சொல்லைச் சேர்த்து, அந்தச் சட்டத்திருத்த முன்வரைவை ஒன்றிய அரசு 1967 நவம்பர் 27ஆம் நாள் கொண்டுவந்தது. ஆனால், இந்தி பேசும் மக்களின் கடுமையான எதிர்ப்பால், ஒன்றிய அரசு சட்ட முன்வரைவில், சில பிரிவுகளைச் சேர்த்து, அதை நீர்த்துப்போகச் செய்தது. மேலும், இந்தியைப் பரப்புவதற்கான ஒரு தீர்மானத்தையும் கொண்டுவந்தது.
அதை எதிர்த்து மாணவர்கள் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆனால், 1965ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கும், 1967ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக, 1965ல் முதலமைச்சர் பக்தவத்சலம் மாணவர்களைச் சந்தித்துப் பேச மறுத்துவிட்டார். அதுவே, போராட்டம் தீவிரமடைவற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால், 1968 ஜனவரி 5ஆம் நாள், சென்னையில் சட்ட அமைச்சர் மாதவன் வீட்டில் முதலமைச்சர் அண்ணா, மாணவர் தலைவர்களை வரவழைத்துப் பேசினார்.
மாணவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காகவே, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 1968 ஜனவரி 23ஆம் நாள், அண்ணா கூட்டினார். அந்தக் கூட்டத்தில் பேசும்போதுதான் அண்ணா, “மாணவர்கள் யார்? நம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை; நம் எதிர்காலத்தின் உருவங்கள்” என்று குறிப்பிட்டார். அந்தக் கூட்டத்தில்தான், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில், மும்மொழித் திட்டத்தை நீக்கிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று அண்ணா அறிவித்தார்.
அதன்பின், ஜனவரி 25ஆம் நாள் சென்னை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அண்ணா, “என்னாலானதைச் செய்துவிட்டேன்; இனி தில்லி தன்னாலானதைச் செய்துகொள்ளட்டும். நான் குறுக்கே நிற்கப்போவதில்லை. தியாகத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என முழங்கினார்.
எனினும், இந்தி வெறியர்கள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியைத் திணிக்கத்தான் செய்கின்றனர். அதை எதிர்த்து தி.மு.க. அவ்வப்போது போராடிவருகிறது. இப்போது, மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க.வும் போராடுகிறது; இனியும் போராடும்.
“Eternal vigilance is the price of liberty” (கண்காணிப்பே விடுதலைக்குத் தரவேண்டிய விலையாகும்) என்று வெண்டல் பிலிப்சு என்ற அறிஞன் குறிப்பிட்டான். அத்தகைய இமைப்போதும் சோராத கண்காணிப்பே தமிழைக் காப்பதற்குத் தமிழர்கள் தரவேண்டிய விலையாகும். அதனால்தான் கலைஞர், “இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்று முழங்கினார்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆட்சியிலும் அன்றாட வாழ்விலும் தி.மு.க. பாய்ச்சிய தமிழ்வெளிச்சம்!



