க.திருநாவுக்கரசு
திராவிட இயக்க ஆய்வாளர்
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து இருக்கிறது. வெனிசுலா தென்அமெரிக்க நாடுகளுள் ஒன்று. இது ஒருகூட்டாட்சி குடியரசு நாடு. இதன் தலைநகர் கராகஸ். இங்கே ஸ்பானிஷ் மொழிப் பேசப்படுகிறது. வெனிசுலாவின் மக்கள் தொகை சுமார் 3 கோடி. இந்நாட்டின் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும் மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. அந்நாட் டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தது மட்டுமன்றி அந்நாட்டு ஜனாதிபதியான நிக்கோலஸ் மடூரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரசும் கைது செய்யப்பட்டு கப்பல் மூலம் நியூயார்க் நகருக்கு கூட்டிச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதி மன்றத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
வெனிசுலா நாட்டுக்கு தனித்த இறையாண்மை உள்ளது. அந்நாட்டின் மீது இரணுவ நடவடிக்கை எடுப்பதும் அதன் ஆளுகிற தலைவரையும் அவரது மனைவியையும் கைது செய்வதும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது அமெரிக்காவை ஆளும் தலைவரான டிரம் இந்த நடவடிக்கையை வெனிசுலாவின் மீது எடுத்து இருப்பது அறமற்றது ஆகும்.

இதனால் உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. மௌனம் காக்கின்றன. வெளிப்படையாக அவை கருத்துச் சொல்ல முன்வரவில்லை. மோடியும் பேசாமல் இருக்கிறார். டிரம்ப் பின் நடவடிக்கை – அமரிக்காவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதல்ல -கண்டிக்கத்தக்கது என்று இதுவரை மோடி வாய் திறந்து சொல்ல வில்லை. அணி சேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கி வல்லரசுகளை நெறிப்படுத்திய பண்டித ஜவகர்லால் நேருவைப் பற்றி குறை கூற மட்டும் மோடி அணியினருக்குத் தெரியும்.
உலக நாடுகளுக்கு இடையே நேருவுக்கு இருந்த மதிப்பும் கவர்ச்சியும் மோடிக்கு இல்லை என்பது இப்போதைய வெனிசுலா பிரச்சினைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. நிக்கலோஸ் மடூரோவும் அவர் மனைவியும் கைது செய்யப்பட் டதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டித்து இருக்கின்றன.
அமெரிக்காவின் டிரம்ப் செய்யும் அதே அக்கிரமங்களை வேறு மாதிரியான வடிவத்தில் இரஷியா உக்ரைனிலும் சீனா தைவானிலும் செய்து வருகிறது. அது சில நாடுகளின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்தும் இருக்கிறது. அப்படி தனது ஏகாதிபத்தியத்தைக் கொலம்பியா, கிரீன்லாண்டு, மெக்ஸிகோ, கியூபா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா திணிப்பதில் வேகம் காட்டி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்கா வுக்கு தத்தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து இருக்கின்றன. இது அநியாயத்தில் ஒரு நியாயம் செய்தது போன்ற நடவடிக்கையாகும் என்றே நாம் கருதுகின்றோம்.
அமெரிக்காவின் டிரம்ப் என்ன குற்றம் சுமத்தி ஒரு ஜனாதிபதியையும் அவர் மனைவியையும் கைது செய்து இருக்கிறார். பேட்டை ரவுடிகளும் கேடிகளும் போதை பொருள் விற்று கைதாவ தைப் போல ஒரு வழக்கைப் போட்டு கைது செய்து இருக்கிறார் டிரம்ப். அதுவும் ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு நாட்டின் அதிபர் இராணுவ நடவடிக்கை எடுத்து கைது செய்து இருக்கிறார். இது எந்த வகையில் அரசியல் அறம் சார்ந்த நட வடிக்கையாகும் என்பது நமக்குப் புரியவில்லை.
இப்படி அமெரிக்கா எந்த ஒரு நாட்டின் மீதும் இராணுவ நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யலாம். அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கலாம். சிறையில் அடைக்கலாம் என்றால் அது நம் நாட்டிற்கும் பரவும் நட வடிக்கையாகக் கூட இருக்கலாமே. இப்போது அமெரிக்கா வெனிசுலா மீது எடுத்துள்ள இராணுவ நடவடிக்கை அபாயத்தின் முன்மாதிரியாகும். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது. அய்.நா. சாசனத்திற்கு முரணானது. இதை உலக நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். பதுங்கக் கூடாது என்பதே நமது ஆசை.
டிரம்ப் வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மடூரோ மீது நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று செய்தாரா? – என்றால், இல்லை. இதற்கு முன்பும் இலத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா வேறுவிதமான தலையீடுகளை மேற்கொண்டு வலுவிழக்கச் செய்து இருக்கிறது. ஆனால் வெனிசுலாவின் நடவடிக்கை ‘புதிய மோஸ்தரில்’ செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு காரணங்கள் தான் என்ன?
1.வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டலாம். பெரும் ஆதாயத்தைப் பெறலாம். அமெரிக்க ‘பெரியண்ணன் மனோபாவத்தை கெட்டிப் படுத்திக் கொள்ளலாம்.
2.அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் வெனிசுலாவில் உள்ள சீனாவின் செல்வாக்கை குறைக்கவும் இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
3.இலத்தின் அமெரிக்க நாடுகளில் எந்தெந்த நாடுகள் தனித்தும் வளத்தோடும் பலத்தோடும் இருக்கின்றனவோ அவற்றின் மீது ஏதாவது ஒரு வகையில் குற்றம் சாட்டி அமெரிக்க தலையீடு செய்வது 1989 ஆம் ஆண்டு முதல் வழமையாக நடந்துவரும் நிகழ்வுகள் ஆகும். அதை விட்டுப் போகாமல் ஆதிக்கம் தொடர அமெரிக்கா ஆக்கிரமிப்பை செய்து வருகிறது.
4.2014 ஆம் ஆண்டிலிருந்து வெனிசுலா 46% எல்லா வகையான ஆயுதங்களையும் இறக்குமதி செய்து இருக்கிறது. பொதுவாக இப்படிப்பட்ட ஆயுத இறக்குமதி வரிசையில் சீனா, இரஷியா, ஈரானுக்குப் பிறகுதான் அமெரிக்கா இடம் பெற்று இருக்கிறது.
5.இலத்தின் அமெரிக்க நாடுகளுள் வெனிசுலா சீனாவின் முக்கிய பங்காளியாக விளங்கி வருகிறது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை 300 பில்லியன் அளவுக்கு பண உதவிகள், மான்யங்கள், கடன்கள் என அந்நாடுகளுக்கு வழங்கி இருக்கிறது- சீனா!
6.சீனாவினுடைய உதவிகளினால் அந்தப் பகுதியில் அமெரிக்கா அதன் செல்வாக்கை இழந்துவிட்டது. சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
7.இதனால் வெனிசுலாவின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கிறது டிரம்ப்பின் அமெரிக்க அரசாங்கம்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இம்மாதிரியான ஆக்கிரமிப்பு நடைபெற்றது இல்லை.
மேலே நாம் எடுத்துக் கூறி இருக்கிற காரணங்களினால் அமெரிக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது அல்ல. 21 ஆம் நுற்றாண்டில் நாடு பிடிப்பது போன்ற நடவடிக்கையும் சர்வதேச சட்டங்களை மீறுவதும் உலக நாடுகளுக்கிடையே அமெரிக்காவின் மதிப்பை உயர்த்த உதவாது. இதை வீரமான நடவடிக்கை என்று எவரும் ஒப்புவதில்லை. இதை உலகம் அநாகரிகமான நடவடிக்கை என்றே பார்க்கிறது.
அமெரிக்கா வெனிசுலாவின் ஜனாதிபதியையும் அவர் மனைவியையும் கைது செய்ததுபழைய நடவடிக்கையாகி விட்டது. இப்போது செய்திகளில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக வெளிவந்து இருக்கின்றன.
1.மடூரோவை கைது செய்ததற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தின் கட்டுப்பாட்டை – முழுமையாக எடுத்துக்கொள்ள டிரம்ப் அரசு விரும்புகிறது. வர்த்தகத்தின் மூலம் வரும் வரவு அவரின் கட் டுப்பாட்டில் இருக்கும்.
2.டென்மார்க்குக்கு சொந்தமான கீரின்லாந்தைக் கைப்பற்ற டிரம்ப் புதுத்திட்டம் வகுத்து இருக்கிறார் என்கிற இந்த இரண்டு செய்திகளை அமெரிக்கா வெளியிட்டு இருக்கிறது.
டிரம்ப்பின் வேகம் எந்தப் புள்ளியிலும் குறைந்த பாடாகத் தெரியவில்லை. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏதாவது ஒரு அச்சுறுத்தலை அமெரிக்கா தெரிவித்துக் கொண்டே இருக்கிறது. ஐ.நா. சபையை அமெரிக்கா எப்படி மதிக்கும் என்பது உலக நாடுகள் அறிந்த இரகசியமாகும். இந்தியப் பொருள்களுக்கு 500% வரி போட்டு இருக்கிறது.இப்படி என்னென்ன அலங்கோலங்களை டிரம்ப் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
இரஷியாவும் சீனாவும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்ற நாடுகள் ஆகும். சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. திபேத்தை எடுத்துக் கொண்டு விட்டது. எல்லைப் புறங்களில் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருணாசலப் பிரதேசத்தில் உரிமைக் கொண்டாடி வருகிறது சீனா! பிரச்சினைகளுக்குரிய இரு நாடுகளான இரஷியாவும் சீனாவும்வெனிசுலா விஷயத்தில் அமெரிக்காவை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. மேலும் அவை போரையும் ஆக்கிரமிப்பையும் விரும்பும் நாடுகளாக இருக்கின்றன. உலக மக்கள் – நாடுகள் இந்த இருவரையும் எப்படி நம்புவர்?
அமெரிக்காவின் வெனிசுலா மீதான இரணுவ நடவடிக்கையும் இரஷிய, சீன ஆக்கிரமிப்பு செயல்பாடுகளும் மூன்றாம் உலகப் போருக்குக் காரணமாகி விடுமோ என்ற அச்சம் பொதுவாக உலக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் தோன்றிய நிலையில் ஆனந்தவிகடன் பொங்கல் சிறப்பிதழ் (14.01.2026) சில கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அவற்றை நம்புகிறோமோ இல்லையோ அவை இன்னும் போர் பீதியைக் கிளப்பி விடுகின்ற செய்திகளாகவே இருக்கின்றன. அவை என்ன என்பதை கீழ்க் காணும் குறிப்புகளைக் கொண்டு அறிந்து – கொள்ளலாம்.

(1)”பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட் ரடாமஸ் கணிப்புகள் பலரையும் அசைத்துப் பார்த்த ஒன்று . காரணம். அந்தக் கணிப்புகள் பலவும் நிஜமாகவே பின்னர் நடந்தேறின. 2026 குறித்தும் அவர் கணித்திருக்கிறார். ஏழு மாதங்கள் தொடர்ந்து பெரிய போர் நடைபெறும் என்பது அவரின் முக்கியமான கணிப்பு.உல கின் இரண்டு சக்தி வாய்ந்த தலைவர்களுக்கிடையே முரண்பாடு ஏற்படும். இருவரும் பின் வாங்கமாட்டார்கள். அதனால் நிகழும் போரில் மக்கள் வதைபடுவார்கள் என்பதாக இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் டிரம்ப் ஆக இருக்கலாம் என எவரும் எளிதில் கணித்துவிட முடியும். இன்னொருவர் ரஷியாவின் புதின் அல்லது சீனாவின் ஜி-ஜின்பிங்கா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது”
(2) பிரேசிலைச் சேர்ந்த அமானுஷ்ய உளவியலாளர் (பாரா சைக்காலஜிஸ்ட்) அதோஸ்சலோமே என்பவர், ‘வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அறியப்படுபவர். அவர் 2026இல் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் உள்ள பகைமை முற்றும்’ என்கிறார். உக்ரைன் போரில் ரஷ்ய அரசு கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலும், அது தனது முன்னேற்ற மடைந்த ஏவுகணை அமைப்புகளை ஆர்க்டிக் தளங்களுக்கு மாற்றும்’ என்று அவர் எச்சரிக்கிறார்.
(3) “பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பார்வைத் திறனற்ற பெண் ஞானியான பாபா வாங்கா என்பவரின் கணிப்பு இது – இந்த ஆண்டு பலரும் எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்கிப் பெருகும். நம் தினசரி வாழ்க்கையில் பல முடிவுகளை எடுப்பதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என்று அவர் சொல்லியிருக்கிறார். வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பொருள் நம் வளி மண்டலத்துக்குள் நுழையும் என்கிறார் அவர்.
மூன்றாம் உலகப்போர் இந்த ஆண்டு தொடங்கிவிடும் என்றும் கூறுகிறார். முன்னொரு காலத்தில் சீனா – தைவான் மோதல் உச்சத்தை அடையும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்று இவர் கூறியதெல்லாம் |அந்தந்த ஆண்டுகளில் நடந்துவிட்டதால் இவரது கணிப்பு பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிய நாடுகள், ‘குறிப்பாக சீனா பெரும் பலம் பெறும்’ என்கிறார் இவர். சக்தி மிகுந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் வெள்ளங் கள் போன்றவை இந்த ஆண்டில் உண்டாகும் என்கிறார்
நாம் மேலே மூன்று புள்ளிகளை மட்டும் தந்து இருக்கிறோம். இன்னும் சிலவும் ஆனந்த விகடனில் உள்ளன. நாம் அவற்றை வெளியிடவில்லை. இந்த மூன்று புள்ளிகள் கூட ஓர் அச்சத்தின் காரணமாக மக்களின் மனநிலையை எதிரொலிப்பவையே ஆகும். நாமும் நிலைமைகள் அக்கருத்துகளையே எதிரொலிப்பவைகளாக இருக்கின்றன என்றே சொல்ல வருகின்றோம்.
ஆக, அமெரிக்கா, இரஷியா, சீனா ஆகிய நாடுகளின் போக்குகள் சரியானவையாகத் தோன்றவில்லை. முதலில் அமெரிக்காவின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவின் பங்கு அதில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்து உலகின் முன் வைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நேரு வகுத்தளித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையான இரண்டு தூண்கள் முக்கியமாக அமைந்திருப்பதை அடையாளம் காண முடியும்.
(1) “நீண்ட நெடிய காலமாக மேற்கத்திய நாடுகளிடமும் அதன் அதிபர் அலுவலகங்களிலும் மனு கொடுப்பவர்களாக ஆசிய நாடுகளாகிய நாம் இருந்து வந்து இருக்கிறோம். இந்தக் கதை இப்போது பழைய வரலாறாக மாற வேண்டும். சொந்தக் கால்களில் நின்று, நம்முடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் அனைவருடனும் நாமும் ஒத்துழைக்க வேண்டும். மற்றவர்களின் கைப்பாவையாக நாம் இருந்து விடக் கூடாது. இத்தகைய சிந்தனையிலிருந்து தோன்றியதே அணிசேராக் கொள்கை”
(2)இரண்டாவதாக, உலக நாடுகள் இரண்டு குழுக்களாக அணிசேர்ந்து ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடும் போது, இன்னொரு உலகப் போர் உருவாகும் சூழ்நிலைக்கு அது இட்டுச் சென்றுவிடும்” இதுதான் நேருவின் கருத்து. அதிகாரத்திற்குப் போட்டி போடும் அரசியலோடு இணைந்து கொள்ளாமல் நடுநிலையாக இருப்பதற்கு உறுதி பூணும் அணிசேராக் கொள்கையின் முக்கியமான அம்சம் உருவாயிற்று”
இந்தக் கருத்தை நேரு 1947 மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆசிய மாநாடுகள் உறவுகள் மாநாட்டில் பேசினார். அதற்கு உருவமும் கொடுத்தார். ஓர் அமைப்பே தோன்றியது. பின்னர் அவருக்குப் பின் மறைந்துவிட்டது என்று சொல்லலாம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக நிலைமைகள் மாறின. இப்போது இன்றைய நிலவரத்திற்கு ஏற்ற நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன.
மூன்றாம் உலகப்போரின் அச்சுறுத்தல்கள் நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள படி அமெரிக்காவின் போக்கும் அதை எடுத்துக் காட்டுவதாய் இருக்கிறது. இந்நிலையில் இரஷியாவும் சீனாவும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இவையின்றி பிரிட்டன் போன்ற நாடுகளும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இது போதுமானதல்ல. இந்நாடுகளின் பின்னே செல்லாமல் மீதமுள்ள நாடுகள் அணிதிரண்டு வெனிசுலாவின் மீது எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா இந்த முறையையே பின்பற்றி உலக நாடுகளை – அதன் தலைவர்களை தனது அடிமைகளாக்கி விடும்.

வெனிசுலா இராணுவ நடவடிக்கை மூலம் டிரம்ப் தன்னை ஒரு மன நலம் குன்றியவராக உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரே முன்வந்து அதை நிருபித்துக்காட்டியிருக்கிறார் என்று ஆங்கில இந்து நாளேட்டின் (12.01.2026) வாசகர் ஒருவர் எழுதியிருக்கிறார். டிரம்ப்பின் பெரியண்ணன் மனோபாவத்தை அவர் உலகுக்குக் காட்டும் வேடத்தை கலைத்திட வேண்டும். இதை உலகநாடுகள் முக்கியநாடுகள் கூடி டிரம்ப்பின் சர்வாதிகார நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
மேலும் அமெரிக்கா வெனிசுலாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போல் ஈரானிலும் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அணிசேரா இயக்கத் தைத் தொடங்கிய நாடுகளுள் ஒன்றான இந்தியாவுக்கு இது பெரும் சங்கடமான தருணம். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்போது வெனிசுலா பிரச்சினையில் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை மோடி.

1939 செப்டம்பரில் ஹிட்லர் கொக்கரித்தது தான் இன்றைய தினம் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைப் பார்க்கிறபோது நமக்கு நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவை இப்படியே விட்டுவிட்டால் மூன்றாம் உலகப்போருக்கு அது வழி ஏற்பட்டுவிடும் என்று நாம் கருதுகின்றோம். உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக உரத்தக் குரல் எழுப்ப வேண்டும். அப்படி எதிர்க் குரல் எழுப்பவில்லையானால், கீழே கொடுக்கப் பட்டுள்ள வைர வரிகள் தான் நம் நினைவில் நிழலாடுகின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள்.
அவர்கள் முதலில் சோசலிஸ்டுகளைத் தேடிவந்தபோது
நான் பேசவில்லை
நான் சோசலிஸ்டு அல்ல.
அவர்கள் யூதர்களைத் தேடி வந்தபோது
நான் பேசவில்லை
நான் யூதர் அல்ல.
அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிவந்தபோது
நான் பேசவில்லை
நான் தொழிற்சங்கவாதி அல்ல
அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடிவந்தபோது
நான் பேசவில்லை
நான் கத்தோலிக்கர் அல்ல.
இறுதியாக அவர்கள் என்னைத் தேடிவந்தபோது
நான் பேசவில்லை
என்னைப் பாதுகாக்க யாருமே இல்லை.
– மார்ட்டின் நியே மொல்லர்


