மூ.அப்பணசாமி
“ஒரு பத்திரிகை என்பது ஒரு சிறந்த பரப்புரையாளர் மட்டுமல்ல அது ஒரு சிறந்த கலகக்காரன், மக்களை அணி திரட்டும் தலைவன். எங்கிருந்து தொடங்குவது,” – வி.ஐ.லெனின்.
“இவ்வளவு குறுகிய காலத்தில் கழகம் இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்தது எப்படி ? 1967ல் நாம் வெற்றிபெற்றபோது, இந்தக் கேள்விகளைத்தான் உலகம் வியப்புடன் கேட்டது! இதற்கு, நம்முடைய நாவலர் அவர்கள். மிக அழகாகப் பதிலளித்தார்கள்:-” வாய்மையே வெல்லும்; வாய்மையே வென்றது.

ஆம்; 1949 செப்டம்பர் 17ஆம் நாள், நம் கழகம் தோன்றியபோது, நம்மிடத்திலே எந்த வசதியும் கிடையாது; கையிலே காசில்லை. ஆனால், மனதிலே மாசில்லை! வாய்மைதான் நமது மூலதனமாக இருந்தது. மேடைகளிலே இலட்சிய முழக்கமிடுவதற்கு வாயும் ஏடுகளிலே இலட்சிய விளக்கம் செய்வதற்கு மையும் நமக்குப் பயன்பட்டன; இதைத்தான் நாவலர் அவர்கள், வாய்மை (வாய் +மை) என்று விளக்கினார்கள்! திராவிடர் கழகமானாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமானாலும் சரி, அது நம்பி இருந்ததெல்லாம் மேடையையும் ஏடுகளையும்தான்!” என்று ‘கழகக் குரல்’ (15. 09. 1974) இதழில் எழுதுகிறார் மா. செங்குட்டுவன்.
திராவிட இயக்கம் 1967 தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. அரசமைத்தபோது, அமைச்சரவையில் இடம்பெற்ற ஒன்பது பேரில் ஐந்து பேர் இதழாசிரியர்கள் என்பது வியப்பல்ல.
திராவிட இயக்கத்திற்கு என ஏன் தனி இதழ்கள் தேவை என்பது குறித்து, தந்தை பெரியார் கூறும்போது வேறு எந்தத் துறையையும் விட இதழ்கள் துறையில்தான் ஆரியத்தின் ஆதிக்கம் முழுமையாக இருக்கிறது. மூளைச் சலவை செய்துவருகிறது என்று கடுமையாக விமர்சனம் அதுதான் திராவிடர்களை மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஆரியர்களையும் செய்துவந்தார். 1946ல் ‘விடுதலை’ இதழ் மீண்டும் பெரியார் ஆசிரியத்துவத்தில் வெளியாகத் தொடங்கியபோது பெரியார் இவ்வாறு எழுதுகிறார்:
“வேறு எந்தக் காரியத்தில் ஆரியர்களுக்குள் சிறு அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும், இந்தப் பத்திரிகைக் கொடுங்கோன்மை அட்டூழியக் காரியங்களில் அவர்களுக்குள் பேத உணர்ச்சியே கிடையாது என்பது மாத்திரமல்லாமல், கட்டுப்பாடாய் ஒன்றுசேர்ந்து ஒரே மூச்சில் அவ்வப்போதைக்கு ஏற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்து திராவிடர்களை ஒழிப்பதில் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்துவதில் சிறிதும் பேதமில்லாமல் நடந்துவருகின்றனர்.
இந்தப் பத்திரிகை ஆயுதம் இந்தத் தன்மையில் அவர்களிடம் இருந்துவரும் வரையில் திராவிட மக்களின் அடிமைத்தன்மையும் சூத்திரத் தன்மையும் அதாவது, சமுதாயத்தில் இழிமக்களாகவும், சமயத்தில் நான்காம் அய்ந்தாம் மக்களாகவும், கல்வியில் 100-க்கு 90 பேர் தற்குறி (கைநாட்டு) களாகவும், பொருளாதாரத்தில் தினக்கூலித் தொழிலாளிகளாகவும், அரசியலில் அடக்குமுறை ஆட்சிக்கு உட்பட்டுத் தவிக்கும் மானமற்ற, ஒற்றுமையற்ற ஈன இன மக்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் தன்மையிலிருந்து மீள முடியவே முடியாது என்பது கல்லுப் போன்ற உறுதியாகும்.”
இந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை. பார்ப்பனிய – பனியாக்கள் கையில்தான் ஊடகங்கள் இன்றும் இருக்கின்றன. அது கோடி மீடியா என்றே அழைக்கப்படுகிறது. ஒரு சில திராவிட, அம்பேத்கரிய, பொதுவுடைமை இதழ்களும் சமூக வலைதளப் பதிவர்களும் இல்லாவிட்டால் உண்மையை மக்களுக்குச் சொல்ல இன்று ஒரு நாதியும் கிடையாது.
திராவிட இயக்க இதழியல் வரலாறு 1847 முதலே தொடங்கினாலும் அதிகாரபூர்வமான திராவிட இயக்க இதழியல் வரலாறு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. திராவிடன் நாளிதழ், Non Brhamin நாளிதழ், Justice நாளிதழ், ஆந்திர பிரகாசனி நாளிதழ் ஆகியன நீதிக்கட்சி சார்ந்து தொடக்கத்தில் செயல்பட்டவை. மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தந்தை பெரியார் தொடங்கிய இதழ் குடி அரசு, பின்னர் விடுதலை நாளிதழ், உண்மை, ரிவோல்ட் ஆகிய இதழ்களுக்கும் தந்தை பெரியார் ஆசிரியராக இருந்தார்.
திராவிட இயக்க முன்னோடி இதழ்கள் 14, திராவிட இயக்க இதழ்கள் 257 என மொத்தம் 271 இதழ்கள் வெளிவந்துள்ளதாக திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் க.திருநாவுக்கரசு கூறுகிறார். ‘1947ல் 40-க்கும் அதிகமான ஏடுகள் நம் இயக்க இளைஞர்களால் நடத்தப்படுகின்றன’ என அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் பெருமையுடன் எழுதுகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட பின் இது 200-க்கும் அதிகமாகியது. உலக இயக்கங்களின் வரலாற்றில் ஒரு மொழி சார்ந்து இவ்வளவு இதழ்கள் வெளியாவது என்பது அபூர்வமானது ஆகும்.

இந்த இதழ்கள் அனைத்தும் குறித்து ஆராய்ந்து எழுதுவது என்பது மிகப்பெரும் பணி. அது ஓர் குழுவாகப் பல மாதங்கள், பல ஆண்டுகளுக்கு இணைந்து ஆய்வு செய்யவேண்டிய பணி ஆகும். அதனால், திராவிட முன்னேற்றக் கழக இதழ்களில் முன்னோடி இதழ்களான திராவிட நாடு, முரசொலி போன்ற இதழ்களின் பங்களிப்பு மட்டும் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. முரசொலி 1942 பொங்கல் நாள் அன்றும் திராளிட நாடு 1942 மார்ச் 08 அன்றும் வெளியானது
அன்றைய காலகட்டத்தில் பெரும் இருட்டடிப்புக்கு ஆளாகி இருந்த திராவிட இயக்கம், இன்று ஓரளவுக்குப் பொதுமக்களின் செல்வாக்குப் பெற்றிருப்பதற்குக் காரணம் மற்ற இதழ்களின் துணையைப் பெறாத நிலையை அறிந்து, நாமே இயக்க ஏடுகள் சிலவற்றையேனும் நடத்தி வருவதுதான் என்றார் அண்ணா. (திராவிட நாடு 04.11.56)
1953 ஜூனில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடாக நம் நாடு வெளிவரத் தொடங்கியது. அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில இதழ்கள் வெளிவந்தன. காஞ்சியில் இருந்து ‘காஞ்சி’ இதழையும் அண்ணா கொண்டுவருகிறார்.
கட்சிப் பற்றோ, கொள்கைக் குதர்க்கமோ, மாச்சரிய மனப்பான்மையோ ‘சமுதாயம் முன்னேற வேண்டும்’ என்ற குறிக்கோளுக்குத் தடைக்கல்லாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது, பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர்கள் எழுத்துச் சிற்பிகள் மட்டுமல்ல, புதுயுகப் பூங்காவை நிர்மாணிக்கும் கொத்தர்கள்!” என்றும்,
“எனவே, மூட நம்பிக்கையை விரட்டியோட்டும் விவேகப் பணியில் ஈடுபடுங்கள். சமுதாயம் – சாக்கடையாக இருப்பதை மாற்றி சந்தனக்காடாக்க முன்வாருங்கள்! அறிவைக் கெடுக்கும் புரட்டுச் சோதிடமும் முரட்டுப் பிடிவாதமும் மூடவெறியும் நாசமாக்கப்பட முனைந்து வேலை செய்யுங்கள்? என்றும்,
“சூழ்நிலை சரியில்லை; ஆகவே இயலவில்லை” என்று எண்ணினால் ஒதுங்கி நில்லுங்கள், அறிவுப் பிரச்சார அருவிக்கு அணைபோடும் ‘அபாய’ வேலைகளில் ஈடுபடாதீர்கள். இந்த வேண்டுகோளை நாட்டில் மலரும் எல்லாப் பத்திரிகையாளர்களுக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறோம்; ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம் முற்போக்கு எண்ணமும் இளமை இதயமும் கொண்ட வாலிபர்களை, ஆசிரியர் துணையாசிரியர்களாகக் கொண்ட தமிழகச் செல்வர்களை!” என்றும் திராவிடநாடு (02.07.1950) இதழில் அண்ணா விடுத்த அறைகூவல், ஊடகங்கள் குறித்து தி.மு.க. கொண்டிருந்த முக்கியத்துவத்தை அறியத் தருகிறது.
தேசியவாதிகள் என தங்களைச் சொல்லிக்கொண்டவர்களின் உதடுகள் சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் என உச்சரித்தாலும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்தது வருணாசிரம தர்மமும் மூடநம்பிக்கைகளும்தான் சில தருணங்களில் அது உள்ளுக்குள்ளேயே அழுகி, நாறி, பீறிட்டு வெடிக்கும். அப்படித்தான் 1954ல் திருச்சியில் நடந்த எழுத்தாளர்கள் மாநாட்டிலும் வெடித்தது. அவர்கள் பகுத்தறிவுவாதிகளையும் திராவிடக் கருத்தாளர்களையும் பிரிவினைவாதிகள் என்றும் ஈனப் புத்தியுள்ளவர்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சுதேசமித்திரன் கேலிச்சித்திரமும் வெளியிட்டது. அதற்குப் பதிலுரைத்து முரசொலியில் தலையங்கம் எழுதிய கலைஞர், தனது தலையங்கத்தை இவ்வாறு முடிக்கிறார்.

நேரான இழிதகையோர் அந்தப் பேனா ஏந்திகள் அத்தகையவர்களைத்தான் மித்திரனார், ஈன புத்தி படைத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆமாம், முழுவதும் உண்மை! மௌடீக அடிப்படையிலே வளரும் சமுதாயப் பிளவுகளை அதிகமாக்கி, மக்களின் சிந்தனை வழியில் செலுத்தாமல் துஷ்பிரயோகம் செய்யும் எழுத்தாளர்கள் ஈன புத்தி படைத்தவர்கள் என்பதுதான் சுதேசமித்திரன் தலையங்கம் தீட்டியவரின் குற்றச்சாட்டு. குற்றச்சாட்டுடன் முடிக்கவில்லை அவர்! அந்த ஈன புத்தி படைத்த சிலரும் எழுத்தாளர் கூட்டத்தில் பதுங்கியிருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார். அவரது எச்சரிக்கையைத்தான் இந்த இதழ் கேலிச்சித்திரமும் விளக்கிக் காட்டுகிறது.”
தி.மு.க. ஆதரவு இதழ்களில் தலையங்கங்கள், தலைவர்களின் உரைகள், கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், துணுக்குகள், நூல் மதிப்புரைகள். கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள், நகைச்சுவை ஆகியவை இடம்பெற்றன. தி.மு.க. இதழ்களில் 200-க்கும் அதிகமான கவிஞர்கள் எழுதினர்.
ஓவியங்களுக்குக் குறிப்பாக, கார்ட்டூன் என அழைக்கப்படும் கேலிச் சித்திரங்கள், கருத்துப் படங்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டது. குடி அரசு இதழிலே கார்ட்டூன்கள் இடம்பெற்றன. அவை, ஆங்கில இதழ்களைப் போல தொடர் சித்திர அடுக்குகள் கொண்ட காமிக்ஸ் வகை கருத்துப்படங்கள், குடிஅரசு இதழ்களின் சிறப்பு ஆகும். இந்த மரபு இன்று வரை தொடர்கிறது. கார்ட்டூன்களுக்குக் கருத்துகள் வழங்குவதில் அண்ணாவும் கலைஞரும் வல்லுநர்களாக விளங்கினர்.
நான் முரசொலியில் பணியாற்றிய காலத்தில், காலை 07.30 மணிக்கெல்லாம் அன்றைய முரசொலியில் வெளிவரவேண்டிய கார்ட்டூனுக்கான கருவை ஒரு தாளில் தன் கைப்பட எழுதி கலைஞர் அனுப்பிவிடுவார். அத்தோடு, தொலைபேசியிலும் கார்ட்டூன் எப்படி இருக்கலாம் என்பதற்கான தனது ஆலோசனைகளையும் (ஆலோசனை மட்டும்) கூறுவார். நான் அதை எடுத்துக்கொண்டு, ஓவியர் இல்லம் சென்று விளக்கி, கார்ட்டூன் ஓவியத்தை வாங்கி வருவேன். அதேபோல் பொங்கல் வாழ்த்து, பொங்கல் மலர், தலைவர்கள் காலண்டர் என அழகிய ஓவியங்களைப் பயன்படுத்தி திராவிட ஓவியக்கலையை தி.மு.க. வளர்த்தது.
தி.மு.க. இதழ்களான திராவிட நாடு, முரசொலி, நம்நாடு, மாலைமணி போன்ற இதழ்கள் பல்லாயிரம் படிகள் விற்பனையாயின. திராவிட இதழ்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாடி நரம்புகளாக அதன் விற்பனையாளர்கள் இருந்தனர். இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தம்மைச் செருப்பாக உழைத்துத் தேய்பவர்கள் விற்பனையாளர்கள், ஏஜென்ட்டுகள். இவர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளை மறந்து இயக்க ஏடுகளை மக்களிடம் கொண்டுசென்றவர்கள்.
திராவிட இயக்க இதழ்களின் வாசகர்கள் அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள் ஆவர். சலூன்களிலும் ரிக்ஷா நிலையங்களிலும், வாடகை மிதிவண்டிக் கடைகளிலும், களத்து மேட்டிலும் மண்டபங்களிலும் அவை வாசிக்கப்பட்டன. ஒருவர் வாசிக்க சுற்றிலும் பத்துப் பேர் உட்காந்து கேட்பதும் விவாதிப்பதுமாக நடக்கும். பின்னர், ஆங்காங்கு படிப்பகங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறு தி.மு.க. படிப்பகங்கள் ஆயிரக்கணக்கில் நகரங்களிலும் கிராமங்களிலும் தொடங்கப்பட்டன சொல்லப்போனால், மறைமலை அடிகள் ஏற்படுத்திய தனித்தமிழ் கொள்கையைத் திராவிட இயக்கம்தான் வளர்த்தெடுத்தது. 1940-களின் ஏடுகளையும் 1960-களின் இதழ்களையும் ஒப்பிட்டால், இந்த மாற்றம் நன்கு புரியும்.
அதாவது, அந்தக் காலத்தில் பார்ப்பனிய பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் வேண்டுமென்றே சமஸ்கிருதம் கலந்தே தமிழில் எழுதினர். இதற்கு மணிப்பிரவாள நடை’ என்று பெயர்.
இதனை மாற்றி, நல்ல தமிழில் உரைநடை உருவாக்கியதில் திராவிட இயக்கத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. இப்படி மாறிய சில சொற்களைப் பார்க்கலாம்.
- அக்ராசனர் -தலைவர்
- லோக் சபா -மக்களவை
- ராஜ்ய சபா- மாநிலங்களவை
- ஜனநாயகம் – மக்களாட்சி
- மனிதாபிமானம் – மனித நேயம்
- மந்திரி -அமைச்சர்
- ஜனாதிபதி -குடியரசுத் தலைவர்
- சபாநாயகர் – பேரவைத்தலைவர்
- வார்த்தை -சொல்
- வருசம் – ஆண்டு
14 வயதில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பிரச்சாரங்களால் கவரப்பட்ட கலைஞர், சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து சிறுவர்களைத் திரட்டினார். பின்னர், மாணவ நேசன் எனும் கையெழுத்துப் பத்திரிகையைச் சில காலம் நடத்தினார். தனது கையாலேயே எழுதி 50 படிகள் தயாரித்தார். ஒவ்வொரு இதழையும் 50 படிகள் கையால் எழுதுவது சிரமமாக இருந்ததால் முரசொலி துண்டுப் பிரசுரங்கள் தயாரித்தார்.

முரசொலி ஏட்டில், தொடக்கத்தில் தானே எழுதினார் கலைஞர். அன்றைய பார்ப்பன ஆதிக்கம், வர்ணாசிரமக் கொடுமை, இந்தி மொழி திணிப்பு ஆகியனவற்றுக்கு எதிரான அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார் .
1942ல், சனாதனிகள் சிதம்பரத்தில் வருணாசிரம மாநாடு நடத்தத் திட்டமிட்டனர். இதற்கு எதிராக ‘வருணமா? மரணமா?’ எனும் தலைப்பில் சேரன் எனும் புனைபெயரில் கலைஞர் ஒரு கட்டுரை எழுதினார். அதன் ஒரு பகுதி வருமாறு:
“தில்லையிலே ஆம் – தீட்சிதர் கோட்டையிலே தயாபரன், கான முழக்கத்துடன் காலைத் தூக்கிக் காளியிடம் நடனம் செய்த கயிலைப் பகுதியிலே பூரி தட்சணையாம்! புண்ணியக் கூட்டமாம்! புல்லர்கள் உள்ள வரை நல்லது ஏது? ‘தீண்டாமை ஒழிக’ என வேண்டாவெறுப்பாகக் காங்கிரஸ் கூறிடும் வேளையிலே காதைத் துளைக்குமளவு சுயமரியாதைக்காரர்களால் ஒலிக்கும் சமதர்மச் சங்கநாதம், சனாதனிகளின் காதைத் துளைக்குமளவுக்கு சுயமரியாதைக்காரர்களால் ஒலிக்கப்படும் நேரத்திலே, ‘உயர்வென்று கூறினால் அது உண்மைத் தமிழர்கள் வாழ்வு-எனப் பண்பாடி அகம் பிடித்த வாழ்வை அழிக்க அரிமாக்கள் புறப்பட்ட காலையிலே வர்ணாசிரம மாநாடு கூட்டுகின்ற வக்கிரங்கள் பல உள்ளன நாட்டினிலே! வரப்போகும் கேட்டிலே கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலே உண்டு உருண்டு கிடக்கும் இந்த உயரிய கருத்தினால், பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரர் எனப் பிரித்து, பிராமணனைக் காப்பாற்றப் பிழைக்கும் வழிவகுத்தனர், பின் வந்த ஆரியர்! நான் கூறுவதல்ல நாடறிந்த உண்மை! சரித்திரம் சாற்றும் சான்றுகளுடன்! ஆரியக் கோத்திரம் மதப் பாத்திரத்திலே ஊற்றிக் கொடுத்த சூத்திர சுரா பானம், மறத் தமிழர் வாழ்விலே மயக்கத் தரும் பொருளாயிற்று!”
இப்படி ஒரு கட்டுரை வந்ததன் பயனாகக் கலைஞர் சிதம்பரம் நகருக்குள் வருவதற்கே தடை விதிக்கப்பட்டது! இதைவிட முக்கியம் அன்றைய பிரிட்டிஷ் கலெக்டர் வர்ணாசிரம மாநாட்டுக்கும் தடை விதித்தார். கட்டுரைக்கு வெற்றி!
அந்நாட்களில் கலைஞர் முரசொலி இதழுடனேயே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாா். தன்னை திருவாரூர் முரசொலி எழுத்தாளர் தோழர் மு.கருணாநிதி என்றே அழைத்துக்கொண்டார் அவரது முகவரியிலும் இவ்வாறே குறிப்பிடும்படி கேட்டுக்கொண்டார்!

‘முரசொலி’ அன்றைய இளைஞர்கள் மத்தியில் திராவிட உணர்வுத் தீயை மூட்டினாலும் வருமானமில்லை. ஒவ்வொரு வாரமும் வீட்டில் இருந்த நகை, பண்ட பாத்திரங்களை விற்றுத்தான் முரசொலியை நடத்தினார். இந்த வறுமைப்பண்பு திராவிட இயக்க இதழ்களுக்கும் பொதுப்பண்பாயிற்று என்றுதான் கூற வேண்டும். 1948ல் முரசொலி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. கலைஞர் இயக்கப்பணிகளுடன் கலைத்துறையில் ஈடுபட சேலம், கோவை, சென்னை என்று பயணித்தார். முரசொலி மீண்டும் சென்னையில் இருந்து 1954ல் மீண்டும் வெளியானது. இதழ்கள் பல்லாயிரம் படிகள் விற்பனையாயின. 17.09.1960 முதல் நாளிதழாக வரத் தொடங்கியது.
மூனா கானா, மாலுமி, எழுத்தாணி, மூக்காஜி ஆகிய புனைப் பெயர்களில் எழுதினார், தலையங்கங்கள், செய்தி விமர்சனக் கட்டுரைகளுடன் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், தொடர்கதைகள் போன்றவற்றை எழுதினார். நீட்டோலை, உடன்பிறப்பே ஆகிய மடல்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு நேரடியாக எழுதப்பட்டன.
கவிஞர் கருணானந்தம், டி.கே.சீனிவாசன், கே.சொர்ணம், அமிர்தம், பி.சி.கணேசன், அடியார், ஏ.கே.வில்வம், சிவ இளங்கோ, எஸ்.எஸ் தென்னரசு, நாஞ்சில் மனோகரன், செல்வம், பா.செயப்பிரகாசம், மாமூலன், பி.எல்.ராஜேந்திரன், என்.வி.கலைமணி, மா.பாண்டியன் கோ.தினகரன், விசுவலிங்கம், அ.சங்கரையா, அதியமான், இருகூரான் முல்லை சத்தி, இளந்துறவி, சொ.அ.முத்துராமன், விவேகானந்தன், மணிமொழி, சீனிவாச மூர்த்தி, நா.கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் செல்லப்பன் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு தி.மு.க. ஆதரவு இதழ்கள் இடமளித்து அரசியல் விற்பன்னர்களாக, திரைப்படத் துறை வசனகர்த்தாக்களாக, கதாசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, கட்டுரையாளர்களாக, ஓவியர்களாக, பத்திரிகையாளர்களாகத் தமிழகத்திலே நிலையுயர்த்தி நிமிர்ந்து நடைபோடச் செய்தது.
ஒரு புறம் வர்ணாசிரமத்துக்கு எதிராகக் களமாடினாலும் அண்ணா அறிவித்த ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் கோட்பாட்டு விளக்கங்கள்,1951 இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை நோக்கிய போராட்டங்கள், குலக்கல்விக்கு எதிரான போர்கள், 1962 சம்பத் வெளியேற்றம், 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புக் களங்கள், 1971 மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமய ஆதரவு, 1957, 1962, 1967 தேர்தல்கள் என தி.மு.க. வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்துக் களங்களிலும் தி.மு.க. இதழ்கள் முன்னணியில் நின்றன.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழாகத் தொடங்கப்பட்ட நம்நாடு’ 1972ல் நின்று போனது. அதன் பிறகு, முரசொலி மட்டுமே கொள்கைப் பரப்புரைப் போர்வாளாகக் களமாடிவருகிறது. தி.மு.க. ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நடுநிலை என்று கூறிக்கொண்ட ஊடகங்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு இருந்ததே இல்லை. 1972-76 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தாலும் ஊடகங்கள் விஷத்தையே கக்கின. 1967-76 காலகட்டம்தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உருவாவதற்கான அனைத்து உள்கட்டமைப்புகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்ட காலகட்டம். அப்போதும் ஊடகங்கள் தி.மு.க. மீது வெறுப்பையே பரப்பின.
அதன் பிறகு, 13 ஆண்டுகள் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது, இனி தி.மு.க. எழுந்திருக்கவே முடியாது என்ற பிரச்சாரத்தை அவை மேற்கொண்டன. இக்காலகட்டத்தில் முரசொலி தி.மு.க. தொண்டர்களைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தியது. இடையில், இருண்ட காலமான அவசரநிலை பிரகடனத்தின்போது கடும் நெருக்கடிகளை முரசொலியும் தி.மு.க.வும் எதிர்கொண்டது.

ஆளும் கட்சிகள் ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டபோது, ஒரு முன்னணி நிருபராக அவற்றை முரசொலி அம்பலப்படுத்தியது.திருச்செந்தூர் வேல் திருட்டு, கப்பல் பேர ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களை முரசொலி அம்பலப்படுத்தியுள்ளது.
மண்டல் கமிஷன் அறிக்கையை வெளியிடும் போராட்டம், கர சேவா – ராமர் கோயில் இடிப்புக்கு எதிரான இயக்கம், மாநில உரிமைகளுக்காக முரசொலி சண்டமாருதம் செய்து களமாடியது.
தேசத்தின் ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஆபத்து ஏற்பட்ட காலங்களில் எல்லாம் 1977 ஜனதா கூட்டணி, 1989 தேசிய முன்னணி உருவாக்கம், 1996 ஐக்கிய முன்னணி உருவாக்கம், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கம் இன்று இந்தியா கூட்டணி என தேசிய அளவிலான கூட்டணிகளை உருவாக்குவதில் கலைஞருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் போர்வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய நாளிதழ் முரசொலி.



