பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்…ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு, ஈரோட்டுப்பாதை, மன்றம், தமிழ் மன்றம், தம்பி, தோழன், தென்னாடு, திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி, தனி அரசு, புதுவை முரசு, புதுஉலகம், நகரத்தூதன், பொன்னி,மறுமணம், மறவன் மடல், வெள்ளி வீதி, மாலைமணி, வெற்றிமுரசு, சிந்தனையாளன், குறள் முரசு, குறள் நெறி, முன்னேற்றம், முன்னணி, முல்லைச்சரம், போர்வாள், முப்பால் ஒளி, தனிநாடு, தன்னாட்சி, தன்மானம், தமிழ்த் தென்றல், தாயகம், தாய்நாடு, தாய்மண், சண்டமாருதம், சமதர்மம், கொள்கை முரசு, சுயமரியாதை எனத் தனித்துவம் மிக்க தலைப்புகளில் நூற்றுக்கணக்கில் நாளேடுகளும், வார ஏடுகளும், மாத இதழ்களும் வெளிவந்தன.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமான வேளையில், தமிழ்நாட்டு மாணவர்களை ஒன்றுதிரட்ட இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைத் தொடங்கிய முத்தமிழறிஞர் கலைஞர், தமது 16ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு, ‘மாணவ நேசன்’ என்னும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். அடித்தல், திரித்தல் ஏதுமின்றி இலக்கணப் பிழைகளின்றிக் கேலிச்சித்திரங்களுடன் எட்டுப் பக்கங்களில் இதழைத் தயாரித்து, அதனை 50 பிரதிகள் வரையினில் எழுதி, மாணவர்களிடம் விநியோகித்தார.

திராவிட இயக்கத்தின் தளகர்த்தரான பேரறிஞர் அண்ணாவின் இதழியல் வரவு, பேரெழுச்சிக்கு வித்திட்டது. அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான், ‘திராவிடநாடு இதழாகும். அண்ணாவின் எழுத்துகள் இந்தி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு, சுயமரியாதை, தமிழ் இலக்கியம் என ஈர்ப்பான மொழிநடையில் வாசகர்களைக் கவர்ந்தன. திராவிட இன எழுச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் அரிய கட்டுரைகளை வடித்த அறிஞர் அண்ணா, நவயுகம், விடுதலை, பாலபாரதி, மாலை மணி, நம்நாடு, காஞ்சி போன்ற இதழ்களில் எழுதிப் பேரெழுச்சியை உருவாக்கினார்.
அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழ், இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. திராவிட நாடு ஏட்டில் வெளிப்பட்ட தமிழ், இலக்கியம், இன முழக்கம் குறித்த அண்ணாவின் கட்டுரைகளைப் படித்த இளைஞர்கள் பேரெழுச்சி பெற்றனர். இளைஞர்களுக்கு அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி, “இளைஞர்களே! எங்கிருந்தால் என்ன, எந்தக் கட்சியினரானால் என்ன, முற்போக்கை விரும்புபவராக இருந்தால் மகிழ்ச்சியே.உமது மூலக்கொள்கைக்கும் புது சமுதாய அமைப்புக்கும் பணிபுரிய ஓர் வாய்ப்பு. ஓர் அழைப்பு. சட்டை கருப்பாக இருப்பினும், கதராக இருப்பினும், சிவப்பெனினும் சரி, திட்டம் அடிப்படையில் ஒன்றுதானே.
பழைய நிலை கூடாது.நாட்டுக்கு, மக்களுக்கு என்பதுதானே! மிக மகிழ்ச்சி. ஆனால், அந்த நிலையை மாற்ற, வேலைத்திட்டம் வேண்டும், அந்த வேலைத்திட்டத்திலே எல்லாக் கட்சியினரும் தத்தமது கட்சியின் மூலாதாரக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல், ஒத்து வேலைசெய்யக்கூடிய சிற்சில பகுதிகள் உண்டல்லவா? அந்தப் பகுதிகளை, ஏன், ஒன்றுபட்டுச் செயலாற்றி, வாலிபர்கள் வெற்றி காணக் கூடாது.” (01.12.1946) என அமைந்துள்ளது. இவ்வாறான எழுத்துகள் இளைஞர்களுக்கான அழைப்புகளாக அமைந்து இதழியலில் புதுவேகத்தை வெளிப்படுத்தி, சமூகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கின.
‘திராவிட நாடு’ இதழில் பேரறிஞர் அண்ணா அவர்கள் சௌமியன் மற்றும் பரதன் ஆகிய புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழியமைப்பைக் கொண்டதாக அமைந்திருந்தன. அட்டை, படங்கள், கவிதைகள் தலையங்கங்கள், கருத்து விளக்கங்கள், கட்டுரைகள், செய்திகள், கழக நடவடிக்கைகள், மடல்கள், கதைகள், துணுக்குகள், பயணக் மறுப்புரைகள், முதலான பல்வேறு இதழியல் பிரிவுகளை உள்ளடக்கிய குறிப்புகள், உரையாடல்கள், நாடகங்கள், பெட்டிச் செய்திகள், அறிவிப்புகள், இதழாகத் திராவிட நாடு வெளிவந்தது. இவ்விதழின் தொடக்கப் பக்கத்தில், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் “தமிமுண்டு தமிழ் மக்கள் உண்டு -இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு” என்னும் கவிதை வரிகள் இடம்பெற்றிருந்தன.
‘திராவிட நாடு’ இதழில், பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிவந்த. மடல்கள் மற்றும் அவரது கடித இலக்கியங்கள், தமிழக அரசியலில் பெரும் ஆவணங்களாகும். பெரிய மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின்மூலம் அரசியல் எழுச்சி பெறப்படும் என்பதிலிருந்து மாற்றாக, ஓர் இயக்கத்தின் தலைவர் எழுதும் எழுத்துகளின் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் பெரும் எழுச்சியினை மக்களிடையே உருவாக்க முடியும் என்பதைத் தமிழக அரசியலில் உருவாக்கிக் காட்டியவர், பேரறிஞர் அண்ணா. மேலும், பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலில், அவரது தம்பிகள் பலர் எழுதிப் பயிற்சிபெற்றனர்.
இவர்களில் முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், மதியழகன், சி.பி.சிற்றரசு, என்.வி.நடராசன், இராம.அரங்கண்ணல், ப.சண்முகம், கே.ஜி.ராதாமணாளன், தில்லை வில்லாளன், ம.கி. தசரதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களில் இராம.அரங்கண்ணலும், தில்லை வில்லாளனும் திராவிட நாடு இதழின் துணையாசிரியர்களாக இருந்தனர்.

திராவிட நாடு இதழை நடத்திக்கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘ஹோம் லேண்டு’ என்ற பெயரில் ஓர் ஆங்கில இதழைத் தொடங்கிட திட்டமிட்டிருந்தார். அது பற்றிய அறிவிப்பு ஒன்றைத் திராவிட நாடு இதழில் வெளியிட்ட அவர், அவ்விதழ் தொடங்கப்படுவதற்கான காரணத்தைப் பின்வருமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
“ஆங்கில இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக்கொண்டு, உன்னுடன் உரையாடும் மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே! தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண்பொங்கல் அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன் உறவாட! அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க. எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்’ (திராவிட நாடு, 27.071957) என்பதாக அவ்விளக்கம் அமைந்திருந்தது.
‘முரசொலி’ இரண்டாம் உலகப் போரின்போது பிறந்த ஏடாகும். இந்த ஏடு, முதலில் துண்டறிக்கையாகவே வெளியிடப்பட்டது. கலைஞர் 18ஆம் வயதில் முரசொலி (10.08.1942) இதழை முதன்முதலில் தொடங்கினார். அப்போது போர்க்காலமாதலால், அந்த இதழை நல்ல தனது தாளில்கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு ‘முரசொலி’ வெளிவந்தது. அவ்விதழில் வெளிவந்த கட்டுரைகளும் செய்திகளும் தமிழ் நடையிலும், இதழியல் கோணத்திலும், கருத்துப்புலப்பாட்டு உத்திகளிலும் சற்றே மாறுபட்ட தன்மை கொண்டனவாக இருந்தன. இவ்விதழ், 1942 முதல் 1944 வரை வெளிவந்தது. பின்னர், ‘முரசொலி’ நாளிதழாகப் பரிணாமம் அடைந்து, இன்றுவரை வெளிவந்தவண்ணமுள்ளது.

தொடக்ககால ‘முரசொலி’ இதழ்கள் ‘சிங்கிள் டம்மி’ அளவிலான சிறிய துண்டறிக்கைகளாக வெளிவந்தன. ஆயினும் அதன் பின்னா் தமிழக அரசியல், சமூக, இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்வதற்கான பெரும் ஆவணமாக மாறியது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தான் நடத்திவந்த முரசொலி இதழை அவரது முதல் குழந்தையாகப் பாவித்தார். அவ்விதழுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அவர் பேணினார். அவருடைய அரசியல், மொழி, எழுத்து, போராட்டம், உழைப்பு ஆகிய அனைத்தும் முரசொலியின் பக்கங்களில் எதிரொலித்தன. தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கச் சிந்தனையின் போர்வாளாக முரசொலி திகழ்ந்தது.
மாணவர் என்பதால், ஆரம்பகால முரசொலி வெளியீடுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘சேரன்’ என்னும் புனைபெயரில் இதழின் வெளியீடுகளைக் கொணர்ந்தார். 1942ஆம் ஆண்டு அக்டோபர் 05ஆம் நாள் வெளியான முரசொலி இதழின் ஏழாவது துண்டறிக்கையின் முதல் பக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘சேரன்’ என்னும் பெயரில் எழுதிய “வருணமா? மரணமா?” என்ற தலைப்பிலான கட்டுரை, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. சிதம்பரத்தில் நடைபெறவிருந்த வருணாசிரம மாநாட்டைக் கண்டித்து அக்கட்டுரை எழுதப்பட்டது.
உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், இதழ்கள் வெளிவருவதற்கான சிரமங்கள் மிகுந்த காலத்தில் முரசொலி தங்கு தடையின்றி வெளிவந்துகொண்டிருந்தது. அவ்விதழின் போக்கு குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“முரசொலி, வண்ணம் கொண்டு உங்கள் இல்லம் வருகிறது. இதன் முன்னாள் வடிவம் அறிவீரா? படித்து மடித்தால் பொடியாகும், பிரித்துப் பார்த்தால் எழுத்து கலையும். திருவாரூர் மாணவர்களிடையே உலவிய அந்தத் துண்டறிக்கையின் ஒவ்வொரு தாளும் பரணி பாடியது. அதில் காணப்பட்ட திருப்பள்ளி எழுச்சி, தமிழக மாந்தர்களை எழுப்பியது. ஆதிக்கக்காரர்களுக்கு விடை சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பியது. அந்த முரசொலி, சேரன் செங்குட்டுவனின் சிலப்பதிகாரம் போல இருந்தது. முரசு ஒலிக்கிறது, படை நடக்கிறது,பகைவர் பதைக்கிறார்கள்!” இவ்வாறான புகழ் மாலையை முரசொலிக்குச் சூட்டி மகிழ்ந்தார். பேரறிஞர் அண்ணா.
முத்தாய்பாகத் தமிழ் இதழியல் வரலாற்றில் முரசொலியின் தமிழ்ச் சமூக அரசியல் புதுமை என்னவென்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முரசொலியில் ஆண்டுகளைக் குறிக்க, பெரியார் ஆண்டு எனக் குறித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரது இதழியல் நடையின் தனித்துவமான மற்றொரு மைல்கல், அவர் தனது வாசகர்களை ‘உடன்பிறப்புகளே’ என விளித்து எழுதிய கடிதங்களாகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே நேரடியாக உரையாடுவதைப் போன்ற மனநிலையை வாசகர்களும் அவரது தொண்டர்களும் அடைந்தனரென்றால், அது மிகையன்று. இன்றளவும் தமிழ்நாட்டை இயக்கும் ஒரு முக்கிய கருவியாக அவரது ‘உடன்பிறப்புகளே’ என்னும் சொல்லாடல் விளங்குகிறது. ‘பொன்முடிக்குக் கடிதம்’ என்னும் கடிதத் தொடரை 1954ஆம் ஆண்டிலும், நீட்டோலை என்னும் கடிதத் தொடரை 1956ஆம் ஆண்டிலும், ‘மறவன் மடல் தொடங்கினார். அம்மூன்று கடிதங்களுக்குப் பிறகே ‘உடன்பிறப்பே என்னும் கடிதத் தொடர் தொடங்கப்பெற்று ., அவரது இறுதிக்காலம் 1969ஆம் ஆண்டிலும் முத்தமிழறிஞர் கலைஞர் வரையில் அத்தொடர் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ‘பேனா ஓவியம்’ என்னும் தொடர், மிகுந்த கவனத்திற்குரியதாகும். அது வெறும் எழுத்து மட்டுமல்ல, தமிழக அரசியலின் கலைக்களஞ்சியமாகவே திகழ்ந்தது எனலாம். பகடி நையாண்டி, கிண்டல், உவமை ஆகியவற்றின் உருவங்களினால் தனது அரசியலை அவர் வெளிப்படுத்தினார். முரசொலி வார இதழாக இருந்து நாளிதழாகப் பரிணமித்த பின், அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் அரசியல் களத்தைச் சார்ந்து நகரத் தொடங்கியது.
திராவிடக் கருத்தியலை வலுவாகப் பேசிய இதழ்களில் ‘பொன்னி’ (1947) இதழ் மிக முக்கியமான இதழாகும். திராவிட இயக்கம் சார்ந்த கவிஞர்கள் பலர் இவ்விதழில் தமது படைப்புகளை வெளியிட்டனர். சென்னை தண்டையார்பேட்டையிலிருந்து இவ்விதழ் வெளிவந்தது. திராவிடர் வார வெளியீடு என்ற முகப்பு வாசகத்துடன் 1947ஆம் ஆண்டு வெளிவந்த இதழ் ‘போர்வாள்’ ஆகும். ‘இன்பத் திராவிடமே நமது இலட்சியம்’ என்ற இதழின் இலட்சிய வாசகம் இடம்பெற்றிருந்தது.

திராவிட இயக்க இதழ்களில் புதுவாழ்வு என்னும் இதழ் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. தமிழர்களுக்குக் கருத்துத் தெளிவையும் கொள்கை விளக்கத்தையும் விளக்குவதற்காக இவ்விதழ் உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதலான திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், இதழாளர்களாகக் களமாடிக்கொண்டிருந்த சூழலில், அவர்களைப் பின்தொடர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அவர்களைப் போலவே இச்சமூகத்திற்கும் மொழிக்கும் தொண்டுகள் செய்வதை நோக்கமாகக்கொண்டு களம் இறங்கிய ஒரு துறைதான் இதழியல் துறை அவ்வாறு, திராவிடச் சிந்தனையில் ஆர்வம்கொண்டு தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் வந்தடைந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தனது 26ஆவது வயதில், 1948ஆம் ஆண்டு ஜனவரி தைப்பொங்கல் நாளில் தொடங்கியதுதான், ‘புதுவாழ்வு’ என்னும் இதழ்.
1948ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று, 1949ஆம் ஆண்டில் பத்து இதழ்களோடு மட்டுமே இடைநிறுத்தப்பட்ட இதழாகப் புதுவாழ்வு அறியப்படுகிறது. ஆயினும், திராவிட இதழியல் களத்தில் ஆற்றவேண்டிய பங்களிப்புகளைத்தான், இயங்கிய ஓராண்டிற்குள் செவ்வனே செய்திருந்தது புதுவாழ்வு இதழ்.
“ஈரோடு மாநாடு ஓர் எச்சரிக்கை” என்னும் தலையங்கத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மிகவும் இன்றியமையாதது. ‘புதுவாழ்வு’ இதழ் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில், பேரறிஞர் அண்ணாவுக்கும் தந்தை பெரியாருக்கும் இடையே கருத்து முரண்களும் பிணக்குகளும் இருந்தன. அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள், கழக நடவடிக்கைகளிலிருந்து குறுகிய காலம் விலகியிருந்தார். அவர் தூத்துக்குடி மாநாட்டிலும் பங்கேற்கவில்லை. இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பகைவர்கள், அண்ணா இயக்கத்தை விட்டு விலகப்போகிறார்’ என்ற செய்தியைப் பரப்பத் தொடங்கினர். ஆனால், 1948ஆம் ஆண்டு அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில், ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பேரறிஞர் அண்ணா தலைமையேற்றார். இது, பகைவர்களின் கொண்டாட்டத்தை முறியடித்ததோடு, இயக்கத்திற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. இந்நிகழ்வின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற விதமாகத்தான் புதுவாழ்வின் அத்தலையங்கம் அமைந்திருந்தது.
பேரறிஞர் அண்ணாவின் ‘ஜெபமாலை’, கே.ஜி.இராதாமணாளனின் ‘புது வெள்ளம்’, ‘உறைந்த இரத்தம்’, தி.க.நாகம்மாளின் ‘நிர்மலா, ம.இராதாகிருஷ்ணனின் ‘சாவா மருந்து’, சரசாநாதனின் ‘அவள்’ ஆகிய சிறுகதைகள் புதுவாழ்வில் வெளிவந்தவையாகும். மேலும், உலகளாவிய உரிமைப் போராட்டங்கள் குறித்த அரசியல் பதிவுகளையும் புதுவாழ்வு வெளியிட்டது.
அரசியல் தேவையின் பின்புலத்தில், 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாள், மாலை மணி என்னும் தினசரி தொடங்கப்பட்டது. திரு டி.எம். பார்த்தசாரதியின் சொந்த இதழாக இவ்விதழ் இருந்தாலும், அதன் ஆசிரியர் பொறுப்பைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றார். 1950 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தொடர்ந்து வந்த இவ்விதழ், பின்னர் சில காலம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, 1951ஆம் ஆண்டு மீண்டும் வெளிவந்தபோது, ‘மாலை மணி’ இதழின் ஆசிரியராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்தார். அவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்பணியில் நீடித்தார். பின்னர், பல்வேறு காரணங்களால் அவ்விதழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க கால வளர்ச்சி வரலாற்றில் ‘மாலை மணி’ சிறந்த பங்களிப்பை நல்கியது.
திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தன்னியலாகப் பல்வேறு அரசியல், சமூக, கொள்கை விளக்க இதழ்களை நடத்திய போதிலும். திராவிட இயக்கத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினராக அரசியல் ஊடாகப் பயணப்பட்ட தலைவர்கள் களம் கண்ட காலத்திலிருந்து அக்கட்சியின் ஒருங்கிணைந்து, கழகத்தின் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அச்சு ஊடகம்தான் ‘நம் நாடு’
1952ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், கழகத்திற்கெனத் தனித்த நாளிதழ் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கோரிக்கையின் விளைவாக உருவானதுதான், ‘நம் நாடு’ ஏடு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வமான நாளிதழான ‘நம் நாடு’, 1953ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், இவ்விதழ் நான்கு பக்கங்களைக் கொண்டதாகவும் ஒரு அணா விலைக்கு விற்கப்படவும் நிர்ணயிக்கப்பட்டது.
நம் நாடு முதல் இதழில், “காடு கடந்தோம்; நல்ல நாடு அடைந்தோம்; பாலை கடந்தோம்; சோலை வந்துற்றோம்” எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய தொடக்கச் செய்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்குப் புது அடையாளத்தையும் அரசியல் விழிப்புணர்வையும் உண்டாக்கியது. இதழின் ஆசிரியர் பொறுப்பைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றார். வெளியீட்டாளர் பொறுப்பை நாவலர் இரா.நெடுஞ்செழியன் வகித்தார்.
அக்காலகட்டத்தில், தமிழகத்திற்கு வருகைதந்த பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த செய்தியை ‘நம் நாடு’ இதழ் பின்வருமாறு விவரித்துள்ளது .
“நேருவின் சுந்தர முகம் கருப்புக்கொடி கண்டு சோகச் சித்திரமாயிற்று தண்ணெனும் சாந்தத் தோற்றம், கடுகடுப்பான கோரக் காட்சி! என்றும் கண்டிராத கருப்புக் கொடிகளை நோக்கி வடநாட்டு அடிமை வியாபாரி நாவடக்கம் தெரியாத ‘நான்சென்ஸ்’ மூலவருக்குத் தி.மு.கழகம் மாநில முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார்) தலைகவிழ்ந்தார். கற்றுக்கொடுத்த நல்ல பாடம்!” (நம் நாடு, 02.10.1953)
அரசியல் களத்தில் தங்களுக்கு நேர்எதிரான கருத்து உடையவர்களை எவ்வாறு திராவிட இயக்கத்தினர் அணுகினர் என்பதையும், தங்கள் எதிர்ப்புகளை எத்தன்மையில் வெளிப்படுத்தினர் என்பதையும் மேற்கண்ட செய்தி உணர்த்துகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களால் நடத்தப்பட்ட இதழ், தனிஅரசு’ ஆகும். 1948ஆம் காலகட்டங்களில் ‘தனிஅரசு’ மாதம் இருமுறை வெளிவந்தது. குமுதம், ஆனந்த விகடன் முதலான வணிக இதழ்களுடன் போட்டி போடும் அளவிற்குப் புத்தக வடிவில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர், 1958ஆம் ஆண்டு முதல் சமூக, அரசியல் களத்தில் தனிஅரசு நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. இதழின் எண்ணிக்கையைக் குறிப்பதற்காக மலர் எண், இதழ் எண் என்று குறிப்பிடும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு, தனி அரசு இதழில் அதன் எண்ணிக்கையைக் குறிக்க வாள் மற்றும் வீச்சு என்ற புதிய சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன.
தனிஅரசு இதழின் சிறந்த முன்னெடுப்புகளில் ஒன்று, பேனா நண்பர்கள் சங்கம்’ ஆகும். இப்பகுதி, இளம் எழுத்தாளர்களை எழுதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதாகும். மேலும், சாக்ரடீஸ், பிளேட்டோ, பாரதியார் போன்ற பல அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் பொன்மொழிகள் இதழ்களில் இடம்பெற்றிருந்தன. இளைஞர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில், ‘விவாத மன்றம்’ என்னும் பகுதியும் தனி அரசு இதழில் வெளிவந்துகொண்டிருந்தது.
நாவலர் இரா.நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற பெயரில் மாதம் இருமுறை வெளிவரும் இதழை 1953ஆம் ஆண்டு தொடங்கினார். இவ்விதழ், தி.மு.க.வின் குரலாக ஒலித்தது. இராம. அரங்கண்ணல் அறப்போர்’ என்ற பெயரில் ஓர் இதழை நடத்தினார். என்.வி.நடராசன் ‘திராவிடன்’ என்னும் இதழை நடத்தினார். கே.ஏ.மதியழகன் ‘தென்னகம் என்ற இதழை நடத்தினார். பாரதிதாசன் நண்பரான சலகண்டபுரம் ப.கண்ணன் ‘பகுத்தறிவு’ என்னும் ஓர் இதழை நடத்தினார். பின்னாளில் நடத்தினார். தில்லை வில்லாளன் என்பவர், பேரறிஞர் அண்ணா ஆற்காடு வீராசாமி ‘அலையோசை’, ‘இனமுரசு’ ஆகிய இதழ்களை தொண்டர்களைத் தம்பி என அழைப்பதைக் கொண்டு தனது இதழுக்குத் ‘தம்பி என்றே பெயர் சூட்டினார். எஸ்.எஸ்.தென்னரசு தனது பெயரிலேயே ஓர் இதழை நடத்தினார். டி.கே.சீனிவாசன் ‘தாய்நாடு’ என்ற இதழையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இளஞ்சூரியன்’, ‘முரசொலி செல்வம்’ ‘தமிழன்’ ஆகிய இதழ்களையும்

கொள்கைகளால், பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போல இருந்த தொண்டர்களை இயக்க இதழ்களே வழிநடத்தின. இயக்க இதழ்களைப் நடத்தினர். படிப்பதற்கென்றே கிராமங்கள் தொடங்கி, நகரங்கள் வரை மன்றம். பாசறை, படிப்பகம், அறிவகம் போன்ற பெயர்களில் வாசகர் அமைப்புகள் செயல்பட்டன. இதழ்களே இயக்கமாக மாறி, மக்களிடையே பெரும் செல்வாக்கு பெறத்தொடங்கின. குழந்தை மண ஒழிப்பு, கைம்பெண் மறுமணங்கள், சாதிமறுப்பு மணங்கள், குடும்பக்கட்டுப்பாடு, தேவதாசிமுறை ஒழிப்பு, சுயமரியாதைத் திருமணங்கள், வகுப்புரிமை, இடஒதுக்கீடு, குலத்தொழில் ஒழிப்பு, வடசொற்கள் வழக்கொழிப்பு, சாதி, சமய ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, ஒடுக்கப்பட்டோர் நலன் எனும் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சமூக மாற்றங்களில் தந்தை பெரியாரின் வழியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் நடத்திய இதழ்கள் பெரும் பங்காற்றின.
உலகின் ஆகச்சிறந்த புரட்சிகர சமூக மாற்றத்திற்கான இயக்கங்கள் எல்லாம் அச்சு ஊடகக் கலை வடிவங்களையே கருவிகளாகப் பயன்படுத்திவந்துள்ளன; வருகின்றன. அவை நூல்களாக, இதழ்களாக, பத்திரிகைகளாகப் பல வடிவங்களில் உள்ளன. திராவிட இயக்க இதழியல் என்பது முற்றிலும் திராவிட இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், தன் இன, மொழி, பண்பாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விடுதலைக் குரலாக ஓங்கி ஒலித்தது, ஒலிக்கிறது.



