அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.
சென்னை பாரிமனையில் அமைந்துள்ள யூனியன் வங்கி முன்பாக அனைத்து ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஜனவரி 27 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள யூனியன் வங்கி முன்பாக, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) இடையே கடந்த 2024 மார்ச் மாதத்திலேயே அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து, மாதத்தின் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. மாதம் முழுவதும் உள்ள சனிக்கிழமைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து. இந்த நிலையில் இன்று நாடு தழுவிய நிலையில் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்தன.

இதன்படி இன்று நாடு தழுவிய அளவில் All India Bank employees Association (AIBEA, All India Bank officers Confederation (AIBOC), National Confederation of Bank employees (NCBE), All India Bank officers Association (AIBOA), Bank Employees Federation of India (BEFI), Indian National Bank employees Federation (INBEF), Indian National Bank officers Congress (INBOC), National Organization of Bank Workers(NOBW), National Organization of Bank officers (NOBO) ஆகிய சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் தங்களுக்கு விடுமுறை வேண்டுமெனவும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து வருவதாகவும், ஆனால் தங்களுக்கு மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
இதனை ஈடு செய்யும் விதமாக வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதலாக பணிபுரிய தாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் 40 நிமிடங்கள் கூடுதலாக பணி நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் தங்களுக்கு விடுமுறை வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒன்றிய அரசு தங்களை ஒருதலை பட்சமாக நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று தமிழகம் முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…


