இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.


சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு வந்த திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008ம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பான எந்த விபரங்களும் கேட்கப்படவில்லை. மேலும், அவர் இலங்கை அகதி என்பதையும் மறைத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
இந்த நிலையில், பணியில் சேர்ந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற காரணத்தை முன்வைத்து எஸ்.பி.ஐ. நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து, அந்த நடவடிக்கை தன்னிச்சையானதும், அநீதியானதும் எனக் கூறி, திருக்கல்யாணமலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, “மனுதாரர் பணியில் சேரும்போது தாம் இலங்கை அகதி என்பதை மறைக்கவில்லை. 17 ஆண்டுகளாக எந்தப் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது திடீரென பணி நீக்கம் செய்துள்ளதை ஏற்கமுடியாது, இது அவரின் குடும்பத்தினரை பாதிக்கும் எனக் குறிப்பிட்டாா்.
மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சில உரிமைகளைத் தவிர, வாழ்வுரிமை அடிப்படையில் இந்திய குடிமக்களுக்கு இணையாக வெளிநாட்டவர்கள் மற்றும் அதிகளாக வந்தோரும் உரிமை கோரலாம்” என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி பிறப்பித்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு நியாயம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!


