இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 33 சதவீதமாக சரிந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் தவெகவுக்கு 15 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.


இந்தியா டுடே மற்றும் சீ ஓட்டர் நிறுவனம் இணைந்து 2026 ஜனவரி மாதம் மூட் ஆஃப் தி நேஷன் என்கிற தலைப்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் யார் வெல்வார்கள்? என்ற கேள்வி அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த நிலையில், நேற்று வெளியான இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் மக்களவை தேர்தல் நடைபெற்றால் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களில் 38 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் இக்கூட்டணி 39 இடங்களையும் வென்றிருந்த நிலையில், 2025 ஆகஸ்ட்டில் 35 முதல் 36 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது அது 38 இடங்களாக அதிகரித்துள்ளது.

அதேவேளையில் அதிமுக – பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் என்று இந்தியா டுடே சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணிக்கு 2 முதல் 3 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அது தற்போது ஓரிடமாக சரிந்துள்ளது. அதேவேளையில் இதர கட்சிகளுக்கு ஓரிடம் கூட கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு தற்போது தேர்தல் நடந்தால் 45 சதவீதம் வாக்குகளை பெறும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் இந்தியா கூட்டணி 48 சதவீதம் வாக்குகளையும், 2024 மக்களவை தேர்தலின்போது 47 சதவீதம் வாக்குகளையும் பெற்றிருந்தது. தற்போது திமுக கூட்டணி வாக்குகள் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ள போதும், தமிழ்நாட்டில் முதன்மை சக்தியாக தொடர்கிறது.

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணிக்கு, தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் 33 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் என்.டி.ஏ கூட்டணிக்கு 37 சதவீதம் வாக்குகளும், 2024 மக்களவை தேர்தலின்போது 41 சதவீதம் வாக்குகளும் இருந்தது. தற்போது அது பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு 33 சதவீதமாக உள்ளது.

இந்தியா டுடே சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் இதர கட்சிகள் 22 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 15 சதவீதம் வாக்குகள் உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதர கட்சிகளுக்கான வாக்கு சதவீதம் கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது 12 சதவீதமாகவும், 2025 ஆகஸ்ட்டில் 15 சதவீதமாகவும் இருந்தது. தற்போது அது கணிசமான அளவில் உயர்ந்து 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி, என்டிஏ கூட்டணி மற்றும் இதர கட்சிகளின் வாக்கு சதவீதங்களில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறபோதும், இந்தியா கூட்டணி வாக்குகளை சீட்டுகளாக மாற்றுவதில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.


