திமுக, காங்கிரஸ் தலைமை இடையே சுமூகமான உறவு நிலவுகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிடும் என்று வல்லம் பஷீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ராகுல்காந்தி உடன் கனிமொழி எம்.பி. சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து திராவிட வெற்றிக்கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி வைத்தால் அதிகாரத்தில் பங்கு தரப்படும். அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு எதிர்வினை ஆற்றிய செல்வப் பெருந்தகை தங்களுக்கு பூஸ்ட் தேவையில்லை என்று கூறியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எப்போதும் தெளிவாகவே இருக்கிறது. ஆனால் இங்குள்ள சிலர் சில்லரைகளை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காங்கிரசை படுகுழியில் தள்ளிட வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவுக்கு துணை போகிறவர்கள் ஆவர். மற்றொன்று காங்கிரசுக்கு டிமாண்ட் வைப்பதாக கூறி இப்படி செய்கிறார்கள். அது கொள்கை வழி பயணமாக இருக்க வேண்டும். விஜயுடன் சென்றால் 100 இடங்கள் கிடைக்கும். ஆனால் அவர்களால் ஓரிடங்களிலாவது வெற்றி பெற முடியுமா?

ஒருவேளை எஸ்.ஏ.சி அழைப்பை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டால் அவர்களை விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரால் அழைத்துச்செல்ல முடியுமா? காரணம் அனுமதி பெறாமல் எஸ்.ஏ.சி-யால் விஜயை சந்திக்க முடியாது. அவருடைய அழைப்பை செல்வப்பெருந்தகை நிராகரித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் நிதானமாகவே நகர்கிறது என்று கருதுகிறேன். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, திமுக எம்.பி. கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது ராகுல்காந்தி தங்களுடைய நிலைப்பாட்டை கனிமொழி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் விவகாரத்தில் திமுக மிகச் சரியாக செயல்படுகிறது. ஆனால் காங்கிரசில் சிலர் இதற்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. காங்கிரஸ் 100 சதவீதம் திருப்திகரமான இடங்களை திமுக கூட்டணியில் பெறும். திமுக கூட்டணியில் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு மகத்தான வெற்றியை தரும் என்று நான் நம்புகிறேன்.அதற்கான சமிக்ஞைசகள் தான் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையாகும்.

அதிமுக மெகா கூட்டணி அமைத்ததன் காரணமாகவே, திமுக சார்பில் ராகுல்காந்தியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அப்படியான ஒரு அவசியம் திமுகவுக்கு இல்லை. சமீப காலமாக அதிமுக கூட்டணி வேகம் எடுக்கத்திருக்கிறது. அக்கூட்டணி பலமாக இருப்பது போன்று ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதேவேளையில் திமுகவுக்கு புதிய வரவுகள் சமீப நாட்களாக இல்லாதது போன்ற தோற்றம் பொதுமக்களிடம் உள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக தரப்பில் அந்த வேகம் இல்லையோ என்கிற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. அதற்காக திமுக தலைமை கூட்டணிக்காக காத்திருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, தினந்தோறும் அண்ணா அறிவாலயத்தில் திருவிழாவை நடத்த வேண்டும். அத்தகைய திருவிழாவை அதிமுக தொடங்கிவிட்டது. திமுக தலைமை இன்னும் தொடங்காமல் இருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி காங்கிரசிடம், திமுக தலைமை சமரசம் செய்ய வேண்டிய நிலையே இல்லை. எனவே அதிமுக கூட்டணியை பார்த்து திமுக அஞ்சுவது என்பது ஏற்புடையதல்ல.

அதிமுக கூட்டணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் முன்னால் இருந்த சூழலைவிட சற்று மேம்பட்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்துசென்றவர்களை பெரும்பான்மையினராக கொண்ட தினகரன் மீண்டும் இணைந்துள்ளார். அதிமுக பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் அந்த கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துவிட்டது என்றால்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட கட்சிகளாகும். அப்படி பார்க்கையில் அதிமுக கூட்டணிக்கு தரப்படும் முக்கியத்துக்கு நிகரான கட்டமைப்பு அந்த கட்சிகளிடம் கிடையாது.

அதிமுகவை விஜய் விமர்சித்த நிலையில், அவர் மீது அதிமுக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களுடன் கூட்டணிக்கு வராததால் விஜயை, எல்லை மீறி அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள். இது தான் எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம். அவர் வேண்டும் என்றால் ஒருவாறு பேசுவார். வேண்டாம் என்றால் வேறுமாதிரி பேசுவார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்று அறிவார்கள். பாஜக எதிர்பார்த்த அரசியல் நடக்கிறது. அதிமுக வீழ்கிற இடத்தில் விஜய் வந்து உட்கார வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்குமா? என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


