spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநான்கு முனை போட்டியில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு! எஸ்.பி.லக்ஷ்மணன் நேர்காணல்!

நான்கு முனை போட்டியில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு! எஸ்.பி.லக்ஷ்மணன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் அதிமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததன் மூலம்  நான்கு முனை போட்டி உறுதியாவிட்டது. இது ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக அரசியல் கூட்டணி நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தம் போட்ட விஷயத்தில் பிரேமலதா ஏற்கனவே கசப்பான அனுபவங்களை பெற்றவர். யாரிடம் போனாலும் கவனமாக போக வேண்டும். ஆனால் இப்படி பேரங்களை இவ்வளவு வெளிப்படையாக சொல்ல வேண்டுமா? என கூச்சமாக உள்ளது. இருபுறமும் பேசுவதை அவர் வெளியே செல்ல வேண்டியதில்லை. பேச்சை குறைத்தால் கொஞ்சம் சரியாக இருக்கலாம். தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு திமுகவும் மெனக்கெடுகிறது.

ஒருவேளை பிரேமலதா திமுக கூட்டணிக்கு சென்றால்? மருத்துவர் ராமதாசின் நிலை குறித்து கேள்வி எழலாம். ஆனால் அவர் வருவதை விரும்பவில்லை என்று திருமாவளவன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். இருந்தபோதும் கூட்டணி குறித்து திமுக தான் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை பிரேமலதா என்டிஏவுக்கு சென்றுவிட்டால் திமுக அணியில் ராமதாசுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். இல்லாவிட்டால் ராமதாசை தனித்து நிற்க வைத்து, அன்புமணிக்கு பாடம் புகட்டலாம் என்று கூட திமுக நினைக்கலாம்.

அதிமுக – என்.டி.ஏ உடன் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்ததன் மூலம் தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக சிதறுகிறது. அதனால் தான் திமுகவுக்கு சாதமாக பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரசை போக விடாமல் தடுப்பது மட்டும் தான் சவாலானது. தேமுதிகவை கூடுதலாக சேர்க்க முடியுமா? என்று முயற்சிக்கிறார்கள். மற்றபடி திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதேநேரம், அதிமுகவுக்கு தான் கூட்டணியில் கட்சிகளை சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. தேர்தல் வந்ததும் எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், டிடிவி தினகரன், அன்புமணி போன்றவர்கள் வந்துவிட்டனர். கிருஷ்ணசாமியும், தான் என்டிஏவில் தான் இருப்பதாக சொல்லிவிட்டார். எனவே கூட்டணியை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு தான் உள்ளது.

ஓபிஎஸ், பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்று சொல்கிறார். அவர் திமுக கூட்டணிக்கு செல்வார் என்று தோன்றவில்லை. அதேநேரம் அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். குறைந்தபட்சம் என்டிஏவில் சேர்க்க எடப்பாடி சம்மதித்தாரா? என்று தெரியவில்லை. ஆனால் தினகரன், பாஜகவின் சம்மதம் இல்லாமல், ஓபிஎஸ்-ஐ என்டிஏ கூட்டணிக்கு அழைக்க மாட்டார். எடப்பாடி சம்மதித்து போனால் தான் ஓபிஎஸ்க்கு மரியாதை. அப்படி சொன்னால் தான் எடப்பாடி மீதான அந்த சமுதாயத்தினரின் கோபம் குறையும்.

எடப்பாடியும், தினகரனும் ஒருவரை ஒருவர் எதிர்த்தனர். ஆனால் மூன்று பொதுத் தேர்தல்களில் எந்த வெற்றியும் பெற முடியவில்லை. காலம் இருவருக்கும் அதை உணர்த்தியுள்ளது. அது ஓபிஎஸ்க்கும் ஏற்படும். பிரிந்தவர்கள் இணைவது என்பது காலத்தின் கட்டாயமாகும். தற்போதாவது இணைந்தார்களே என்று தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஓபிஎஸ்-ம் அந்த இடத்திற்கு வருவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். விஜய், அதிமுக கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தனர். அவர் வரவில்லை. தற்போது விஜயை போட்டு அடிக்க தொடங்கிவிட்டனர்.

முதலமைச்சர் எந்த தலைவரும் தங்கள் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று ஆறுதல் கலந்த அன்போடு தான் சொன்னார்கள். ஆனால் விஜய், தைரியம் இருந்தால் தன்னை தொடுங்கள் என்று நக்கல் அடித்தார். அதற்காக இன்றைக்கு அதிமுகவினர் போட்டு அடிக்கிறார்கள். அதிமுக ஊழல் கட்சி என்று சொல்வதற்கு விஜய்க்கு ஒன்னே முக்கால் வருடம் ஆகிவிட்டதா? அதற்கு அவர் சொன்ன வியாக்கியானம் ஆட்சியில் இருப்பதால் அவர்களை எதிர்க்கிறோம் என்று சொன்னார். விஜய் தன்னை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவதாக சொல்கிறார். அவர் யாரையும் நம்பி கட்சி தொடங்கவில்லை.

அதேவேளையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதற்கு விஜய் மெனக்கெடுகிறார். அவர்கள் வருவது மாதிரியும் தெரியவில்லை. அதற்கான வாய்ப்பும் குறைவு. அது மட்டும் தான் அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். அதேவேளையில் விஜய், தேர்தலை புறக்கணிப்பதற்கு சாத்தியம் கிடையாது. அதற்காகவா அவர் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து வந்தார்? அதற்கு தகுந்தாற் போல் ஒரு நல்ல சின்னம் கிடைத்திருக்கிறது. அவர் தன்னளவுக்கு உற்சாகமாக களமிறங்கப் போகிறார்.

விஜய்க்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம். முதல் தேர்தலிலேயே அங்கீகாரம் கிடைத்துவிடலாம். விஜயகாந்த், சீமான் போன்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, விஜய்க்கு முதல் தேர்தலிலேயே கிடைக்கும் என்பது என்னுடைய பார்வையாகும். விஜயை வைத்து காங்கிரஸ் பேர வலிமையை அதிகரிக்கும். விஜய் தன்னளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சித்து வருகிறார். எனவே திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ