தேசிய கீதத்தின் அரசியலமைப்பு மரபை சிதைக்கும் ஒன்றிய அரசின் கட்டாய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.![]()
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக “வந்தே மாதரம்” பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என்றும், அந்தப் பாடலின் அனைத்து ஆறு பத்திகளையும் முழுமையாக இசைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரசியலமைப்பு மரபுகளுக்கும், இந்தியாவின் பன்மைச் சமூக இயல்புக்கும் நேர்மாறானது என்பதை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக சுட்டிக்காட்டுகிறது.

தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள், ஆளுநர் உரை, குடியரசுத் தலைவர் உரை உள்ளிட்ட அரசுமுறை நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்த உத்தரவு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுவது, தேசிய கீதத்திற்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள தனித்துவமான உயர்ந்த இடத்தைத் திட்டமிட்ட வகையில் தளர்த்தும் முயற்சியாகவே அமைந்துள்ளது.
1937 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட நான்கு பத்திகள் உட்பட “வந்தே மாதரம்” பாடலின் ஆறு பத்திகளையும் கட்டாயப்படுத்துவது, வரலாற்று உண்மைகளையும் அரசியல் சமரசங்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.
உலக நாடுகளில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் மட்டுமே பாடப்படுவது ஒரு பொதுவான, ஜனநாயக மரபாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் அதுவே அரசியலமைப்புச் சாசனத்தின் அடிப்படையுடன் இணங்கிய நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் அந்த மரபை மாற்றி, உணர்ச்சிவசப்பட்ட வந்தே பாரதம் பாடலை கட்டாயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுவது, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தாது; மாறாக சமூகப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்தும்.
இந்தியா ஒரே சிந்தனை, ஒரே கலாசாரம், ஒரே நம்பிக்கை கொண்ட நாடல்ல. பல்வேறு மொழிகள், மதங்கள், பண்பாடுகள் இணைந்து வாழும் பன்மைச் சமூகத்தின் அரசியலமைப்பு உறுதியே இந்தியாவின் உண்மையான பலம். அந்தப் பன்மையை மதிக்காமல், அரசியல் நோக்கங்களுக்காக அடையாளங்களையும் உணர்வுகளையும் கட்டாயமாக்குவது, அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பாஜக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பெரும் கருத்து மோதலை ஏற்படுத்திய இந்த விவகாரம், 2025 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதை இப்போது நாடு முழுவதும் திணிப்பது, இந்தியாவை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் தள்ளும் அரசியல் சாகசமாகும்.
தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. ஆனால் அந்த மரியாதை கட்டாயத்தின் மூலமாக அல்ல; அரசியலமைப்புச் சிந்தனையின் வழியாகவே உருவாக வேண்டும். கட்டாய தேசியவாதம் ஒருபோதும் உண்மையான தேசிய ஒற்றுமையை உருவாக்கியதில்லை.
எனவே, அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவது மட்டுமே கட்டாயம் என்ற இதுவரை நிலவிய ஜனநாயக–அரசியலமைப்பு மரபை மாற்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
பன்மையை மதிக்கும், அனைவரையும் உள்ளடக்கும் இந்தியாவை சர்ச்சை தேசமாக மாற்றும் முயற்சிகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.
”பொருளாதாரம் ஆயுதமாக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணம்” இந்த ஒப்பந்தமே – ராகுல் காந்தி சாடல்


