2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற முடிவை எங்களால் ஏற்க முடியாது என கூறி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் சிலர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல், தமிழ்மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடும் முடிவை எதிர்த்து கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக அக்கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜு சாக்கோ மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்த முடிவை எதிர்த்து அவர்கள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கட்சி தலைமையுடன் ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களை போன்றே பல மாவட்ட தலைவர் அதிருப்தியில் உள்ளனர். இத்தகைய சூழலில், எங்களால் இதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், 2016 ல் ஜெயலலிதா அவர்கள் 10 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அழைத்த போதும், அந்த முன்மொழிவை நிராகரித்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர். அப்போது எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, தற்போது தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? என கேள்வியை முன்வைத்துள்ளனர்.
1993ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் அரசியலில் பயணித்து, தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளோம் என்றும் அவர்கள் கூறினர். நாங்கள் பலிக்காடாக மாற முடியாது. கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் எடுக்கும் முடிவுகள் தவறான பாதையில் செல்கின்றன. பெரிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சின்னத்தை தவிர்த்து தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
