Homeசெய்திகள்தேர்தல் 2026மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

-

- Advertisement -

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது என பாஜக தேசிய குழு உறுப்பினர் சரத்குமார் கூறியுள்ளாா். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் அ.இ.தி.மு.க. வேட்பாளர்  கணேசனுக்காக பரப்புரை மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

we-r-hiring

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் மக்களைச் சந்தித்து வருகின்றோம். எல்லா இடங்களிலும் மக்கள் எழுச்சியாக இருப்பதை உணர முடிகிறது. இங்கு மட்டுமல்ல, நான் சென்று வந்த ஏழு எட்டு தொகுதிகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. மக்கள் நாங்கள் என்ன பேசுகிறோம், என்ன சொல்ல வருகிறோம் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். 1996-ஆம் ஆண்டு முதல் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த உணர்வை வைத்து நிச்சயமாக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது” என்றார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், “இதில் முரண்பாடு ஒன்றும் கிடையாது. தேசியத் தலைமை என்ன சொல்கிறதோ, அந்தத் திட்டத்தை ஏற்று நாங்கள் நடந்து வருகிறோம். சென்ற முறை நாங்கள் போட்டியிடும் போது இந்தக் கூட்டணி இல்லை, இப்போது இந்தத் கூட்டணியில் இருக்கிறோம். இரண்டுமே பலமான, சிறப்பாகச் செயல்படக்கூடிய கட்சிகள்தான். இவை இணையும்போது தேர்தல் வெற்றி உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “முதலமைச்சராக இருப்பவர் பிரதமருக்கு இது போன்ற கடிதங்களை எழுதலாமா என்பதுதான் எனது முதல் கேள்வி. எதையும் ஜனநாயக முறைப்படி அமர்ந்து பேசித் தீர்க்காமல், போராட்டக் களமாக மாற்றி ஒரு அனுதாப அலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறை  பற்றி அவர்கள் தவறான பரப்புரை செய்கிறார்கள். 39 தொகுதிகள் என்பது 59-ஆக உயருமே தவிரக் குறையாது. விகிதாச்சார அடிப்படையில் பார்த்தாலும் 7.13 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக அதிகரிக்கவே செய்கிறது. தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு வரும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இதைப் போராட்டமாக மாற்றுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் நிர்வாகம் குறித்துப் பேசிய அவர், “2014-ல் பத்தாம் இடத்திலிருந்த இந்தியப் பொருளாதாரத்தை இன்று நான்காம் இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரதமர். கோவிட் காலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் தடுப்பூசிகளைக் கொடுத்து மக்களைக் காப்பாற்றியவர் அவர். காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, இன்று அங்கு சுற்றுலாத் துறை வளர்ந்து 1.8 கோடி பயணிகள் சென்று வருகிறார்கள். இவ்வாறு மக்கள் நலனுக்காக உழைப்பவரைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை விவாதிக்காமல் எரிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய் அரசியல் குறித்து ஒரு நடிகராக உங்கள் பார்வை என்ன என்ற கேள்விக்கு? தான் ஒரு நடிகர் மட்டுமே அல்ல  “முகக் கவர்ச்சி மட்டும் அரசியலுக்குப் போதாது. என் குடும்பப் பின்னணியை பாருங்கள் .என் பெரியப்பா கே.டி.கே. தங்கமணி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகப்பெரிய தலைவர். என் உறவினர்கள் சி.பி. ஆதித்தனார், கே.பி. கந்தசாமி ஆகியோர் திராவிட இயக்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள். நான் 28 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இறங்கி வேலை செய்யத் தெரிந்தவன். தவெக தலைவர் விஜய்யைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை; அவர் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” என்றார்.

இறுதியாக, “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மீண்டும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தோடு பயணிக்கிறோம். ஊடகங்கள் தேவையில்லாத விஷயங்களைக் கேட்காமல், மக்களின் உண்மையான முன்னேற்றத்தைக் கவனிக்க வேண்டும்” என்றார்.

பரப்புரைக்கு அனுமதி வழங்கிய போதும் அவர் ஏன் பரப்பரைக்குச் செல்லவில்லை என்றக் கேள்விக்கு, ”இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்? ஒருவேளை அவருக்கு எழுதி தரும் எழுத்தாளர்கள் ஓய்வெடுக்கலாம் என கிண்டலாக கூறினார்.”

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை  குறித்த கேள்விக்கு, ”அந்த கட்சி என்ன செய்தாலும் நான் பார்ப்பதில்லை, படிப்பதில்லை.”விஜய் யார்? அவருக்கு ஏன் ஒரு பெரிய தலைவருக்கான அந்தஸ்தை ஊடகங்கள் கொடுக்கிறீர்கள்? அவர் இன்னும் தன்னை ஒரு அரசியல் தலைவராக நிரூபிக்கவில்லை. ஊடகங்கள் ஒரு 10 நாட்களுக்கு அவரைப் பற்றிப் பேசாமல் இருந்து பாருங்கள். அவர் ஒரு நடிகராக அரசியலுக்கு வந்திருக்கிறார், வரட்டும். ஆனால், அவர் களத்தில் இறங்கி என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தே அவரைப் பற்றிப் பேச முடியும்” என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணிக்கு அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதை விவாதித்து அதில் உள்ள குறைகளைச் சொல்வதை விட்டுவிட்டு, வெளிநடப்பு செய்வதும் மசோதாவை எரிப்பதும் என்ன நியாயம்? உங்களுக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். ஆனால், நீங்கள் எதற்கெடுத்தாலும் ‘டெல்லி’ மற்றும் ‘மத்திய அரசு நிதி தரவில்லை’ என்றே பேசுகிறீர்கள். பிரதமரின் திட்டங்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் வன்முறை அரசியலில் ஈடுபடுகிறீர்கள்”

டெல்லிக்கும் தமிழ்நாடுக்கும் இடையே போட்டி என ஸ்டாலின் கூறி வருவது குறித்த கேள்விக்கு ? அவர் சொல்வது சரிதான் என்.டி.ஏ.கூட்டணி தலைமை தான் தமிழ்நாட்டில் எடப்பாடியை தேர்ந்தெடுத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலே டெல்லி அதில் இருக்கிறது தானே.அவர் சரியாகத்தான் சொல்கிறார். நீங்கள்தான் தவறாக புரிந்து கொள்கிறீர்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

MUST READ