தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளாா்.
சென்னை தோனம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில், பாஜக சார்பில் வாக்காளர்களிடம் முறைகேடுகள் நடைபெறுகின்றன என குற்றம்சாட்டினார்.
பாஜக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று ரூ.10,000 மதிப்பிலான மாதிரி காசோலைகளை வழங்கி, அதற்காக வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், ZOHO உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 70 லட்சம் ரூபாய் ஒருவருக்கு வழங்கப்பட்டு, அது பாஜகவினரிடம் விநியோகிக்கப்பட்டதாக கூறி, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருமானவரி விவரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.
அத்துடன், அதிமுக சார்பிலும் ரூ.10,000 வழங்கப்படும் என கூறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் பாஜகவின் “B டீம்” போல செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளாா்.
அண்ணாமலை, ” ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரமாட்டார்” என்ற கருத்தை மறுத்த அவர், ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை என்றாலும், இருவரும் தனித்தனியாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் விளக்கமளித்தார்.
அண்ணாமலை கூறிய கருத்துகளை கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி, அவை உண்மையற்றவை என குற்றம்சாட்டினார். மேலும், தாங்கள் அளித்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…
