தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான திமுக, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.
பெரும்பான்மையை நிரூபித்த விஜய்
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆளுநரின் உத்தரவுப்படி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தது. தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். இதன் மூலம் முதல்வர் விஜய் தனது முதல் அரசியல் சோதனையில் வெற்றி கண்டுள்ளார்.

திமுகவின் வெளிநடப்பு
வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்
“இந்த அரசு மக்கள் செல்வாக்கைப் பெற்று அமையவில்லை. ஜனநாயகத்திற்குப் புறம்பான முறையில் கூட்டணிக் கட்சிகளை ஈர்த்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ‘ரீல்’ (Reel) ஆட்சியாக இல்லாமல், மக்களுக்குப் பயனுள்ள ‘ரியல்’ (Real) ஆட்சியாகச் செயல்படுங்கள். இப்போதைக்கு உங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்க நாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை,” என்று விமர்சித்தார்.
அதிமுகவில் பிளவு
வாக்கெடுப்பின் போது அதிமுக உறுப்பினர்களிடையே கடும் மோதல் போக்கு நிலவியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு தரப்பினர் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த உட்கட்சி மோதலால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு
டிவிகே அரசுக்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இறுதியில் 144 வாக்குகள் பெற்று விஜய் அரசு மெஜாரிட்டியை உறுதி செய்தது. அதேசமயம், 22 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர், 5 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்ந்தனர். வாக்கெடுப்பு முடிந்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
“ரீல்ஸ் ஆட்சி வேண்டாம், ரியல் ஆட்சி நடத்துங்கள்” – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!
